Top
undefined
Begin typing your search above and press return to search.

மேலும் மூவாயிரம் பள்ளிகளில் அடல்(Atal Innovation Mission) அறிவுக் கூடங்கள்

மேலும் மூவாயிரம் பள்ளிகளில் அடல்(Atal Innovation Mission) அறிவுக் கூடங்கள்

By :

  |  13 Jun 2018 7:22 AM GMT

மத்திய அரசு மூலம் மாணவ  -  மாணவிகளின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்காகவும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியாவில் உள்ள 5000 பள்ளிகளில் நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் “நிதி ஆயோக்” கீழ் செயல்படும் அடல் புதுமையாக்க இயக்கம் (NITI Aayog’s Atal Innovation Mission) நாடு முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகளில் அறிவுக் கூடங்களை (Tinkering Labs) அமைக்கிறது. அடல் அறிவுக் கூடங்கள் (Atal Tinkering Labs) என அழைக்கப்படும் இந்தக் கூடங்கள் இளைய தலைமுறையினரிடையில் படைப்பாற்றல், அறிவுத் தேடல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும். ஏற்கெனவே உள்ள அடல் அறிவு ஆய்வுக் கூடங்களுடன் புதிதாக அமைக்கப்படும் அறிவுக் கூடங்களையும் சேர்த்து மொத்தம் 5,441 அடல் அறிவுக் கூடங்கள் செயல்படும்.
சமீபத்தில் இந்த ஆய்வகங்களில் மாணவ - மாணவிகளே ஆய்வுகள் செய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம். அதன்படி மாணவ - மாணவிகள் உருவாக்கிய கண்டுபிடிப்புகள் ‘அடல் மாரத்தான்‘ என்னும் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்தியா முழுவதிலும் இருந்து 600 படைப்புகள் இந்தப் போட்டியில் இடம் பெற்றன.

இதில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜீவிதா பெத்துக்கனி, சுரேகா ஆகியோர் உருவாக்கிய சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற்று இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்த படைப்பும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ - மாணவிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி  காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். தூத்துக்குடி பள்ளி மாணவிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியபோது, "இந்த ஆய்வகம் பயனுள்ளதாக இருக்கிறதா? இதனை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்? இந்த ஆய்வகத்தை படிப்பை தவிர வேறு எந்தவிதமான கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தி மாணவர்கள் வருகின்றனர்? நீங்கள் இந்த கண்டுபிடிப்பு சம்பந்தமாக ஏதேனும் விவசாயியை பார்த்தீர்களா? உங்கள் வயதில் இதனை கண்டுபிடித்து இருப்பது மிகப்பெரிய சாதனை. இதனை நல்ல முறையில் மேம்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்து மாணவி ஜீவிதா பெத்துக்கனி பேசும்போது, "ஆய்வகம் மிகவும் பயன் உள்ளதாகவும், நன்றாகவும் இருக்கிறது. இதன்மூலம் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயன்பெற்று வருகிறோம். இதனால் பல்வேறு படைப்புகளை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். நாங்கள் விவசாயிகளை சந்தித்து பேசி உள்ளோம். நீங்கள் எங்கள் பள்ளிக்கு வர வேண்டும். நீங்கள் தூத்துக்குடி வந்து எங்கள் ஆய்வகத்தை பார்க்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பிரதமர் மோடி, "உங்கள் அழைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு நேரம் இருக்கும்போது தூத்துக்குடி வந்து உங்களை சந்திப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.
அடல் அறிவுக் கூடங்களை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ₹20 லட்சம் மானிய உதவி அளிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மேனிலை பள்ளி மாணவர்களுக்கு இடையில் தொழில்முனைவுத் திறன், புதுமையாக்கம் ஆகிய திறன்கள் ஊக்குவிக்கப்படும். இத்தகைய அறிவுக் கூடங்கள் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும். இவை புதுமையாக்கத் திறனை வளர்ப்பதற்கான சூழல், தொழில்நுட்பத்தில் புதுமையான மாற்றங்களை உருவாக்குதல், கற்பித்தலில் புதுமை ஆகியவற்றுக்கு வழியமைக்கும்.
“அடல் அறிவு ஆய்வுக் கூடத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மேலும் மூவாயிரம் பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் ஏராளமான குழந்தைகள் புதுமையாக்கம், அறிவுத் தேடல் முப்பரிமாண அச்சு (3D Printing), ரோபாட்டிக்ஸ், இணைய உலகம் (Internet of Things - IoT), மைக்ரோ ப்ராசர்கள் (Microprocessors) ஆகியவற்றில் ஈடுபட வழியேற்படும்” என்று அடல் புதுமையாக்க இயக்கத்தின் (Innovation Mission) மேலாண் இயக்குநர் ராமநாதன் ரமணன் தெரிவித்தார்.
Next Story