கோர்ட்டு தீர்ப்பை திரித்துப் பேசியதால் இராகுல்காந்தி மீது அவமதிப்பு வழக்கு ! வரும் 15 ந்தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை

 | 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய பொய்யான கருத்துக்கு எதிராக பாஜக எம்.பி. மீனாட்சி லெகி உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.


ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தீர்ப்பு  குறித்த சீராய்வு மனு வழக்கில் கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களையும், நாளேடு ஆதாரங்களையும் ஏற்கலாம் எனத் தெரிவித்திருந்தது. விரைவில் ரஃபேல் விவகாரத்தில் விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தது.


 அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துமுடித்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ரஃபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, " காவலாளி திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது" என்று தெரிவித்தார்.


நீதிமன்றத்தின் உத்தரவை தனக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி பேசியது, தேசிய நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதனால், பாஜகவைச் சேர்ந்தவரும்,டெல்லி எம்.பியுமான மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.


மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி  இன்று ஆஜராகினார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.


அப்போது, வழக்கறிஞர் முகல் ரோஹத்கி வாதிடுகையில், " உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி தனக்கு ஏற்றார்போல் மாற்றிப் பேசியுள்ளார். உச்ச நீதிமன்றம் காவலாளி திருடன் என்று கூறியதைப் போன்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.


நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று திரித்து, அதற்கு அரசியல் சாயம் பூசி, தனிமனிதரான பிரதமர் மோடியை தாக்கிப் பேச பயன்படுத்தியுள்ளார் " எனத் தெரிவித்தார்.


இதையடுத்து, இந்த மனுவை வரும் 15-ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்தார்.