உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் சொத்துக்கணக்கு தாக்கல் செய்யவேண்டும்! ஆணைய உத்தரவால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி!

 | 

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. 


இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, 1991 கணக்கெடுப்பின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்த நிலையில், தற்போது 2011 கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல் முடிவானதை அடுத்து களத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து, அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் நின்று வெற்றி பெற்ற அரசியல் கட்சி பிரமுகர்களில் பலர் பல மடங்கு சொத்துக்கள் குவித்துள்ளனர். சாதாரண வார்டு கவுன்சிலர்கள் கூட பல கோடி சொத்துக்களை குவித்ததுடன் ஆடம்பர கார்களில் பவனி வருவதை மக்கள் கண் கூடாக கண்டு வருகின்றனர்.


இவர்கள் பணம் நன்கு செலவு செய்வார்கள் என்பதால் தமிழக அரசியல் கட்சிகள் இவர்களையே மீண்டும் களம் இறக்க முன் வருகின்றன. இவர்களுக்கும் முன் அனுபவம் உள்ளதால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து பதவியை பிடித்துவிடலாம் என்றும் பிறகு பல மடங்கு சம்பாதித்து விடலாம் எனவும்  கணக்கிட்டிருந்தார்கள்.


இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் தங்கள் சொத்துக் கணக்கு மற்றும் குடும்பத்தினரின் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதை அடுத்து அரசியல் கட்சிகளும், அவர்களிடம் டிக்கெட் கேட்கும் பிரமுக வேட்பாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.   


மேலும் வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 16ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலமே உள்ளதால் சொத்துக்கணக்கு தயார் செய்வதில் இவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது என்பதும் குறிபிடத்தக்கது.