Top
undefined
Begin typing your search above and press return to search.

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் : தமிழகம் மீது அபாண்ட பழி சுமத்தும் கேரள முதல்வர்

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் : தமிழகம் மீது அபாண்ட பழி சுமத்தும் கேரள முதல்வர்

SG SuryahBy : SG Suryah

  |  21 Aug 2018 4:59 AM GMT

கேரளத்தில் பெய்து வரும் கனமழை மூலம் கேரள மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது வருத்ததிற்குரியது தான். ஆனால் இந்த நிலையிலும் கூட பினராய் விஜயன் தமிழர்கள் பயன்படுத்தி வரும் முல்லைப் பெரியாறு நீரை தடுக்கும் நோக்கோடு உச்ச நீதி மன்றம் வரை சென்று நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 139 அடியாக குறைக்கும் படி உத்தரவு பெற்றுள்ளார்.
இடுக்கி அணை திறக்கப்பட்டதற்கும், முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் குறைக்கப்படாததற்கும் ஒரு தொடர்பும் இல்லை. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து் இடுக்கி அணைக்கு நீர் திறக்கப்படாமலே, பல்வேறு வழிகள் மூலம் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து இடுக்கி அணை நிரம்பியது.
அதன் பின்னரே இடுக்கி அணை திறக்கப்பட்டது. இதன் காரணமாக கரையோர மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கடும் சேதாரத்தை உருவாக்கியுள்ளது.
பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்பது போல, இதற்கெல்லாம் காரணம் இடுக்கி அணையல்ல, முல்லைப் பெரியாறு அணைதான் என்று கேரள மக்களிடம் காட்டுவதற்கு முயன்று வருகிறார் பினராய் விசயன்.
அவருக்கு "முற்போக்கு" முகமூடி மாட்டி கொண்டாடுபவர்கள் இனியேனும் தம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற தீவிர கருத்துடையவர் முன்னாள் மார்க்சிஸ்ட் கட்சி முதல்வர் அச்சுதானந்தன். அவர் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்பதிலும், தற்போதுள்ள அணையின் மராமத்துப் பணிகளை தடுக்க வேண்டும் என்பதிலும் பிடிவாதக்காரர்.
அவருக்குப் பின் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வராக பினராய் விஜயன் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
அவர் பதவியேற்ற போது, "அணை பலமாக உள்ளது என்ற நிபுணர் குழுவின் ஆய்வு முடிவுகளை புறந்தள்ளி விட முடியாது என்றும், அச்சத்தின் அடிப்படையில் இந்த பிரச்னையை அணுக முடியாது" என்றும் கூறினார்.
அதன்பிறகு கேரள சட்டமன்றத்தில்,"கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்பது தான் எங்கள் அரசின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. மாநில மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்" என்று பல்டி அடித்துப் பேசினார். முன்பிருந்த அச்சுதானந்தன் வழியில் எள்ளவும் மாற மாட்டேன் என்பதுதான் பினராய் விஜயன் எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணமாகும்.
இவருக்கும், அவருக்குமுள்ள வேறுபாடு என்னவெனில், அச்சுதானந்தன் தமிழர்களுக்கு எதிராகப் பேசி, வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வார். இவர் அப்படியல்ல: வாய் திறக்க மாட்டார். ஆனால், இவர் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதிலே தந்திர நரிப்புத்தி கொண்டவர்.
இவர் உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு தடைக்கல்லாக இன்று வரை இருந்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாது.
2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் மட்டத்தை உயர்த்தும்படி தீர்ப்பு வழங்கியது. அத்தோடு சிற்றணையின் மராமத்துப் பணிகளை முடித்து விட்டு 152 அடி நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. அப்போது மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் என்.ஏ. வி. நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டது.
அக்குழுவானது மூன்றாண்டுகளுக்கு முன்பு வல்லக்கடவு வழியாக முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் சாலையை சீரமைப்பது, அணைப்பகுதிக்கு தரை வழியாக மின்சாரம் கொண்டு செல்வது, பிரதான அணையிலிருந்து பேபி அணைக்கு இடைப்பட்ட பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பது என்றும் முடிவு செய்தது.
19.6.2000 இல் அணைப்பகுதியில் மின்வயரில் யானை ஒன்று சிக்கி உயிரிழந்தது. இதனை சாக்காக வைத்து கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் மின்சாரத்தை துண்டித்தது. கடந்த 17 ஆண்டுகளாக குறைவான திறன் கொண்ட மின்னாக்கியை (ஜெனரேட்டர்) வைத்து தமிழகப் பொறியாளர்கள் படாதபாடு பட்டுவந்தனர். இதை உணர்ந்த மூவர் கண்காணிப்புக் குழு தரை வழியாக மின்சாரம் வழங்கும் முடிவை எடுத்தது. இதற்காக தமிழக அரசு ரூ.1.65 கோடி கேரள அரசுக்கு வழங்கியது. அதுபோல், சிற்றணையைப் பலப்படுத்துவற்கும் தமிழக அரசு ரூ. 7.85 கோடி வழங்கியது. இந்தப் பணம் வழங்கி மூன்றாண்டு கடந்து விட்டது. ஆனால் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், தமிழக அரசின் பொதுப்பணித்துறையினர் மூன்றாண்டுகளுக்கு முன்பு தேக்கடியிலிருந்து அணைப்பகுதிக்கு செல்ல ரூ 1 கோடி செலவில் "தமிழன்னை" பெயரில் படகு வாங்கியது. இப்படகை இயக்குவதற்கு கேரள அரசு இன்றுவரை அனுமதி தரவில்லை.
பினராய் விஜயனுக்கு ஆட்சிக்கு வந்து ஒரு வருடமான பிறகும் நெஞ்சில் ஈரம் சுரக்க மறுக்கிறது. மலையாள இனவெறி அவரது கண்ணை மறைத்து வருகிறது.
கேரளாவில் உள்ள இந்து கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்ததை தமிழகம் வரவேற்றது. அவருக்கு தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் கொடுத்து தமிழக மார்க்சிஸ்ட் கட்சி உட்பட பல தலித்திய, திராவிட அமைப்புகள் " சமூகநீதிக் காவலர்" என்றும், " கேரளப் பெரியார்" என்றும் வரவேற்பு கொடுத்தன. இது அளவுக்கு அதிகமான பாராட்டுதான்.
இருப்பினும், மலையாள இனவெறியின் மென்மையான முகம் பினராயி விஜயன் என்பதை வரவேற்பு கொடுத்த இயக்கங்கள் உணர வேண்டும்.
Next Story