கச்சா எண்ணெய் இறக்குமதி இறக்குமதியே தேவையில்லை. ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடியை மிச்சபடுத்தும் நிதி ஆயோக்கின் சூப்பர் திட்டம்!

 | 
மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனத்துக்கு மாறினால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு வகையிலான இருசக்கர வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் ஜப்பானின் யமஹா நிறுவனம், தற்போது மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத் தயாரிப்பில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. யமஹா மோட்டார்களின் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் யசுவோ இசிஹரா, "தற்போது இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறோம். மின்சார வாகனத் தயாரிப்பில் எங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. எனவே இதனை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் எந்தவிதச் சிக்கலும் இருக்காது. தற்போது எரிபொருட்களால் இயங்கும் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த மின்சார வாகனங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்திய அரசு நிர்ணயித்துள்ள கோட்பாடுகளுக்குள் இதனை வடிவமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப நல்ல திறன் கொண்ட இயந்திரங்கள் கொண்டு வடிவமைக்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிதி ஆயோக் மற்றும் ராக்கி மவுண்டைன் இன்ஸ்டிடியூட் அறிக்கையில், இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் முழுக்க முழுக்க மின்சார வாகன மயமாக்கல் திட்டத்தின் மூலம் உள்நாட்டு மின்சார வாகன பேட்டரிச் சந்தையின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளுக்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் தரவுப்படி, 17 கோடி இருசக்கர வாகனங்கள் நாட்டில் உள்ளன. அவை தோராயமாக நாள் ஒன்றுக்கு அரை லிட்டருக்கும் சற்று அதிகமாக பெட்ரோல் பயன்படுத்துவதாகக் கணக்கிட்டால் ஆண்டுக்கு ஒரு இருசக்கர வாகனம் 200 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்துகிறது.
அந்த வகையில் 17 கோடி இசக்கர வாகனங்களும் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 400 கோடி லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ₹70 வீதம் கணக்கிட்டால், 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் இதற்கு செலவழிக்கப்படுகிறது - எனவே இருசக்கர வாகனங்கள் அனைத்தும் மின்சாரத்தால் இயங்கும் வகையில் மாற்றினால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறையும் என நிதி ஆயோக் விவரித்துள்ளது.