Top
undefined
Begin typing your search above and press return to search.

கைத்தறிகளுக்கு அரசு 90 % மானியம் வழங்குகிறது – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

கைத்தறிகளுக்கு அரசு 90 % மானியம் வழங்குகிறது – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 July 2018 5:38 AM GMT

ஹத்கர்கா ஸம்வர்தன் சகாயதா திட்டத்தின் கீழ் கைத்தறிகளுக்கும் அதன் உதிரி பாகங்களுக்கும் 90 சதவீத மானியத்தை மத்திய அரசு நெசவாளர்களுக்கு வழங்கி வருகிறது. 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், கைத்தறி நெசவாளர்களின் தறிகள் மற்றும் உதிரிபாகங்களுக்கு நீண்டகாலத்திற்கு தேவைப்படும் நிதியை ஈடுகட்ட உதவுகிறது.
ஆடைகளின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்த தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான நிதி உதவியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின்கீழ் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான செலவில் 90 சதவீதத்தை நிதி உதவியாக மத்திய அரசு வழங்கும். எஞ்சிய 10 சதவீதத்தை பயனாளி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசு வழங்கும் இந்த 90 சதவீத மானியத்தை நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி ஸூபின் இரானி கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற 28-ஆவது தேசிய கைத்தறி விருது வழங்கும் விழாவில் கைத்தறி ஏற்றுமதியாளர்களை அவர் கவுரவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ள முத்ரா போன்ற திட்டங்களின் கீழ் நெசவாளர்கள் தங்களுக்கான பயன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜவுளித்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். முத்ரா திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களில் 28 சதவீதம் பேர் புதிய தொழில் முனைவோராக உள்ளனர் என்றும், அவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்றும் அமைச்சர் கூறினார். முத்ரா திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என அவர் தெரிவித்தார்.
நெசவாளர்களின் குழந்தைகளில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் என்று 2009-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. தேசிய திறந்த நிலை பள்ளி மற்றும் பல்கலைக்கழக நிறுவனத்துடன் மத்திய ஜவுளி அமைச்சகம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஏற்பாட்டின்படி, இந்தப் பள்ளிகளில் படிக்கும் நெசவாளர் குழந்தைகளின் 75 சதவீத கல்விக் கட்டணத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்.
நெசவாளர்களில் பெரும்பாலோர் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுவதால், எந்த சிறு நெசவாளரும் ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் உறுதி அளித்தார். மேலும், கைத்தறி நெசவுத்தொழில் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வராது என்று கூறினார்.
ஜி.எஸ்.டி. வரி பற்றி மட்டுமல் அல்லாமல், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் மற்றும் அரசின் இதர நலத்திட்டங்கள் குறித்து நெசவாளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஏற்றுமதியாளர்களை அவர் வலியுறுத்தினார்.
மாறுபட்ட பொருட்கள் உற்பத்தி, வடிவமைப்பில் புதுமை, உற்பத்தி வேலைவாய்ப்பு போன்ற சவால்களை சர்வதேச சந்தையில் வாய்ப்புகளாக எடுத்துக் கொண்டு ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்.
பரிசு பெற்ற அனைவரையும் வாழ்த்திய அமைச்சர், இது பெருமிதம் மிக்க தருணம் என்று கூறினார். கைத்தறி தொழிலில் முன்னணியில் இல்லாத பானிபட் இந்த ஆண்டுக்கான அதிக விருதுகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலிருந்து கரூரைச் சேர்ந்த குவாலிட்டி ஃபேப்ஸ், ராமா டிரேடர்ஸ், கோவையைச் சேர்ந்த காட்டன் கான்செப்ட்ஸ், கோயம்புத்தூர் காட்டன் கான்செப்ட்ஸ் அன்ட் டிசைன்ஸ் பிரைவேட் லிமிட்டட், ஆகியவை பல்வேறு பிரிவுகளைப் பெற்றுள்ளன.
ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சட்டப்பூர்வ அமைப்பான கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், 28-ஆவது தேசிய கைத்தறி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 2014-15, 2015-16-ஆம் ஆண்டுகளின் சிறந்த ஏற்றுமதி திறனுக்கான விருதுகள் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார்.
Next Story