Top
undefined
Begin typing your search above and press return to search.

கல்வித்திட்டங்களுக்கா​க ஆயிரத்து 700 கோடி ரூபாய்!

கல்வித்திட்டங்களுக்கா​க ஆயிரத்து 700 கோடி ரூபாய்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  17 July 2018 1:34 PM GMT

RUSA எனப்படும் தேசிய உயர்கல்வி மையத்தின் மூலம் கல்வித் திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளிக்கும் மத்திய அரசின் திட்டமான ராஷ்ட்ரீய உச்சதர் சிக்க்ஷா அபியான் (RUSA) 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மாநிலங்களின் வகைக்கு ஏற்ப பொதுப்பிரிவு மாநிலங்களுக்கு 60 சதவீதமும், சிறப்புப்பிரிவு மாநிலங்களுக்கு 90 சதவீதமும் மத்திய அரசின் நிதி உயர் கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்படுகிறது. மாநிலங்களின் உயர் கல்விக் கவுன்சில்களின் மூலமாக மத்திய அரசின் அமைச்சகங்கள் வழங்கும் நிதிவுதவி, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். உயர்க்கல்வித் துறையில் சிறப்பான சாதனைகளை எட்டுவது, பலருக்கும் கல்வி வாய்ப்புகள் அளிப்பது, சமத்துவ நெறியை வளர்த்தெடுப்பது போன்ற மாநிலங்களின் வளர்ச்சி உத்திகளைப் பிரதிபலிக்கின்ற அவற்றின் உயர்கல்விக் கவுன்சில்களின் திட்டங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நிதிவுதவி அளிக்கப்படும்.
ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷாஅபியான் என்ற இத்திட்டத்தின் படி தற்போதுள்ள தன்னாட்சி கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டுப் பல்கலைக் கழகங்களாக்கப்படும். அதேபோல ஒரு பகுதியில் உள்ள கல்லூரிகள் ஒரு தொகுப்பாக்கியும் பல்கலைக்கழகங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும். புதிய முன்மாதிரி பட்டப்படிப்புக் கல்லூரிகளும் புதிய தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கட்டமைப்பு வசதிகள் புதிதாக உருவாக்கித் தரப்படும். பேராசியர் பணி ஆளெடுப்புக்கு உதவி, பேராசியர்களின் நிர்வாகங்களுக்குத் தலைமைப்பண்பு மேம்படுத்தல், ஆகியவையும் ராஷ்ட்ரீய உச்சதர் சிக்‌ஷா அபியான் கீழ் மேற்கொள்ளப்படும். திறன் மேம்பாட்டுக்காக தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான திட்டமும் இதில் சேர்க்கப்பட்டுவிட்டது. தொழில் பாடக்கல்வியை கல்லூரி பல்கலைக்ககழகக் கல்வியுடன் இணைப்பதும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களில் உள்ள மற்ற கல்வி நிறுவனங்களிலும் மறுசீரமைப்பு சேர்க்கையிட அதிகரிப்புப் போன்றவற்றுக்கும் ராஷ்ட்ரீய உச்சதர் சிக்க்ஷா அபியான் நிதி உதவி செய்கிறது.
இந்த நிலையில், மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரகாஷ் ஜவடேகர், தேசிய உயர்கல்வி மையத்தின் மூலம் பல்வேறு கல்வித்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக கூறியுள்ளார். அந்த திட்டங்களை செயல்படுத்த 117 மாவட்டங்கள் விரும்புவதாக கூறியுள்ள அவர், திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கல்வித்திட்டங்களுக்காக ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதன்மூலம் 70 புதிய மாதிரிக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும், ஏற்கெனவே உள்ள 29 கல்லூரிகள், மாதிரிக் கல்லூரிகளாக மேம்படுத்தப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Reference:  மனித வள மேம்பாட்டு அமைச்சகம், polimer
Next Story