தெலங்கானாவில் நான்கே மாதங்களில் நான்கு இடங்களை பிடித்து ஒரு அசுர வளர்ச்சி! சந்திரசேகர் ராவை அலற வைத்த பா.ஜ.க-வின் தந்திரங்கள் இதுதான்!!

 | 

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பல்வேறு முனைப் போராட்டங்களை பா.ஜ.க சந்தித்து இன்னும் அதன் புழுதி கூட அடங்கவில்லை. ஆனாலும் மிகப்பெரிய ஒரு வரலாற்றை அந்த கட்சி எழுதி விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. சென்ற லோக் சபா தேர்தலில் வாக்களித்ததை விட பா.ஜ.க-வுக்கு இந்த முறை தேசிய அளவில் 6 சதவீத வாக்குகள் முன்னெப்போதுமில்லாத வகையில் கூடுதலாக கிடைத்துள்ளன. இந்த வெற்றி பா.ஜ.க-வின் எதிர்ப்பாளர்களை திணற அடித்துள்ளது என கூறலாம்.  ஹிந்தி பேசும் முக்கிய மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளம், ஒடிசாவில் பா.ஜ.க-வின்  வெற்றி குறித்து முன்பே பரவலாக அதிகம் பேசப்பட்டாலும், அரசியல் ஜாம்பவான்களின் ரேடார் பார்வையில் கூட தெலங்கானாவில் பா.ஜ.க-வுக்கு இப்படி ஒரு வெற்றி கிடைக்கும் என்பதை யாரும் ஓரளவுக்கேனும் கணிக்காமல் போனது ஒரு வியப்பு தான்.


தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுடன், அனைத்து லோக்சபா தொகுதிகளையும் சந்திரசேகர் ராவ் வென்று அவர் துணை பிரதமராவார் என்று தான் நினைத்தனர். ஆனால், முடிவுகள் வேறு விதமாக வந்து உண்மையில் சந்திரசேகர் ராவை தூக்கமில்லாமல் செய்து விட்டன. சென்ற 2014 தேர்தலில்  இந்த மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் 11-ல் வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவின் TRS கட்சி இந்த முறை 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சென்ற தேர்தலில் இந்த மாநிலத்தில் செகந்திராபாத் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற பா.ஜ.க நடந்து முடிந்த தேர்தலில் 4 தொகுதிகளை வென்றது அனைவருடைய புருவத்தையும் நெரித்துள்ளது. அது மட்டுமல்ல சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை நிஜாமாபாத்தில் தோற்கடித்து உள்ளது பா.ஜ.க. இது பா.ஜ.க-வால் TRS கட்சிக்கு விடப்படும் எதிர்கால சவாலாகவும் பார்க்கப்படுகிறது.


நிஜாமாபாத் தொகுதியில் வெற்றி சூட்சமம்


கவிதாவை தோல்வியுறச்செய்த பா.ஜ.க இந்த தொகுதில் 1952-ல் இருந்து எப்போதும் வெற்றி பெற்றதில்லை. 2014-ஆம் ஆண்டில் இந்த நிசாமாபாத் தொகுதில் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் கவிதா வென்றார். அது மட்டுமல்ல சென்ற டிசம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் டி.ஆர்.எஸ் கட்சி கவிதா வெற்றி பெற்றிருந்த நிசாமாபாத் மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகளை அள்ளி வெற்றி பெற்றது. ஆனால் ஜனவரி மாதத்திலிருந்து அங்கு தூவப்பட்ட தோல்விக்கான விதைகள் விவசாயிகளின் பிரச்சினையால் நன்கு முளைக்கத் தொடங்கிவிட்டன.


மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்று சந்திரசேகர் ராவால் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழி உட்பட எந்த உறுதி மொழியும் காப்பாற்றப்படாததால் அப்பகுதி விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். அது மட்டுமல்லாமல் கவிதாவுக்கு எதிராக, 185 மஞ்சள் விவசாயிகள் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டி இட மனு செய்தனர். இதுவே கவிதாவின் இயலாமையை வெளிப்படுத்தின. முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் தர்மபுரி அரவிந்த் சுமார் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் கவிதாவை தோற்கடித்தார். ஆனால் போட்டியிட்ட மஞ்சள் விவசாயிகள் 94,653 வாக்குகள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பிரச்சினையை முன்கூட்டியே புரிந்து கொண்ட பா.ஜ.க தேசிய பொது செயலாளர் ராம் மாதவ் அங்கு பிரச்சாரம் செய்கையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்றார். மேலும் சந்திரசேகர் ராவ் அரசால் மறுக்கப்பட்ட ரெட் ஜோவாரின் விலையை உயர்த்தவும் பரிசீலிக்கப்படும் என்றார். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக திரும்பினர். மேலும் அங்கு காங்கிரசும் ஒரு பிரதான எதிர் கட்சியாக இருந்தாலும், மோடியின் ஈர்ப்பு மற்றும் பா.ஜ.க விவசாயத்தின் மீது கொண்ட அக்கறை, TRS கட்சி மீது அதிருப்தி கொண்ட விவசாயிகளை பாஜகவின் பக்கம் திருப்பியது. இது பா.ஜ.க வேட்பாளர் தருமபுரி அரவிந்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.


இந்த தோல்வி சந்திரசேகர் ராவின் தேசிய அளவிலான அரசியல் கனவுகளுக்கு மிகப்பெரிய ஆப்பு வைத்துவிட்டது என கூறலாம். அது மட்டுமல்ல நான்கு மாதத்தில் பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் 7% சதவீதத்திலிருந்து 20% ஆக உயர்ந்துவிட்டது. கவிதாவின் தோல்வி அவரது தந்தையின் KCR என்ற இமேஜையும் உண்மையில் வெட்டி சாய்த்துவிட்டது எனவும் கூறலாம்.


சட்டப்பேரவை தேர்தல் முடிந்து வெற்றி பெற்றப்பின் முதல்வர் சந்திரசேகர் ராவின் எண்ணங்கள் மத்தியில் கூட்டாட்சியை நிறுவுவதில் சென்று விட்டன. இது பா.ஜ.க மற்றும் TRS கட்சியிடையில் முணுமுணுப்பை ஏற்படுத்தியது. மேலும் அவருடைய கட்சி பா.ஜ.க-வுக்கு எதிராக பேசி வரும் ஒவாசியின் AIMIM கட்சியின் ஆதரவை பெற்றது முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் நிஜாமாபாத் தொகுதியை பா.ஜ.க-வுக்கு ஆதரவான தொகுதியாக மாற்றி விட்டது. இதற்கு சான்றாக பா.ஜ.க தலைவர் அமித் ஷா அங்கு நிகழ்த்திய பிரம்மாண்டமான பேரணியை கூறலாம். கவிதா அந்த தொகுதியில் செய்த சில கரடுமுரடான நடவடிக்கைகளும் அவருடைய தோல்விக்கு வழி வகுத்தன. அமித் ஷாவின் 7 மாநிலங்களுக்கான மிஷன் திட்டப்படி இப்போது தெலங்கானாவும் பா.ஜ.க-வின் புதிய கோட்டையாக மாறிவிட்டது. இது தென் மாநிலங்களில் கர்நாடகத்துக்கு அடுத்தபடியான நுழைவு வாயிலை ஏற்படுத்தி தந்துள்ளது. காங்கிரஸ் சட்டசபை தேர்தலில் சீர்குலைந்து போன பிறகு, குறிப்பாக நிசாமாபாத் தொகுதியில் தனது டெப்பாசிட்டை பறி கொடுத்தது. மேலும், இந்த தொகுதி ஒரு வித்தியாசமான பாரம்பரியத்தை கொண்டதாகும். சிக்கலாகப் பார்க்கப்பட்ட இந்த இடத்தில் பாஜக வெற்றிக் கொடி நாட்டியிருப்பது பாஜகவின் அரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.


கரீம்நகர் தொகுதியில் பா.ஜ.க-வின் வியூகம் 


அடுத்ததாக கரீம்நகர் தொகுதியில் வெற்றிக்கனியை தட்டிப் பறித்தது மற்றொரு சுவாரசியமான சம்பவமாகும். ஒரு காலத்தில் சந்திரசேகர ராவ் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பவனி வந்த காலத்தில் அவருக்கு மிகவும் கை கொடுத்த தொகுதி கரீம்நகர் தொகுதியாகும். இந்த தொகுதியில் தனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் வேண்டப்பட்டவரான வினோத் குமாரை இந்த தேர்தலில் சந்திரசேகர ராவ் வேட்பாளராக களம் இறக்கினார். வெற்றி பெற்று மத்தியில் தனது தலைமையில் கூட்டாட்சி அமைந்தால் வினோத் குமாரை மத்திய கேபினட் அமைச்சராக்குவது திட்டம். தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக தி.மு.க ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்த போது சந்திரசேகர ராவுடன் வந்தவர்தான் இந்த வினோத் குமார். வினோத் குமார் ஆதரித்து சந்திரசேகர ராவ் பேரணியில் பேசும்போது இங்குள்ள 12 சதவீத முஸ்லிம் வாக்குகளை குறி வைத்து இந்து மதத்தை குறைத்து பேசினார். இது தேர்தல் கமிஷனின் பார்வைக்கு சென்று அவருக்கு எதிராக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சந்திரசேகர ராவின் இந்த செய்கை இந்துக்களுக்கு எதிராக பேசப்பட்டதுடன், இது பா.ஜ.க-வின் ஆதரவு வாக்குகளாக மாறின. மேலும் காங்கிரஸ் அல்லது சந்திரசேகரராவ் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒவைசியின் AIMIM கட்சிக்கு ஆதரவான நிலையையே எடுத்து வந்தன. ஏனென்றால் ஐதராபாத்தில் உள்ள பெரும்பான்மை முஸ்லிம் வாக்குகளை கவர அவர் உதவி வந்தார். அதற்காக முஸ்லிம்களை மட்டும் தாஜா செய்யும் வேலையில் இரு கட்சிகளும் இருந்தன. சந்திரசேகர ராவ் இன்னும் ஒரு படி மேலே சென்று மொகம்மது அலி என்பவரை தனது துணை முதல்வராக்கிக் கொண்டார். இந்த நிலையில் சந்திரசேகர ராவ் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம் பகுதிகளில் பேசிய பேச்சு அவரது மத சார்பற்ற இமேஜுக்கு வேட்டு வைத்ததுடன், கரீம் நகர் தொகுதியில் பாஜகவின் வெற்றிக்கு வழி வகுத்தது. பா.ஜ.க வேட்பாளர் சஞ்சய் குமார் 90,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


சவாலான ஆதிலாபாத் தொகுதி


அடுத்ததாக ஆதிலாபாத் தொகுதியில் பா.ஜ.க வாகை சூடியதும் ஒரு சவாலான சாதனையாகும். ஏனெனில் இந்த மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளும் TRS கட்சியின் கோட்டையாகும். இங்குள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களும் அந்த கட்சியினர்தான். ஆனாலும் பா.ஜ.க அஞ்சவில்லை. தனது சாணக்கியத்தனம் மூலமே அங்கு வெற்றி கண்டது என கூறலாம். இந்த பகுதியில் பிரபலமான காங்கிரஸ் அதிருப்தியாளரான ஆதிவாசி சோயாம் பாபுராவை தனது வேட்பாளராக நிறுத்தியது. பா.ஜ.க-வின் வளர்ச்சி அடிப்படையிலான பிரச்சாரம் மற்றும் மோடி மீதான ஈர்ப்பு 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பா.ஜ.க-வின் வாக்கை அதிகரிக்க செய்தன. TRS கட்சியின் வேட்பாளராகிய நாடாளுமன்ற உறுப்பினர் நாகேஷ் தோல்வி அடைந்ததுடன் கானாப்பூர், நிர்மல் சட்டசபை தொகுதிக்கான இடங்களிலும் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இங்கு பா.ஜ.க வேட்பாளர் ஆதிவாசி சோயாம் பாபுராவ் வெற்றி பெற்றார்.


 கவுரவத்தை காப்பாற்றிய செகந்திராபாத்


தெலங்கானாவில் பா.ஜ.க வெற்றி பெற்ற நான்கு தொகுதிகளில் செகந்திராபாத் ஒரு தனித்தன்மை வாய்ந்த தொகுதியாகும். ஏனெனில் தான் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற பா.ஜ.க-வின் கட்டாயத்துக்கு உட்பட்ட தொகுதியாகும். ஏனெனில் சென்ற 2014 தேர்தலில் பா.ஜ.க அமைச்சர் பண்டாரு தத்தாத்ராயே 2,00,00 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாகும். இந்த முறை, கட்சி கொள்கையின்படி அவருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. இளையவர்களுக்கு வழி விடும் விதத்தில் ஜி.கிஷன் ரெட்டிக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அவர் 62,000 வாக்குகள் வித்தியாசத்தில் TRS வேட்பாளர் டி.சாய் கிரனை தோற்கடித்தார். வெற்றி பெற்ற ஜி.கிஷன் ரெட்டி சென்ற சட்டசபை தேர்தலில் அம்பர்பேட்டை தொகுதியில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர் ஆவார். இந்த தொகுதியின் TRS வேட்பாளரான சாய் கிரண் TRS கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான டி.ஸ்ரீனிவாசயாதவின் மகன் ஆவார். இவர்கள் பரம்பரையாக குடும்ப அரசியல்காரர்கள். இவர்களுடைய கோட்டையை பா.ஜ.க சூறையாடியதற்கு பா.ஜ.க-வின் பிரச்சாரமும்,மோடி அலையின் ஈர்ப்பும், பண்டாருதத்ராயேயின் கடந்த கால சேவைகளும்  காரணங்கள் என கூறப்படுகிறது.


ஓவைசிக்கு தண்ணி காட்டிய பா.ஜ.க வேட்பாளர்கள்


தெலங்கானா பா.ஜ.க வேட்பாளர்களில் யாரும் இதற்கு முன்பாக லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றிருக்கவில்லை. அனைவரும் புதியவர்கள். மேலும்  சென்ற டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அங்கு ஒரே ஒரு தொகுதியை மட்டுமே பா.ஜ.க வென்றிருந்தது. ஆனால், சட்டசபைத் தேர்தலில் பெருவாரியான வெற்றியை பெற்ற TRS இந்த மக்களவை தேர்தலில் குறைந்த பட்சம் 16 எம்.பி-க்களை டெல்லிக்கு அனுப்ப கனவு கண்டது. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது 9 இடங்கள் மட்டுமே. அதுவும் முஸ்லிம் கட்சியான ஓவைசியின் AIMIM ஆதரவுடன் பல தொகுதிகளை இழந்து இந்த குறைந்த அளவிலான தொகுதிகளை பெற்றுள்ளது.


ஐதராபாத்தில் வாக்குகள் எண்ணிக்கையின் போது பா.ஜ.க வேட்பாளர், AIMIM தலைவர் ஒவைசிக்கு கடும் போட்டியாக இருந்தார். பா.ஜ.க வேட்பாளரிடம் பல சுற்றுக்களில் தண்ணி குடித்த ஒவைசி குறைந்த வாக்குகளில் வெற்றி பெற்றார். இது மிக குறைந்த மாதங்களில் பா.ஜ.க மக்களிடம் பெற்ற மிகப்பெரிய செல்வாக்காகும். நிசாமாபாத்தில் பா.ஜ.க பெற்ற வெற்றி சந்திரசேகர் ராவின் குடும்ப ஆட்சிக்கு அடிக்கப்பட்ட கடைசி மணியாகும். கடந்த முறை தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்து ஒரே இடத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்த முறை தன்னந்தனியாகவே நின்று சாதனை படைத்துள்ளது.


இந்துக்கள் அர்ப்பணிப்புடன் ஒரு அமைதி புரட்சி


தெலுங்கு தேசத்துடன் கூட்டணி முறிந்தது பா.ஜ.க-வுக்கு பலனாகவே பார்க்கப்படுகிறது. சென்ற சட்டசபை தேர்தலில் 117 இடங்களில் 100 இடங்களில் டெப்பாசிட்டை இழந்த பா.ஜ.க தற்போது பெற்றுள்ள கணிசமான வெற்றி இந்துக்கள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு வாக்களித்ததையே காட்டுவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க-வின் தெலுங்கானா வெற்றியும் மேற்கு வங்கத்தில் பெற்ற வெற்றியின் மாதிரியை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தெலங்கானாவில் இந்த புரட்சி மிக அமைதியாக நடைபெற்றுள்ளது. தெலங்கானாவில் அடுத்த கட்ட சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களை சந்திக்க 5 ஆண்டுகள் அவகாசம் உள்ளது. அதற்குள் சந்திரசேகர் ராவ் என்ற உயரமான நபரை நேருக்கு நேர் சந்தித்து சவால் விடும் வகையில் ஒரு பிரபலமான மாநில கட்சி தலைவரை தெரிவு செய்யும் கடமையும் பா.ஜ.க-வுக்கு உள்ளது.   


தெலங்கானாவில் சட்டசபை தேர்தலுக்கு பின்பு கடந்த நான்கு மாதங்களாக அக்கட்சி பெற்றுள்ள வாக்கு அளவு தொடர்ச்சியாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு இரட்டை இலக்கத்துடன் அதிகரிக்கும் பட்சத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சி அங்கு எவ்வாறு இருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். தன்னந்தனியே குடும்பத்துடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்து கொண்டு ஆட்டத்தை தொடரலாம் என்று நினைத்த கே.சி.ஆர் தலைமையிலான TRS கட்சிக்கு இனி அச்சுறுத்தல்தான்.