Top
undefined
Begin typing your search above and press return to search.

கோவிந்தா கோவிந்தா என்று விண்ணை பிளக்கும் கோஷத்துடன் நடைபெற்ற ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா

கோவிந்தா கோவிந்தா என்று விண்ணை பிளக்கும் கோஷத்துடன் நடைபெற்ற ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா

By :

  |  13 May 2018 9:30 AM GMT

வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் சித்திரைத் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் பெருமாளின் திரு வீதி உலா ந‌டைபெற்றது. முக்கிய நிகழ்வாக இன்று ரங்கநாதரின் தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா கோவிந்தா என்று விண்ணை பிளக்கும் கோஷத்துடன் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆயிரம் ஆண்டுகளையும் கடந்தது ஸ்ரீரங்கத்தின் சித்திரை திருவிழாவின் மகிமை. நம்பெருமாள் முகலாயர்கள் படையெடுப்பின் போது 48 வருடங்கள் வெளியில் இருந்து 1371-ல் மீண்டும் ஸ்ரீரங்கம் எழுந்தருளினார். விஜயநகரப் பேரரசின் சங்கமகுல மன்னனின் இரண்டாம் ஹரிஹரன் மகன் விருப்பாஷன உடையார் ஸ்ரீரங்கத்தின் சிற்றரசனாக நியமிக்கப்பட்டார். ஸ்ரீரங்கத்தின் பொருளாதாரம் மிக பாழ்பட்டு கிடந்த நேரமது. விருப்பாஷன உடையாரின்  பெயரால் 1383-ம் ஆண்டு சித்திரை மாதத்தில் சித்திரைத் தேரோட்டத்தை ஏற்படுத்தி வைத்தார்.
இவரது பிரதானிகள் மற்றும் அமைச்சர்கள் முத்தரசர் விட்டப்பர், சோமநாத தேவர், தேவராஜர் உள்ளிட்டோர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கொடை அளித்துள்ளனர். விருப்பண்ண உடையார் காலத்து கல்வெட்டுகளில் ஆய்வு செய்திடும் போது ஸ்ரீரங்கம் பெரிய கோயிலை புனரமைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெளிப்படுகின்றன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருநாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து ஆண்டுதோறும் நம்பெருமாள் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை(பட்டு பரிவட்டங்கள்) வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு நம்பெருமாள், தாயாருக்கு வஸ்திர மரியாதை கொண்டு வரப்பட்டு வஸ்திரம் மற்றும் மங்கல பொருட்கள் ரெங்கவிலாச மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு சகல மரியாதைகளுடன் வலம் வந்தது.
Reference : http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20908
Next Story