தூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு? ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்! - அலசி ஆராயப்பட்ட பிரத்யேக தகவல்கள்!

 | 

திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியாய் இருந்து 15-வது மக்களவை பொது தேர்தலுக்கு தொகுதி மறு சீராய்வின் படி திருச்செந்தூர் பெயர் மாற்றம் ஆகி முத்து நகரான தூத்துக்குடி தொகுதியாக பரிணாமம் பெற்றுள்ளது.


தனி மாவட்டம், தனி மாநகராட்சி, தனி பாராளுமன்ற தொகுதி என்று இம்மண்ணின் மண்வாசம் பெரிதாக வீசத் தொடங்கியுள்ளது. வறண்ட பூமியாக வறுமையோடு காலம் தள்ளிய இப்பகுதி தனி மாவட்டமாக்கப்பட்ட பின் பணமழை பொழிய தொடங்கி எங்கும் அமைதியாக உழைப்பை, உயர்வை நோக்கி இம்மாவட்டம் தனி பாதையில் பயணத்தை தொடங்கியுள்ளது. இத்தொகுதியின் எம்.பி-யாக வருவதற்கு அனைத்து கட்சியிலும் ஆளாளுக்கு முட்டி மோதி வருகின்றனர்.


கடந்த தேர்தல் மற்றும் தொகுதி குறித்த அறிமுகம்


இப்பாராளுமன்ற தொகுதியில் விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டபிடாரம், கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.


பல்வேறு சமூகத்தினர்


தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு
சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். இந்துக்கள் 74 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்கள் 21 சதவீதம் பேரும், முஸ்லிம்கள் 5 சதவீதம் பேரும் உள்ளனர்.


சாதிவாரியாக எடுத்துக் கொண்டால் நாடார்
சமுதாயத்தினர் 32 சதவீதம், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 18 சதவீதம்,
நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 11 சதவீதம், மீனவர்கள் 9 சதவீதம், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 6 சதவீதம் என்ற அளவில் உள்ளனர். ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 6 சதவீதம் பேரும், பிள்ளைமார் வகுப்பினர் 6 சதவீதம் பேரும், கோனார் சமூகத்தினர் 3 சதவீதம் பேரும், பிராமணர் வகுப்பினர் 2 சதவீதம் பேரும், இதர வகுப்பினர் 7 சதவீதம் பேரும் உள்ளனர்.


இதுவரையில் பெறப்பட்ட வெற்றிகள்


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை : 9,49,153.  1971-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற தி.மு.க அதன் பின்னர் 33 ஆண்டுகளுக்குபின் 2004-ல் இத்தொகுதியில் வெற்றி பெற்றது. தென் தமிழகத்தின் காங்கிரஸ் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட தொகுதிகளில் இதுவும் ஒன்று ஆகும். தி.மு.க - அ.தி.மு.க ஆகிய இரு மாநில கட்சிகளும் நேருக்கு நேர் மோதிய தொகுதி இது. வெங்கடேச பண்ணையார் அ.தி.மு.க ஆட்சியில் என்கவுண்டர் செய்யப்பட்டதால் நாடார் சமூக மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பை தி.மு.க தனக்கு சாதமாக்கி அவரது மனைவி ராதிகா செல்வியை வேட்பாளராக்கி களம் இறக்கியது இந்த தொகுதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுவரை எம்.பி ஆக இருந்தவர்கள்


1957 - துரைப்பாண்டியன் (சுயே)


1962 - கிருஷ்ணம்மச்சாரி (காங்)


1967 - சந்தோசம் (சுதந்திரா கட்சி)


1971 - சிவசாமி (தி.மு.க)


1977 - கே.டி. கோசல்ராம் (காங்)


1989 - தனுஷ்கோடி ஆதித்தன் (காங்)


1998 - ராமராஜன் (அ.தி.மு.க)


2004 - ராதிகா செல்வி (தி.மு.க)


2009 - ஜெயதுரை (தி.மு.க)


2014 - ஜெயசிங்
தியாகராஜ் (அ.தி.மு.க)


இந்த முறை போட்டியிடும் முக்கிய கூட்டணி வேட்பாளர்கள்


தி.மு.க கூட்டணி சார்பாக மூத்த அரசியல் தலைவர் கலைஞரின் மகளும்,  தி.மு.க மாநில மகளிரணி தலைவி, மேலவை உறுப்பினர் போன்ற பெரிய அரசியல் பின்புலம் கொண்டவருமான கனிமொழி போட்டியிடுகிறார் என்று கூறப்படுகிறது.


அ.தி.மு.க கூட்டணியில்  அங்கம் வகிக்கும் பா.ஜ.க சார்பாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அ.ம.மு.க கூட்டணி சார்பாக வேட்பாளர் யார் என இன்னும் அறிவிக்கவில்லை. அனேகமாக அ.ம.மு.க தென்மண்டல பொறுப்பாளர், கடம்பூர் மாணிக்கராஜ் வேட்பாளராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆகவே தூத்துக்குடியை பொறுத்துவரை மும்முனை போட்டியே  நிலவும் என்று கூறலாம்.


போட்டியிடும் கட்சிகளின் பலம்-பலவீனத்தை பார்ப்போம்:


தூத்துக்குடி தி.மு.க கூட்டணியின் பலம்


மக்களிடையே
நல்ல அறிமுகம் உள்ள உதயசூரியன் சின்னத்தின் வேட்பாளர் களமிறங்குவது.


கடந்த பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நின்று 60,000 ஓட்டுகள் வரைபெற்றவர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் சண்முகம். (போன முறை இவருக்கு இவரது காங்கிரஸ் கட்சியின் ஓட்டுகளை விட அவரது சொந்த சாதி (வெள்ளாள பிள்ளைமார்) ஓட்டுகளே அதிகம் விழுந்தன.


கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து நின்றால் 40,000 ஓட்டுகள் வரை வாங்க கூடிய தொகுதி தூத்துக்குடி பாராளமன்றம்.


இஸ்லாமிய, கிறிஸ்த்தவர்கள் ஓட்டுகள் பலம் மற்றும் தூத்துக்குடி, திருச்செந்தூர் இரண்டு தொகுதிகளில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இருப்பது.


கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.தி.மு.க சார்பாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நின்ற ஜோயல் 1,50,000 ஆயிரம் ஓட்டுகள் பெற்றார். இவர்கள் தற்போது தி.மு.க அணியில் இருக்கின்றனர்.


தூத்துக்குடியில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியின் பலம்


ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி என இரண்டு தொகுதிகளில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இருப்பது.


ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் MLA கள் தினகரன் பக்கம் சாய்ந்தாலும் இங்கேயும் அ.தி.மு.க பலம் பொருந்தியதே.


தே.மு.தி.க  தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 45,000 ஓட்டுகள் வரை பெற கூடிய கூட்டணி.


புதிய தமிழகம், பா.ம.க, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுக்கும் 70,000 ஓட்டுகள் வரை பெற கூடிய அதிக பலம் உண்டு.


தினகரனின் அ.ம.மு.க கூட்டணியை தூத்துக்குடியில் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் தினகரன் கூட்டணி தூத்துக்குடியில் தோற்கும் கூட்டணி தான்.


தனித்து பார்த்தால் தி.மு.க-வின் பலம்


தூத்துக்குடியில் பெரும்பான்மை மக்களால் அறியப்பட்ட வேட்பாளர் கனிமொழி.


தூத்துக்குடியில் அதிகம் வென்ற கட்சி, இரண்டு எம்.எல்.ஏ-க்கள்,  தூத்துக்குடியில் மீதமுள்ள  4 தொகுதிகளிலும் இரண்டாம் இடம் பிடித்த கட்சி என்ற பலம்.


ஊராட்சி சபை கூட்டங்கள் மூலமாக தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே துவக்கியது கூடுதல் பலம்.


தி.மு.க-வின் பலவீனம்


மத்திய அரசு கொண்டு வந்த 10% பொருளாதார இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசி, தி.மு.க வழக்கும் தொடுத்தால் தூத்துக்குடியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட வெள்ளாள பிள்ளைமார், இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாயுடு, ரெட்டியார்கள் தி.மு.க மீது கடுங்கோவத்தில் உள்ளனர்.


தேவேந்திர குல வேளாளர் பெயர் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வழங்குவோம் என்று கூறியது.


ஊழல் கட்சி தி.மு.க என்ற எண்ணம் மக்களிடையே இன்னும் புரையோடி உள்ளது.


தி.மு.க-வின் மாபெரும் தலைவர், கனிமொழி வெற்றி பெற்றால் கட்சி பணியை மட்டுமே பார்ப்பார் தொகுதி பிரச்சனைகளை கண்டு கொள்ள மாட்டார் என்ற மக்களின் ஐயம்.


மதுவை ஒழிப்போம் என்றது பழைய கோஷமாகி போனதால் அது தி.மு.க-வினரே மதுக்கடைகளை வைத்து கொண்டு மதுவை ஒழிப்போம் என்றதை மக்கள் நம்ப தயாராக இல்லை.


"மத்திய பா.ஜ.க ஆட்சிக்கு வந்து விடும் இந்த முறையும், எனில் கனிமொழியை தேர்ந்தெடுத்து என்ன பண்ண போகிறோம்?" என்ற மக்களின் ஆழ்மன எண்ணம்.


பல்வேறு ஊராட்சி சபை கூட்டம் நடத்திய தி.மு.க தூத்துக்குடியின் பொருளாதார, விவசாய வளர்ச்சியை பற்றி பேசாமல் எதிர்கட்சிகளை குறை சொல்வதையே தி.மு.க கொண்டியிருப்பதால் அதுவே பலவீனம்.


தனித்து பார்த்தால் பா.ஜ.க-வின் பலம்


மதுரையில்
இருந்து விளாத்திகுளம் வழியாக தூத்துக்குடி வருவதற்கான இரயில் திட்டம் நல்ல
வரவேற்பை பெற்றுள்ளது.


மத்திய பா.ஜ.க மோடி அரசு பாரத மீனவர்கள் பிரச்சனையில் நடந்து கொண்ட விவாதம் கணிசமாக வாழும் மீனவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே பெற்றுள்ளது.


இலவச கேஸ் இணைப்பு, இலவச கழிப்பறை, பயிர் காப்பீட்டு திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தூத்துக்குடியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்த திட்டம் என பல்வேறு வளர்ச்சி பணிகளால் பா.ஜ.க மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.


கோவில்பட்டி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் மணல் திருட்டு, கோவில் சிலை திருட்டுகளுக்கு எதிரான போராட்டம் , ஆக்கிரமிப்பு அகற்றும் போராட்டம், தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க மகளிரணி தலைவி  நெல்லையம்மாள் அய்யாகண்ணுவை விரட்டியடித்த நெல்லையம்மாள் பெண்மணியின் தைரியம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


கயத்தார் பகுதிகளில் கிறிஸ்த்துவ மத பிரச்சாரத்திற்கு எதிராக இந்து முன்னணியினர் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டது. இந்து முன்னணி கேம்ப் கயத்தாரில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் கேம்ப் தூத்துக்குடியில் நடைபெற்றது. ஆண்டாள் சர்ச்சையில் தூத்துக்குடியில் பெருங்குளம் ஆதீனம் தலைமையிலும், கோவில்பட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தலைமையிலும் நடைபெற்றது போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


பா.ஜ.க-வின் பலவீனம்


ஸ்டெர்லைட் விவகாரம் போன்ற ரொம்ப குறைவான பலவீனம் மட்டுமே  பா.ஜ.க-விற்கு உள்ளது. அதுவும் தற்போது ஸ்டெர்லைட் போராட்டங்கள் திட்டமிட்ட சதி என்பது அம்பலமாகுவதால் பெரிதாக பா.ஜ.க-விற்கு எதிரான தாக்கம் இல்லை என்றே சொல்லலாம்.


தி.மு.க விட பா.ஜ.க-வின் பலம் அதிகமாகவும்,  பலவீனம் குறைவாகவுமே உள்ளது.


தூத்துக்குடியில் சாதி ரீதியான மனநிலை தி.மு.க மீது


பலம்


கனிமொழி ஒரு தெலுங்கு சின்னமேள(இசை வேளாளர்) சாதியை சார்ந்தவர் என்பதால் தூத்துக்குடியில் இரண்டாவது பெரிய தெலுங்கு சாதிகளான நாயுடு, ரெட்டியார்கள், அருந்தியர் மத்தியில் சிறிதளவு வரவேற்பை பெற்றுள்ளது.


பலவீனம்


10% பொருளாதார இடஒதுக்கீட்டிற்கு எதிராக தி.மு.க செயல்படுவதால் முற்பட்டோர் வகுப்பில் உள்ள தூத்துக்குடியில் மூன்றாவது மக்கள் தொகையில் உள்ள வெள்ளாள/ வேளாள பிள்ளைமார் மத்தியில் தி.மு.க-விற்கு கடுகளவிற்கு கூட மதிப்பில்லை.


பிரதான இரு கட்சியினர் சார்பாக கடந்த இரண்டு முறை தூத்துக்குடியில் மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள நாடார்களுக்கே சீட் வழங்கின. ஆனால் இந்த நாடார் அல்லாத கனிமொழிக்கு சீட் கொடுக்கப்பட்டதால் நாடார்கள் ஆங்காங்கே தி.மு.க-விற்கு எதிராக போஸ்டர் அடித்து ஒட்டி வருவது கனிமொழிக்கு பெரும் பின்னடைவு.


தாழ்த்தப்பட்ட பட்டியல் இனத்தை சார்ந்த பள்ளர் சமூகத்திற்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வழங்கும் என்றது தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை மாறாக வேளாளர் என்பது எங்களுடைய சாதி பெயர் அதை எப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்குவோம் என்கிறீர்கள் என்று வெள்ளாள/வேளாள பிள்ளைமார், முதலியார், செட்டியார்  சாதியை சார்ந்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் தி.மு.க-விற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


வெள்ளாளர்களை வேளாளர் பெயர் விஷயத்தில் சமாதானப்படுத்த நினைத்த தூத்துக்குடி கீதா ஜீவன் M.L.A அவர்களின் போன் உரையாடல் பெரியதாக வெள்ளாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் இடையே தி.மு.க-விற்கு எதிரான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


சாதி ரீதியாக பா.ஜ.க


பலம்


தூத்துக்குடி மண்ணிற்கு சொந்தகாரியாக இல்லாவிட்டாலும் தமிழிசை சவுந்தராஜன் தங்களது சொந்த சாதி என்பதால் நாடார்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.


நாடார் ஓட்டு நாடாருக்கே என்று தூத்துக்குடியில் நாடார் சங்கங்கள், அமைப்புகளின் சுவரோட்டிகள் தமிழிசைக்கு பலத்தை ஏற்படுத்தியுள்ளது.


தேவேந்திர குல வேளாளர் பெயர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என தொடர்ந்து பா.ஜ.க பட்டியல் இன பள்ளர் மக்களுக்கு ஆதரவாக இருந்தாலும் அது  தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பா.ஜ.க-வின் செல்வாக்கிற்கு பெரிய வரவேற்பு இல்லாவிட்டாலும் சிறிதளவு ஆதரவை தந்துள்ளது.


முற்பட்ட பிரிவினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியதால் பெரும்பான்மை வெள்ளாளர்கள், நாயுடு, ரெட்டி, பிராமணர்கள் மத்தியில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தி அது பா.ஜ.க-வின் பலத்தை அதிகப்படுத்தியுள்ளது.


பலவீனம்


தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க பா.ஜ.க உறுதுணையாக இருப்பது வெள்ளாள/வேளாள பிள்ளைமார், முதலியார், செட்டியார்கள் மத்தியில் கடும் கோபத்தை பா.ஜ.க மீது திருப்பியுள்ளது.


தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்கினால் அ.தி.மு.க கூட்டணிக்கு சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி படத்துடன் கூடிய சுவரோட்டிகள் பிரச்சனையை கிளப்பியுள்ளது. தாழ்த்தப்ட்ட மக்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என கோவில்பட்டியில் வ.உ.சி பெயரால்  நடந்த பொதுக்கூட்டம், தூத்துக்குடியில் நடக்கவிருக்கும் போராட்டத்தால் பா.ஜ.க-விற்கு பாதகமே


இறுதியாக.


ஆக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் எல்லா பிரச்சனையையும் ஆய்ந்து எடுத்து பார்த்தாலும், போட்டி என்னவோ தி.மு.க கூட்டணிக்கும் அ.தி.மு.க கூட்டணிக்கும் தான், தினகரனின் அமமுக-விற்கு தூத்துக்குடியில் வேலையே இல்லை.


கனிமொழி மற்றும் தமிழிசை இடையே மிகக்கடுமையான போட்டி நிலவுகிறது. மக்கள் நல பிரச்சனையை விட வழக்கம் போல தென் தமிழகத்தில் சாதி பிரச்சனையே அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது.


தேர்தலுக்கு முன் தாழ்த்தப்பட்ட பள்ளர் மக்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்கப்பட்டு விட்டால் வெள்ளாள பிள்ளைமார்களின் ஓட்டு பா.ஜ.க-விற்கு எதிராக திரும்பி தமிழிசைக்கு பாதகமாக திரும்பி விடும்.


தே.மு.தி.க அ.தி.மு.க கூட்டணியில் இணைந்தால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு தூத்துக்குடியில் அதிகரிக்கும்.


ஸ்டெர்லைட் விவகாரம் மூலம் தனித்து நிற்கும் ஓட்டுகள் நாம் தமிழர் கட்சிக்கு சென்று அது தி.மு.க-வின் ஓட்டு பிரித்து அளித்து தமிழிசைக்கு சாதமாக அமையும்.


கடைசி நேர பணப்பட்டுவாடா, வயல்வெளிகளில் வேலை செய்யும் பெண்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்பது, கண்மாய் வெட்டு என தூத்துக்குடி லோக்கல் பாஷையில் அழைக்கப்படும் கிராமப்புற வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களின் இடத்திற்கு நேரடியாக சென்று ஓட்டு கேட்பது, உப்பளத்தில் வேலை பார்ப்பவர்களிடம் ஓட்டு கேட்பது, பனை மர தொழிலாளர்களிடம் ஓட்டு கேட்பது, கடலை மிட்டாய், தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களிடம் ஓட்டு கேட்பது போன்றவை கடைசி நேர வெற்றியை தீர்மானிக்கலாம்.


தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் தயாரிக்க தமிழக அரசு அனுமதி அளித்து போல் பனை மரத்தில் இருந்து கள் இறக்க அல்லது பாடம் செய்யப்பட்ட கள் இறக்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆவண செய்யும் கூறும் கூட்டணிக்கும் அதன் பலம் அதிகரிக்கலாம்.


நகர மக்களை விட கிராமப்புற மக்களே தூத்துக்குடியில் வெற்றியை தீர்மானிக்கின்றனர். வைப்பார், ஆத்தூர், ஏரல், எட்டயாபுரம் பகுதிகளில் ஆற்று மணல் கடத்தல் விவகாரம் பா.ஜ.க-விற்கு சாதகமாகவும், தி.மு.க-விற்கு எதிராகவும் திரும்பி நிற்கிறது.


பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தநாத் போன்றோர் தூத்துக்குடி பிரச்சாரத்திற்கு வந்தால் தமிழிசை வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். ஆகமொத்தம் தூத்துக்குடியை பொறுத்தவரை தமிழிசை மற்றும் கனிமொழிக்கு இடையே பாதிக்கு பாதி வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது. தூத்துக்குடி என்றும் அல்லாமல் இந்த முறை கடைசி நேர திக் திக்கில் சிக்கி கொண்டது.