Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்தை அதிர வைத்த ஆப்ரேசன் பார்க்கிங்

தமிழகத்தை அதிர வைத்த ஆப்ரேசன் பார்க்கிங்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  18 July 2018 4:45 AM GMT

தமிழகத்தை அதிர வைத்த 'ஆபரேஷன் பார்க்கிங்': வருமான வரித்துறை சரித்திரத்திலேயே இவ்வளவு பணத்தை பார்த்ததில்லை..!
ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் தமிழகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த சோதனை நேற்றும் தொடர்ந்தது. சுமார் 38 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்தச் சோதனை நேற்றுடன் முடிவடைந்தது. இந்தச் சோதனையில் 170 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தமிழக அரசிற்கு ஒப்பந்த அடிப்படையில் பருப்பு, முட்டை ஆகியவற்றை விநியோகித்து வந்த கிறிஸ்டி நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்தே இதுவும் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் இரவு கிடைத்த அதிகாரபூர்வ உத்தரவை அடுத்து, அதிகாலை சென்னை, மதுரை, விருதுநகர் என்று S P K நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரையின் குடும்பத்தை மட்டுமே குறிவைத்துக் களமிறங்கினர் வருமான வரித் துறை அதிகாரிகள். அந்த வகையில் சென்னையில் இருக்கும் செய்யாதுரையின் மகன் நாகராஜன் வீட்டுக்கும் நேற்று முன்தினம் காலை 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் டீம் சென்று சோதனை நடத்தியது.
S P K நிறுவனமானது தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகிறது. இதில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை பெசன்ட் நகரில் உள்ள ரவிச்சந்திரன் என்பவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. ரவிச்சந்திரன் முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்த கார்களில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி கல்லூரிகளில் நீட் தேர்வை தவிர்த்து விட்டு இடஒதுக்கீடு முறையை அதிமுக அரசு கொண்டு வர இருப்பதாலேயே இந்த சோதனை என்று சந்தேகிக்கப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இது தவிர, சமீபத்தில் சென்னைக்கு வந்த அமித்ஷா தமிழகத்தில் அதிக ஊழல் உள்ளது என்று கூறியிருந்தார். அதற்கு எடுத்துக்காட்டாய் சமீபத்தில் நடந்த வருமானவரி சோதனை அதனை உறுதிப்படுத்தி உள்ளது.
Next Story