Top
undefined
Begin typing your search above and press return to search.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ₹1300 கோடி மதிப்பிலான மூன்று 100 மெகாவாட் சூரிய மின் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி அரசு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ₹1300 கோடி மதிப்பிலான மூன்று 100 மெகாவாட் சூரிய மின் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி அரசு

By :

  |  18 Jun 2018 1:59 PM GMT

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூன்று 100 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டங்களின் வர்த்தக செயல்பாடுகளை மத்திய ரயில்வே, நிலக்கரி, நிதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஜூன் 14 அன்று தொடங்கி வைத்து அவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விருதுநகர் மாவட்டம் தொப்பளாக்கரை மற்றும் சேதுபுரத்திலும் திருநெல்வேலி மாவட்டம் செல்லையா செழிய நல்லூரிலும் அமைந்துள்ள இந்த சூரிய மின் திட்டங்கள் தலா 100 மெகா வாட் நிறுவப்பட்ட திறன் கொண்டதாக 15 ஆண்டுகளுக்கான செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகள் உட்பட ₹1300 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் உருவாக்கப்படும் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ₹4.41 என்ற விலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்திற்கு அளிக்கப்படும்.
தொடக்க விழாவில் பேசிய பியூஷ் கோயல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் புதிய தொலைநோக்கு பார்வையுடன் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட அயரா முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். வருங்கால தலைமுறையினரை காக்கும் வகையில் புதிய இந்தியா என்ற கனவை நனவாக்க புதிய தொலைநோக்கு பார்வையுடன் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அனைத்து பணியாளர்களும் பாடுபட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நிறுவனம் மேற்கொள்ளும் நிறுவன சமூக பொறுப்புணர்வு முயற்சிகளையும் பியூஷ் கோயல் பாராட்டினார். நிறுவனத்தின் நிர்வாகம் ரயில்வேயுடன் ஒருங்கிணைந்து மாணவர்களுக்கு இலவச வைஃபை தொடங்கவும், நெய்வேலி அருகில் உள்ள எட்டு ரயில் நிலையங்களிலும் மக்கள் மருந்து மையங்களைத் தொடங்கி சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தினார். நிறுவனம் நடத்தும் முதியோர் இல்லம் மற்றும் அனாதை இல்லத்தை ஒரே இடத்தில் நடத்துவதற்கான வாய்ப்புக்களை பரிசீலிக்கும்படியும் இதன் மூலம் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு செறிவூட்ட முடியும் என்றும் அவர் யோசனை கூறினார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் அண்ணா பல்கலைக்கழகமும் அமைச்சர், நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மற்றும் இதர செயல் இயக்குனர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் பொது மேலாளர் டாக்டர் வி.மனோகரன் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் எஸ்.கணேசன் ஆகியோர் கையொப்பமிட்டனர். பழுப்பு நிலக்கரியை சூரிய மின்சக்தி கொண்டு உலரவைத்து அதன் கலோரி மதிப்பை 2700-ல் இருந்து 4350-ஆக அதிகரிக்கும் வகையில் முன்னோடி திட்டம் ஒன்றை நிறுவ இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்பது பழுப்பு நிலக்கரி தோண்டி எடுத்தல், மற்றும் பழப்பு நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையத்தின் மூலம் மின்சார உற்பத்தியில் ஈடுபடும் இந்திய அரசின் லாபம் ஈட்டும் நவரத்தின நிறுவனமாகும். தமிழகத்தின் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Next Story