கோத்தபய பதவி ஏற்றவுடன், இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல்! வீடுகள் சூறை! சிங்கள இனவெறியர்கள் அட்டூழியம்!

 | 

இலங்கையில் நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில், கோத்தபய ராஜபட்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இலங்கையிலுள்ள அனுராதபுரத்தில் தனது பதவியேற்பு விழாவை நடத்தினார்.


கோத்தபய ராஜபக்சே 52 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இருந்தாலும் தமிழர்கள் பகுதியில் அவருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை. பெரும்பாலான தமிழர்கள் சஜித் பிரேமதாசாவுக்குதான் வாக்களித்துள்ளனர்.


2009-ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் சிங்கள ராணுவத்தை வழிநடத்தியவர் கோத்தபய ராஜபக்சே. அப்போது அவர், ராணுவ செயலாளராக இருந்தார். இவர், இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவின் தம்பி ஆவார்.


இலங்கையில் தமிழினத்தை அழித்து ஒழித்த காரணத்தினால் தமிழர்கள் மத்தியில் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான மனநிலை உள்ளது. அதனுடைய வெளிப்பாடுதான், அவருக்கும் குறைவான வாக்குகள் கிடைத்தது.


இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில்தான் சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடைடே சண்டை நடந்தது. இந்திய வம்சாவளி தமிழர்களான தோட்டத் தொழிலாளிகள் வாழும் மலையகத் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் எந்த சண்டையும் நடக்கவில்லை. இருந்தாலும் அவர்களுடைய பகுதிகளிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது.


இது ஒருபுறம் இருக்க, கோத்தபய ராஜபக்சே தனது பதவியேற்பு விழாவை இலங்கையின் அனுராதபுரத்தில் வைத்ததின் பின்னணியில் வரலாற்று சம்பவம் ஒன்று உள்ளது. அதாவது மன்னராட்சி காலத்தில் இலங்கையின் தலைநகராக அனுராதபுரம் இருந்துள்ளது. கி-மு 140-இல் இலங்கையை ஆண்ட மன்னன் எல்லாளன் என்ற தமிழன். அந்த தமிழ் மன்னனை துட்ட காமினி என்ற சிங்களவன் வெற்றிகொண்டு இலங்கை மன்னராக முடி சூட்டிக்கொண்டார். துட்ட காமினி, தமிழ் மன்னன் எல்லாளனை வெற்றிகொண்டு முடிசூட்டிய அனுராதபுரத்தைதான், கோத்தபய ராஜபக்சே முடிசூட்டிக் கொள்ள தேர்வு செய்துள்ளார். இது அவரது சிங்கள இனவெறியின் உச்சத்தைக் காட்டுகிறது.


அவர் இலங்கை அதிபராக பதவியேற்ற சில மணிநேரங்களில் தமிழர்கள் மீது தாக்குதல் தொடங்கினர் சிங்கள இனவெறியர்கள். காவல் துறையினரும் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனையிலும் வேதனை.


இலங்கையில் கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை என்ற மலைவாழ் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இந்த அட்டூழியம் அரங்கேறி உள்ளது. வீடுகளில் நேற்றிரவு சிங்கள இனவெறி கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. அவர்கள் வீடுகளை சூறையாடியதுடன், அங்கிருந்த பொருள்களையும் உடைத்து துவசம் செய்து உள்ளனர். அங்கிருந்தவர்களை அடித்து உதைத்து உள்ளனர். அவர்களிடம், “நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள்?” என்று கேட்டு அராஜகம் செய்து உள்ளனர்.


தாக்குதலுக்கு உள்ளான தமிழர்கள் சோகத்தில் உள்ளனர். அவர்கள், பாதுகாப்பற்ற சூழ்நிலையை வெளிப்படுத்தி உள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் கூறியதாவது:-


நாங்கள் ஓட்டு போட்டது சிங்கள மக்களுக்குதான். தமிழர்களுக்கு அல்ல. பிரபாகரனுக்கு நாங்கள் ஓட்டு போடவில்லை. ஓட்டையும் போட்டு விட்டு இப்போது உதையும் வாங்கி உள்ளோம். வீட்டுக்குள் புகுந்து குழந்தைகளை உதைத்து, டிவியை சேதப்படுத்தி உள்ளனர். இங்குள்ள மக்களுக்கு மிகப்பெரிய இடஞ்சலை ஏற்படுத்தியுள்ளனர். இதை கேட்பதற்கு யாருமில்லை.


இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள். பார்த்துவிட்டு போய்விட்டார்கள். இப்படி ஒரு பாதுகாப்பற்ற நிலையில் நாங்கள் வாழ்கிறோம். ஓட்டு போடுவதற்கு முன்பு, பஸ் பஸ்சாக வந்தார்கள். ஆனால் இப்போது நாங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறோம். எந்த நாதியும் வந்து பார்க்கவில்லை.


வீடு வீடாக புகுந்து பெண்களையெல்லாம் அடித்திருக்கிறார்கள். அழிச்சாட்டியம் பண்ணிவிட்டு சென்றிருக்கிறார்கள். இதெல்லாம் எங்களுக்கு தேவையா? மலையகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறோம். நாங்கள் ஓட்டையும் போட்டுவிட்டு உதையும் வாங்கி இருக்கிறோம். இதுதான் எங்களின் நிலைமை. எங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பாதுகாப்பு அளித்தால் போதும்.


இவ்வாறு அவர் கூறினார்


அப்போது குழுமி இருந்த பெண்களில் சிலர் கூறியதாவது:-


இனி ஓட்டு கேட்டு யாரும் வரவேண்டாம். நாங்கள் யாருக்கும் ஓட்டு போட மாட்டோம். இதுதான் கடைசி முறை. இனி யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம். நாங்கள் ஓட்டு போட மாட்டோம். நாங்கள் ஓட்டு போட்டுவிட்டு அடிதான் வாங்குகிறோம். இதற்கு நாங்கள் ஓட்டு போடாமலேயே இருந்திருக்கலாம்.


நாங்கள் அட்டை கடி, பாம்புகடி பட்டு, பால் வெட்டி சம்பாதித்து வாழ்கிறோம். படித்தவனும் பால்தான் வெட்டுகிறான், படிக்காதவனும் பால்தான் வெட்டுகிறான். இப்படி வாழும் நாங்கள், எதற்காக அடி வாங்க வேண்டும்? எங்களுக்கு என்ன உதவி செய்திருக்கிறார்கள் இந்த நாட்டில்.?


இவ்வாறு தங்களின் வேதனையை வெளிப்படுத்தியுள்ளர்.
https://youtu.be/76ds6iMJbac


இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்ற சில மணிநேரங்களில் நடந்துள்ள இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதல், ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியிலும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளனர். மற்ற பகுதிகளிலும் தமிழர்கள் மீதும் எந்தநேரத்திலும் தாக்குதல்கள் கட்டவிழ்த்து படலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால்இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.