பண்டிகைக் கால தளர்வுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

 | 
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆய்வு செய்தபிறகு அவர்களின் கருத்தின்படி முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நவம்பர் 30 வரை ஊரடங்கில் எந்தத் தளர்வுகளும் இல்லை என்றும் முன்பு இருந்த தளர்வுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதே போல் தமிழகத்தில் தியேட்டர்களைத் திறக்க திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அது குறித்தும் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதாகவும் "எதிர்க்கட்சிகள் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று கூறியபோதும் தளர்வுகள் அறிவிக்காமல் கடுமையாக்கப்பட்டது. இதன் விளைவாக எந்த மாநிலத்தை குறிப்பிட்டுக் கூறினார்களோ அந்த மாநிலத்தில் தற்போது அதிகமான தொற்றுகள் உருவாகி உள்ள போதும் தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது" என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காகவும் இன்று மாலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெறும் மருத்துவ ஆலோசனைகளுக்கு பிறகு முதலமைச்சர் பல்வேறு தளர்வுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் பண்டிகை காலங்களில் மக்கள் வெளியில் செல்லும் போது தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து, முககவசங்களை அணிந்து சென்று வந்தால் நம் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.