Top
undefined
Begin typing your search above and press return to search.

நீட் தேர்வும், முடிவுகளும் - தமிழகத்தில் எத்தனை மருத்துவ சீட்டுகள் உள்ளன?

நீட் தேர்வும், முடிவுகளும் - தமிழகத்தில் எத்தனை மருத்துவ சீட்டுகள் உள்ளன?

By :

  |  5 Jun 2018 1:12 AM GMT

கடந்த மாதம் நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டு வந்தனர். இதில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தங்களது பொருளாதார செல்வாக்கை பயன்படுத்தி, தனியார் கல்லூரிகளில் சேர்ந்தனர். அதனால், டாக்டர்களின் தகுதியும், திறமையும் கேள்விக்குறியானது. உயிரை காப்பாற்றும் புனித தொழிலான மருத்துவத்தில், தரத்தை உறுதி செய்யும் வகையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் நுழைவுத் தேர்வை மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமல்படுத்தியது. இதற்கு, தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 'நீட் தேர்வால், தமிழகத்தில் சமூக நீதி பாதிக்கப்படும். தமிழக மாணவர்களால், மருத்துவம் படிக்க முடியாது; பிற மாநில மாணவர்கள், தமிழக மாணவர்களுக்கான இடங்களை அபகரிப்பர்' என்று மத்திய அரசுக்கு எதிராக, தீவிர பிரசாரம் செய்தன. இப்பிரச்னை, உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதும், 'நீட் தேர்வு கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட, அனைத்து மாநிலங்களுக்கும், நீட் தேர்வு கட்டாயமானது.நாடு முழுவதும், தேர்வு எழுதிய, 12.69 லட்சம் பேரில், 56 சதவீதமான, 7.14 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் எத்தனை மருத்துவ சீட்டுகள் உள்ளன?
தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில், 85 சதவீதம், நீட் தேர்ச்சி பெற்ற, தமிழக மாணவர்களுக்கே வழங்கப்படும். மீதம் 15 சதவீத இடங்கள் தேசிய கலந்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வெளி மாநில மாணவர்கள் சேரலாம். இதே போல், நம் மாணவர்களும் வெளி மாநிலங்களில் இந்த 15 சதவீத வெளி மாநில ஒதுக்கீட்டில் பயன் பெறலாம்.
தமிழக மாணவர்களுக்கு என உறுதி செய்யப்பட்டுள்ள இந்த 85 சதவீத இட ஒதுக்கீட்டில், தோராயமாக, மருத்துவ எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு - 3,894 இடங்களும், பி.டி.எஸ். பல் மருத்துவ படிப்புக்கு - 1,880 இடங்களும், இந்த ஆண்டு முதல், நீட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள இந்திய மருத்துவமான - ஆயுஷ் படிப்புகளுக்கு - 1,696 இடங்களும் உள்ளன. எனவே, தமிழக ஒதுக்கீட்டில், மொத்தம், 7,470 மருத்துவ இடங்கள் உள்ளன.
தமிழகத்தில், நிகர்நிலை பல்கலைகளில், 1,349 மருத்துவ இடங்கள் உள்ளன. அவற்றுடன், அகில இந்திய ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ். - 456 மற்றும் பி.டி.எஸ். - 30 இடங்களையும் சேர்த்து, 1,835 இடங்களிலும், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தமிழக மாணவர்கள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த மத்திய அரசு ஒதுக்கீட்டிலும் சேர முடியும்.
தமிழகத்தில், 1.14 லட்சம் பேர், நீட் தேர்வை எழுதினர். அவர்களில், 45,336 பேர், தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். அதாவது, தேர்வு எழுதியோரில், 40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கு, தமிழக அரசின் சார்பில், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிள் மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் வாயிலாக, கவுன்சிலிங் நடத்தப்படும். தமிழகத்தில் மருத்துவத்திற்கு இருக்கும் 7,470 இடங்களை விட, ஆறு மடங்கு அதிகமாக, 45,336 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது போட்டியில் உள்ளனர்.
கட் ஆப் மதிப்பெண்
நீட் தேர்வில் மருத்துவ இடங்களில் சேருவதற்கான கட் ஆப் மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு - 119 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சமாக - 107 மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் - 96. நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவில் எந்த கல்லூரியிலும் மருத்துவ படிப்பில் சேர தகுதியானவர்கள், நீட் தேர்வில் தகுதி பெறாத எந்த மாணவரும் எவ்வளவு கோடி செலவு செய்தாலும் மருத்துவ படிப்பில் சேரவே முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
Next Story