Top
undefined
Begin typing your search above and press return to search.

10 முறை மக்களவை உறுப்பினராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி - பல விமர்சனங்களை தாண்டி அரசியல் பயணத்தை கடந்து வந்தார்

10 முறை மக்களவை உறுப்பினராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி -  பல விமர்சனங்களை தாண்டி அரசியல் பயணத்தை கடந்து வந்தார்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  13 Aug 2018 1:43 PM GMT

உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று காலை மரணமடைந்தார்.

கடந்த 1968-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 10 முறை மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் மக்களவைத் தலைவராக 2004 முதல் 2009 வரை பொறுப்பு வகித்தார். எனினும், 2008-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திரும்பப் பெற்ற நிலையில், மக்களவைத் தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்ததை அடுத்து கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

சி.பி.எம் கட்சியின் நீண்ட கால அரசியல் வாழ்கைக் கொண்ட சோம்நாத் சட்டர்ஜி சி.பி.எம் கட்சி தொடர்பாகவும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2009 மக்களவைத் தேர்தலில் பலத்த பின்னடைவை சந்தித்ததற்கும், தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதற்கும் பிரகாஷ் காரத்தின் தவறான வழிகாட்டுதலே முழுக்காரணம் என்று சோம்நாத் சாட்டர்ஜி பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி, புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 1971-ல் இருந்து 10 தடவை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தனது நீண்டகால அரசியல் அனுபவங்களையும், மலரும் நினைவுகளையும் அந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த புத்தகத்தில்தான் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் மீது சோம்நாத் சாட்டர்ஜி இவ்விதம் குற்றம்சுமத்தியுள்ளார்.

அந்த புத்தகத்தில் அவர் கூறியுள்ள சில தகவல்கள் வருமாறு: மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலத்த பின்னடவை சந்தித்தது. தற்போது அதன் செல்வாக்கு இறங்கு முகமாகவே உள்ளது. இதற்கு பிரகாஷ் காரத்தின் மோசமான கொள்கைகளும், தவறான வழிகாட்டுதலுமே முழுக் காரணம் ஆகும். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை அடுத்து அரசுக்கு அளித்துவந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கட்சி வாபஸ் பெற்றது. அப்போது மக்களவைத் தலைவராக இருந்த என்னையும் பதவியை துறக்குமாறு கட்சியில் நெருக்குதல் அளித்தனர். ஆனால் இதற்கு நான் உடன்படவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பினேன். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியினர் தங்களது உத்தரவுக்கு கீழ்ப்படியுமாறு வற்புறுத்தினர். இவ்வாறு அவர்கள் வற்புறுத்தியது நெறி தவறிய செயலாகும். கட்சியில் இருந்து எனக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டதும் கட்சியின் முதுபெரும் தலைவரான ஜோதி பாசுவை சந்தித்து என் நிலைமையை எடுத்துக் கூறினேன். அப்போது மக்களவைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யக்கூடாது என்று எனக்கு அவர் அன்போடு அறிவுரை வழங்கினார்.

ஜோதி பாசுவின் அறிவுரைக்கு மதிப்பளித்தே மக்களவைத் தலைவர் பதவியில் நீடித்தேன். ஆனால் அதிரடியாக என்னை கட்சியைவிட்டு நீக்கினர். கட்சியைவிட்டு நீக்குவதற்கு முன்னதாக என்னிடம் எவ்வித விளக்கமும் கோரப்படவில்லை. எனக்கு எதிராக இப்படியொரு முடிவை எடுத்ததற்கு காரத்தே காரணம். இது அவரது அறியாமையையும், சகிப்புத்தன்மையற்ற செயலையுமே காட்டுகிறது. தற்போதைய தலைமையின் கீழ் இடதுசாரி இயக்கத்தின் செயல்பாட்டை பார்க்கும் போது இடதுசாரி இயக்கமே இக்காலக்கட்டத்துக்கு ஒத்துவராததாகிவிட்டது என்றும் அந்த புத்தகத்தில் சோம்நாத் சாட்டர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார்.

இப்படி பல விமர்சனங்களை தாண்டி அரசியல் பயணத்தை கடந்து வந்த சோம்நாத் சாட்டர்ஜி வயது மூப்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டு கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம் தேறி வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவால் கடந்த செவ்வாயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த உள்ளிட்ட பல்வேறு அரசியல்  தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Next Story