“மக்கள் தொகை கணக்கு எடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?” – தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை வறுத்தெடுத்த தமிழருவி மணியன்!

 | 

“ஒரு வழிபோக்கனின் வாழ்க்கை பயணம்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அந்த புத்தகத்தின் ஆசிரியர் தமிழருவி மணியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


இன்றைக்கு முழுக்க முழுக்க திராவிட முன்னேற்ற கழகமும், காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும், சிறுபான்மை மக்களின் நலன்களுக்காகதான் இருக்கிறார்களா? இந்திய குடிமகன்களாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறேன்? இந்திய மக்கள் தொகை கணக்கு எடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறேன்?


நான் மோடிக்கு வக்காலத்து வாங்குகின்ற வக்கீல் இல்லை. அமித்ஷாவுக்கு பல்லாண்டு பாடுகின்ற மனிதனும் அல்ல. ஆனால் ஒன்றை உங்களிடம் கேட்கிறேன், குடியுரிமை திருத்த சட்டம், மக்கள் பதிவேற்றி சட்டம் இவற்றின் மூலமாக இந்தியாவில் ஒரு இஸ்லாமியன் பாதிக்கப்படுவான், ஒரு கிறிஸ்தவர் பாதிக்கப் படுவார் என்பதை நீங்கள் எனக்கு ஆதாரத்தோடு சொல்லுங்கள், பார்க்கலாம்.


மோடியும், அமித்ஷாவும் இன்று வாழக்கூடிய சிறுபான்மை மக்களில் ஒரு மனிதனையாவது குடியுரிமை இல்லை என்று பறித்தே அகதிகளாக இன்னொரு இடத்திற்கு அனுப்புவார்கள் என்றால், அதை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய முதல் மனிதனாக தமிழருவி மணியன் இருப்பான். ஆனால் அப்படி ஒரு நிலை இருக்கிறதா? நான் திரும்ப திரும்ப படித்து பார்க்கிறேன். படிக்காமல், புரிந்துகொள்ளாமல் நான் எதையும் பேசுவது இல்லை.


இன்றைக்கு எப்படிப்பட்ட அவதூறுகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள்? வேண்டும் என்றே பொய்யை விற்பனை செய்கிறீர்கள். ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறீர்கள். அதில் மாணவர் சமுதாயம் பங்கேற்கிறது. அதில் ஒரு மாணவியை பார்த்து கேட்கிறது ஊடகம். "இந்த ஆர்ப்பாட்டத்தில் நீங்கள் ஏன் கலந்து கொள்கிறீர்கள்?" என்று.


அந்த பேதைப் பெண் சொல்கிறாள், “இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு மோடியும், அமித்ஷாவும் புறப்பட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள். அது நியாயமா” என்று கேட்கிறாள்.


எவன் சொன்னான்? எந்த இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கு போக சொன்னார்கள்? தயவுசெய்து யோசியுங்கள். ஒரு தேசத்தின் பிரச்சனை என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.


எந்த நாட்டிலிருந்து பாதிக்கப்பட்டு, எவன் வந்தாலும் நமது நாட்டில் குடியுரிமை தர வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்களோடு சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன். எனக்கு அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அசாமில் இருப்பவன் அதை ஒப்புக் கொள்ளவில்லையே.


அசாமில் இருப்பவர்களின் பிரச்சனை என்ன? “வங்கதேசத்தில் இருந்து வருபவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் நாங்கள் ஆசாமிக்கு உள்ளே விட மாட்டோம்” என்கிறார்கள். அவர்கள் வெறும் முஸ்லிம்களை மட்டும் சொல்லவில்லை. ஏன் தெரியுமா? “இலட்சக்கணக்கில் இவர்கள் ஆசாமுக்கு உள்ளே வந்துவிட்ட காரணத்தினால், எங்களுடைய மண் அதற்கான பாரம்பரியத்தை பறிகொடுத்து விட்டது, எங்கள் கலாச்சாரத்தை நாங்கள் இழந்து விட்டோம், வேலைவாய்ப்பை நாங்கள் பறிகொடுத்து இருக்கிறோம். வங்கதேசத்தில் இருந்து தொடர்ந்து லட்சக்கணக்கில் வந்து கொண்டிருந்தால், இங்கே இருப்பவனுக்கு எப்படி வேலை கிடைக்கும்? எனவே இந்த குடியுரிமை சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்கிறார்கள்.


யோசியுங்கள். முஸ்லீம் அல்ல, ஒரு இந்துகூட வரக்கூடாது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாம் பற்றி எரிகிறது.


குடியுரிமை சட்டத்தில், “எவன் வந்தாலும் அவர்களுக்கு இடமில்லை” என்று சொன்னால், இந்த நாடே பற்றி எரிகிறது. எங்கு போய் நிற்பது?


திராவிட முன்னேற்றக் கழகமும், கம்யூனிஸ்டுகளும், முற்போக்கு முகத்திரையை முகத்தில் மாட்டிக்கொண்டு முகமூடி மனிதர்களாக வலம் வரக்கூடியவர்களும் எதை சொல்கிறார்கள்? “இஸ்லாமியர்களை முழுவதுமாக ஏன் தவிர்க்கிறார்கள்?” அதுதான் கேள்வி.


இன்றைய நிலைமை என்ன?


“காரைக்குடியில் இருக்கின்ற தண்ணீரை, திருப்பத்தூரில் இருப்பவனுக்கு கொடுக்கமாட்டேன்” என்று ஒருவர் உண்ணாவிரதம் இருந்தாரே. காவிரியை இங்கே வரவழைப்பது பிறகு பார்க்கலாம். காரைக்குடியில் இருப்பவனும் தமிழர், திருப்பத்தூரில் இருப்பவனும் தமிழர். இரண்டு பேரும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். கொடுத்து விட்டால் எங்களுக்கு தண்ணீர் பஞ்சம் வந்து விடும். எனவே நாங்கள் இந்த தண்ணீரை தர மாட்டோம் என்று 20 நாட்களுக்கு மேல் ஒரு மனிதர் உண்ணாவிரதம் இருந்தார்.


அப்படி என்றால் காரைக்குடியில் இருப்பவரே, திருப்பத்தூர்காரனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.


அசாமில் இருந்து, பீகாரில் இருந்து, உத்தரப் பிரதேசத்தில் இருந்து, மத்திய பிரதேசத்தில் இருந்து, வடக்கிலிருந்து சாரைசாரையாக வந்தால் தமிழ்நாட்டில் இருப்பவனுக்கு எங்கே வேலை கிடைக்கும் என்று கேட்கிறார்கள்.


 யோசியுங்கள், பீகாரில் இருப்பவனும் இந்தியன். உத்தரபிரதேசத்தில் இருப்பவனும் இந்திய ன். இந்தியாவில் இருக்கக்கூடிய இவர்களில் ஒரு சிலர் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்தால், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைக்கு பாதிப்பும் வந்து விடும் என்று நினைக்கிறார்கள்.


 உலகம் சுருங்கிவிட்டது நண்பர்களே. அனைவருமே சுயநலத்தில் சுருங்கி விட்ட பிறகு, இந்தியாவில் உள்ள அனைத்து வாசல்களையும் அகலமாக திறந்து வைத்து, “உலகம் முழுவதும் இருக்கக்கூடியவர்கள் எல்லாரும் உள்ளே வாருங்கள்” என்று எப்படி சொல்ல முடியும்? அப்படி உள்ளே வந்தால் இங்கே இருப்பவனுக்கு எப்படி வேலை கிடைக்கும்?


குடியுரிமை சட்டம் இல்லாத நாடு எது? இந்திய குடியுரிமை சட்டத்தில் என்ன பிரச்சனை?


இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.