ரபேல் போர் விமானக் கொள்முதல், விலை நிர்ணயம் குறித்து விரைவில் நாடாளுமன்றத்துக்குத் தெரிய வரும்: இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

 | 





இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்திலும், விலை விவரங்களிலும் தெரிந்து கொண்டே மக்களைத் தவறாக வழி நடத்துகிறது காங்கிரஸ் கட்சி. நாட்டின் பழமையான கட்சியை நடத்தும் முதல் குடும்பத்தினர், ரபேல் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் கூட காது கொடுத்து கேட்காமலும், மதிக்காமல் செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது.
ரபேல் போர் விமானக் கொள்முதல் விலை குறித்த விவரங்களை மத்திய அரசு மத்திய தலைமைத் தணிக்கைத் துறை அதிகாரியிடம் வழங்கி இருக்கிறது. நாடாளுமன்ற நடைமறையின்படி, சி.ஏ.ஜி குழு சரிபார்த்துவிட்டு அறிக்கையைத் தாக்கல் செய்யும், அதன்பின் அந்த அறிக்கை பொதுக்கணக்குக் குழுவிடம் தாக்கல் செய்யப்படும். பொதுக்கணக்குக்குழு பார்த்த பின்புதான் அது பொது மக்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். இதுதான் நடைமுறை, இந்த நடைமுறைதான் நடந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்கூட இந்த நடைமுறைகள் குறித்தும், விவரங்கள் குறித்தும்தான் விளக்கியுள்ளோம். தகவல் பரிமாற்றத்தில் ஏதேனும் குழப்பம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக நாங்கள் கருதுகிறோம். ஆதலால்தான், நீதிமன்றத்தில் முறையீட்டு மீண்டும் தெளிவுபடுத்தக் கோரியுள்ளோம். நீதிமன்றத்தில் இருந்து பதில் வரும் வரை காத்திருப்போம்.
நாங்கள் எவ்வாறு ரபேல் போர் விமானக் கொள்முதலைச் செய்தோம், விலையை நிர்ணயித்தோம் என்பது விரைவில் நாடாளுமன்றத்துக்குத் தெரிய வரும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


செய்தி மூலம்: தமிழ் இந்து