தமிழக பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி நேரடியாக பேசுகிறார் - 5 பாராளமன்ற தொகுதிகளில் சுமார் 5 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்பு!

 | 
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அகில இந்திய அளவில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்படுகின்றன. பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் நாடு முழுவதுமுள்ள அந்தந்த நாடாளுமன்ற தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தொகுதி நிலவரம் பற்றி கேட்டு தேர்தல் பணிக்கு தயார் படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் வீடியோ கான்ப்ரசிங் மூலம் முக்கிய தொகுதிகளிலுள்ள பூத்கமிட்டி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தி பேசி வருகிறார். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருடன் மனம்விட்டு பேசி வருகின்றனர். "என்னுடைய பூத் .. வலிமையான பூத்" என்கிற இந்த வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சி மூலம் சமீபத்தில் கேரள மாநிலத்திலுள்ள தொண்டர்களுடன் பிரதமர் மோடி பேசி அவர்களை உற்சாகப்படுத்தி பேசினார்.
அடுத்ததாக தமிழகத்தில் முதல்கட்டமாக கோவை, நாமக்கல், சேலம், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளிலுள்ள பூத் கமிட்டி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் வரும் 15-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நேரடியாக பேசுகிறார். பிரதமருடனான இந்த 1 மணி நேர சந்திப்பில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் 1000 முதல் 1200 பூத் கமிட்டி தொண்டர்கள் வரை பங்கேற்கின்றனர். 5 தொகுதிகளிலிருந்தும் சுமார் 5 ஆயிரம் பூத் கமிட்டி தொண்டர்கள் அந்தந்த மாவட்டங்களில் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் "பிரதமர் மோடி அவர்களின் தொண்டர்களுடனான இந்த நேரடி சந்திப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 1.2 லட்சம் தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்காக கட்சிப் பணிகள் முடுக்கிவிடப்படுகின்றன. அந்த அடிப்படையில் பூத் கமிட்டி அளவில் தொண்டர்களை உற்சாகப்படுத்த இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மாநில தலைமையால் வழங்கப்பட்ட 10 நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்து 5 தொகுதிகளை முதல் கட்டமாக அகில இந்திய பா.ஜ.க தேர்வு செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.