Top
undefined
Begin typing your search above and press return to search.

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயில இருக்கும் அரசு பள்ளியில் படித்த ஹோட்டல் காவலாளியின் மகள்

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயில இருக்கும் அரசு பள்ளியில் படித்த ஹோட்டல் காவலாளியின் மகள்

By :

  |  6 Jun 2018 6:39 AM GMT

தமிழகத்தில், NEET தேர்வு குறித்த பல தவறான தகவல்களை சில அரசியல் கட்சிகளும், சமூக ஊடக பக்கங்களும் தொடர்ந்து பரப்பிக் கொண்டு வருகின்றன. இது போன்ற தவறான தகவல்கள், மாணவர்களை பீதி அடையச் செய்வதுடன், அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்குகின்றன. NEET தேர்விற்கு எதிரான தவறான பரப்புரையை முறியடித்து காட்டும் வகையில், கோவையை சேர்ந்த ஹோட்டல் காவலாளியின் மகள் சாதித்துக் காட்டியுள்ளார்.
கோவை சொக்கம்புத்தூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார், தனியார் ஓட்டலில் காவலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களின் மகள் அழகுலட்சுமி, எம்.பி.பி.எஸ்., படித்து டாக்டராக வேண்டும் என்பதை கனவாக கொண்டவர். கடந்த 2016-17-வது கல்வியாண்டில் கோவை ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு எடுத்து படித்த இவர், பொதுத்தேர்வில் 1200-க்கு 1,120 மதிப்பெண் எடுத்தார். தொடர்ந்து நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு, கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்று 202 மதிப்பெண் பெற்று மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்றார். இதில்,எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கு பதில் பி.டி.எஸ்.,(பல் மருத்துவம்) கிடைத்தது. ஆனால், எம்.பி.பி.எஸ்., தான் படிக்க வேண்டும் என கூறி பல் மருத்துவத்தில் சேரவில்லை.
தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக நீட் தேர்வுக்கு தயாராகி, கடந்த மாதம் நடந்த நீட் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினார். தற்போது வெளியான நீட் தேர்வு முடிவில், அழகுலட்சுமி 720க்கு 316 மதிப்பெண் பெற்றுள்ளதன் மூலம் அவரின் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு கனவு நனவாக உள்ளது.
இது குறித்து அழகுலட்சுமி கூறியதாவது, "கடந்த முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போது பி.டி.எஸ்.,படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எம்.பி.பி.எஸ்., படிக்க வேண்டும் என்பது தான் என் கனவு. தற்போது 316 மதிப்பெண் கிடைத்துள்ளது. இதனால், நிச்சயமாக எம்.பி.பி.எஸ்., சீட் கிடைக்கும். கோவை அரசு மருத்துவ கல்லூரியில் சேர விரும்புகிறேன். நீட் தேர்வுக்கு பயிற்சி மையம் சென்று படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. +1,+2 பாடங்களை தெளிவாக படித்தால் போதும். +1 பாடங்களை சாதாரணமாக நினைத்ததால் தான் கடந்த முறை என்னால் அதிகளவில் மதிப்பெண் பெற முடியவில்லை", என்று கூறினார்.
கோடி கோடியாக, தனியார் கல்லூரிகளுக்கு பணத்தை வாரி இறைத்தால் மட்டுமே மருத்துவப் படிப்பு சாத்தியமாகும் என்ற முந்தைய நிலை மாறி,  தற்போது NEET மூலம் ஏழை எளிய மாணவர்களும் மருத்துவப் படிப்பு படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது பெற்றோர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Pic Credits - Dinamalar
Next Story