அதல பாதாளத்தில் விழுந்த கம்யூனிஸ்ட் கட்சி - 5 மாநிலங்களிலும் நோட்டாவுக்கு கீழே ஓட்டு வாங்கிய பரிதாபம்

 | 
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று பல்வேறு ஊடகங்கள் சத்தமாக கூறி வந்தன. ஆனால், பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட காங்கிரஸ் தனியாக நின்ற பா.ஜ.க-விடம் இருந்து வெற்றியை பறிக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றியும் கிடைக்கவில்லை. அதே சமயம் பா.ஜ.க-வுக்கு பெரிய தோல்வியும் கிடைத்துவிடவில்லை என்பதே உண்மையாகும். மிகப்பெரிதாக எதிர்பார்த்த காங்கிரசுக்கு சட்டீஷ்காரில் மட்டுமே ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெற முடிந்தது. ஆனால் ராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் ஆட்சி அமைக்க பிற சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளையே அக்கட்சி நம்பியுள்ளது.
மேலும் மிசோரமில் காங்கிரஸ் தனது ஆட்சியை இழந்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் மிகக்குறைந்த வித்தியாசத்திலேயே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கட்சி. எனவே காங்கிரசுக்கு ஆதரவான அலை எதுவும் வீசிவிடவில்லை என்றும், மோடி சர்க்காருக்கு  எதிரான அலை ஒன்றும் வீசிவிடவில்லை என்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அகில இந்திய கட்சிகளில் ஒன்றான இடதுசாரிகளை 5 மாநிலங்களிலும் வேரோடு மண்ணாக மக்கள் பிடுங்கி எறிந்து விட்டார்கள் என்பதை கீழ் கண்ட முடிவுகள் தெரியப்படுத்தியுள்ளன. அதாவது நோட்டா வாக்குகளுக்கும் கீழான அளவில் வாக்குகளை அந்த கட்சியும், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை பெற்றுள்ளன.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநிலங்களில், சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகபட்சமாக 2.1 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன. 90 தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் 85 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை நிறுத்தியது. எனினும் அக்கட்சிக்கு ஒரு சதவீத வாக்கு கூட கிடைக்கவில்லை. 0.9 சதவீத வாக்குகள் மட்டுமே ஆம் ஆத்மியால் பெற முடிந்தது. இதேபோல சத்தீஸ்கரில் சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை 0.2 சதவீத வாக்குகளே பெற்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெறும் 0.4 சதவீத வாக்குகளே கிடைத்தன. மத்தியப் பிரதேசத்தில் 1.5 சதவீத வாக்குகள் நோட்டாவில் பதிவாகி இருந்தன. இங்கு சமாஜ்வாதி கட்சி 1 சதவீத வாக்கும், ஆம் ஆத்மி 0.7 சதவீத வாக்கும் பெற்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் 1.3 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகின.
இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி கட்சி ஆகியவை முறையே 1.3 சதவீதமும், 0.2 சதவீதமும் வாக்குகள் பெற்றன. ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை 0.4 சதவீத வாக்குகளைப் பெற்றன. தெலங்கானாவில் 1.1 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன. இங்கு தேசியவாத காங்கிரஸ் 0.2 சதவீத வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தலா 0.4 சதவீத வாக்குகளும் பெற்றன.
மிஸோரம் மாநிலத்தில் 0.5 சதவீத வாக்குகள் நோட்டாவில் பதிவாகின. இம் முடிவுகள் கடைசி அஸ்தமனத்தில் இருக்கும் இடதுசாரிகளுக்கு பலத்த அடியை தந்துள்ளது. எனவே மீண்டும் காங்கிரஸ் மீது ஏறி சவாரி செய்யும் முடிவை நோக்கி அந்த கட்சி தள்ளப்பட்டுள்ளது.