தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை - பசுமை தீர்ப்பாயம் !

 | 
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் ஒருமித்த எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.
நியூட்ரினோ திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று கூறி, திட்டத்தை தொடங்க அனுமதிக்கலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதோடு மட்டுமல்லாது இந்த திட்டத்திற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நாள்தோறும் 340 கி.லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.
மத்திய சுற்று சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்தாலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், விலங்குகள் நலவாரியம் ஆகியவற்றிடம் முறையான அனுமதியைப் பெற்ற பின்னரே திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நில அதிர்வு, தீவிபத்து மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்பான அனுமதிகளையும் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேனியில், நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து  பூவுலகின் நண்பர்கள் அமைப்பு  சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,
வனவிலங்கு வாரியத்தின் அனுமதியின்றி இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது. வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்யமாறும், தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்த பின்னரே இந்த திட்டத்தை செயல்படுத்த  வேண்டும். அதுவரை நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு இடைக்கால தடை  தீர்ப்பளித்தது. மேலும், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அளித்திருக்கும் அனுமதியை ரத்து செய்ய முடியாது என்றும் அந்த  தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
Courtesy and Credits - Seidhipunal