Top
undefined
Begin typing your search above and press return to search.

நுரையீரல் திரவச் சுரப்பினால் பாதிக்கப்பட்ட குழந்தையையின் உயிரை காப்பாற்றிய சமூக ஊடகம்.

நுரையீரல் திரவச் சுரப்பினால் பாதிக்கப்பட்ட குழந்தையையின் உயிரை காப்பாற்றிய சமூக ஊடகம்.

SG SuryahBy : SG Suryah

  |  24 Aug 2018 6:29 AM GMT

#ரேச்சலைக் காப்போம். “மனித நேயமும் சமூக ஊடகமும் ஒருங்கிணைந்த போது - மலர்ந்தது ரேச்சலின் புன்னகை”
நுரையீரல் திரவச் சுரப்பினால் பாதிக்கப் பட்ட ரேச்சல், மணிப்பூரைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை. பணி வாய்ப்புக்காக மணிப்பூரை விட்டு, தன் குழந்தை நேச்சலுடன் பெங்களூர் வந்தவர் மயோரி முங்குங். அவர் வாழ்விலும் அவர் குழந்தையின் வாழ்விலும்தான் எத்தனை மாற்றங்கள்!!. அவர்கள் வாழ்விலே தோன்றிய மிகக் கடுமையான சோதனையில் இருந்து அவர்களைக் காப்பாற்றியது, சமூக ஊடகத்தின் வலிமை. இப்போது மீண்டும் வீடு திருப்பியிருக்கும் அவர்கள் மனிதாபிமானம் மற்றும் அன்புள்ளங்களின் ஒருமைப்பாட்டிற்கு ஒரு சாட்சியாக இருப்பார்கள்.

ரேச்சலின் தாய் தனது அழகிய பத்துமாதக் குழந்தையுடன் வாழ்வாதாரம் தேடி பெங்களூர் வந்தார்.  முன் பின் தெரியாத ஊரில் பணிபுரிய வந்த அப்பெண்ணுக்குத்தான் எத்தனை பெரிய இடி. தன் குழந்தையின் நுரையீரல் பழுதுபட்டுள்ளது, திரவச் சுரப்பினால் தன்  குழந்தையின் உயிருக்கே ஆபத்து என்றும், ஒரு பெரிய அறுவை சிகிச்சை மூலமே அதனைக் குணப்படுத்த இயலும் என்றும் அறிந்த மயோரியின் கண் முன்னால் உலகமே இருண்டு தெரிந்தது.

தெரிந்தவர்கள் உதவியுடன் தன் குழந்தையை மணிபால் மருத்துவ மனையில் சேர்த்தார் மயோரி.  சிகிச்சைக்கு ஆகக் கூடிய செலவு ஏறத்தாழ ஒன்றரை லட்சம் என்று கூறப்பட்டது. தாய் தகப்பனற்ற, கணவனால் கைவிடப்பட்ட மயோரிக்கு, அத்தொகையை ஏற்பாடு செய்வது இமாலய முயற்சியாகத் தோன்றியது...ஆனால் தாய்மனம் அல்லவா? குழந்தையின் சிகிச்சைக்காக அந்த இமாலய முயற்சியைத் தளராமல் தொடங்கினார் அவர்.

மணிப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களை அவர் முதலில் அணுகி உதவி கேட்டார், அவரது ஊரான லௌஷிங்கைச் சேர்ந்த திரு. லக்சன் என்பவரது அறிமுகம் கிடைத்தது. திரு லக்சன், மணிப்பூர்க்காரரும், தற்போது மும்பையில் வருமான வரித்துறை ஆணையருமான ஒரு நல்லவரைத் தொடர்பு கொண்டார். இளகிய மனமுள்ள அந்த ஆணையர், பெங்களூரில் உள்ள தன்னுடைய நண்பர்களை ரேச்சலுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அப்படிக் கேட்டுக்கொள்ளப் பட்டவர்களில் ஒருவர், கணக்காயரும், சமூக ஊடக ஆர்வலருமான திரு கிரீஷ் ஆல்வாவின் நெருங்கிய உறவினருமான திரு பாலகிருஷ்ண ராய். அவர் கிரீஷ் ஆல்வாவிடம் ரேச்சலின் நிலைமையைக் கூறி, முடிந்த உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

கிரீஷ் ஆல்வா, தனது சமூக ஊடக நண்பர்களான அரவிந்த் லோதா  மற்றும் பார்வதி நாதன் ஆகியோருடன் ஆலோசித்து, களத்தில் இறங்கினார். #சேவ்ரேச்சல் என்ற பிரசாரம் ட்விட்டரில் மேற்கொள்ளப் பட்டது, ரேச்சலுடைய சிகிச்சைக்கு உதவி செய்யும்படி வேண்டுகோள் வைக்கப் பட்டது. Milaap.org  என்ற, பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட உதவும் ஊடகத்தின் மூலம் ரேச்சலின் சிகிச்சைக்காக நிதி திரட்டத் தொடங்கினர். தொடர்ச்சியான நினைவூட்டல்கள், மறுகீச்சுகள் மூலம் நிதி திரட்டலுக்கான காரணத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துதல், சேர்ந்துள்ள தொகை குறித்த தகவல்களைப் பரிமாறுதல் என்று இடைவிடாமல், தளர்ச்சியின்றிப் பணியாற்றியது இக்குழு. கருணையுள்ள உள்ளங்களைத் தொட்டதன் மூலம், அவர்களது உதவியால், 24 மணி நேரத்திற்குள் ரேச்சலுக்குத் தேவையான ஒன்றரை லட்சம் இலக்கைத் தாண்டி, ரூ.1.70 லட்சத்தை அடைந்தது நிதியுதவி. இத்தொகை ரேச்சலின் அறுவை சிகிச்சைக்கு மட்டுமின்றி, அதன் பிறகு தேவைப்படும் மருத்துவ உதவிகளுக்கும் ஈடுகட்டப் போதுமானது.

[caption id="attachment_2651" align="alignnone" width="300"] Rachel while getting treatment in Manipal hospital[/caption]
ட்விட்டரில் நடந்த இந்த முனைப்பியக்கத்தைப் பற்றி அறிந்துகொண்ட மணிப்பூர் முதல்வர் திரு. பிரேன் சிங், உடனடியாக இந்த ஆர்வலர் குழுவை, தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு ட்விட்டரிலேயே வேண்டுகோள் விடுத்தார். ஆர்வலர் குழு அவரிடம் பேசி, ரேச்சலின் சிகிச்சை குறித்தும், அவளது குடும்ப நிலை, நிதித்தேவை குறித்தும் விளக்கினர். பெங்களூர்வாசிகள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களின் தொண்டால் மனம் நெகிழ்ந்த மணிப்பூர் முதல்வர், உடனே, அறுவை சிகிச்சைக்கும், ரேச்சல் தன் தாயுடன் மணிப்பூர் திரும்பத் தேவையான பயணச் செலவுக்கும் முப்பதாயிரம் ரூபாய் நன்கொடை அனுப்பிவைத்தார்.

அறுவை சிகிச்சை முடிந்து இப்பொழுது ரேச்சல் நலமுடன் இருக்கிறாள்.மணிபால் மருத்துவமனை, தங்கள் தரப்பில் இருந்து, மருத்துவச் செலவிற்கான கட்டணத்தில்  இருந்து இருபதாயிரம் ரூபாயைத் தள்ளுபடி செய்துள்ளது, மயோரியும் ரேச்சலும், பலரது அன்பையும், நல்லெண்ணத்தையும் மனதில் சுமந்துகொண்டு மணிப்ப்பூர் திரும்புகின்றனர். சமூக ஊடக ஆர்வலர் குழு, மணிப்பூர் முதல்வரிடம்,  ரேச்சலின் தாய்க்கு வாழ்வாதாரம் கிடைக்க, ஒரு வேலையோ அல்லது சுய தொழிலுக்கான கடனுதவியோ வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் மூலம்,மயோரி தனது கிராமத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும் என்று இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மணிப்பூர் முதல்வரும், அதற்கு இசைவு தெரிவித்துள்ளார்,

சமூக ஊடகங்களின் ஆற்றலும் , தாக்கமும் அபரிமிதமானது. அதனைப் பொய்ச்செய்தி பரப்புவதிலும் பிரிவினை வாதம், வெறுப்புணர்வுகளைத் தூண்டுவதிலும் வீணடிக்காமல், தேவைப்படுபவருக்கு உதவி செய்யவும் இந்த நாட்டுக்குச் சேவை செய்யவும் நாம் அதைப் பயன்படுத்துவோம். சமூக ஊடகங்களின் வாயிலாக அன்பையும் மனித நேயத்தையும் பரப்புவோம். நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் “இனம், மொழி, மதம்,  பிராந்திய வேறுபாடுகளைத் தாண்டியது மனித நேயம்” என்று அடிக்கடி கூறுவதை மெய்ப்பித்துள்ளார் மணிப்பூர் முதல்வர். குறுகிய மனம் படைத்த பல அரசியல்வாதிகளுக்கிடையே அவர் ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ்கிறார். தானாகவே இக்குழுவைத் தொடர்பு கொண்டு உதவி செய்ததன் மூலம் தான் மக்களுக்கானவர் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவரைத்தொடர்ந்து மேலும் பல அரசியல்வாதிகள், சமூக ஊடகங்களின் அளப்பரிய ஆற்றலை, மக்களை ஒருங்கிணைக்கவும், ஆக்கபூர்வமான மாற்றங்களை மக்கள் வாழ்வில் உண்டாக்கவும் தேவையான விழிப்பினை அடையவேண்டும் என்று நம்புகிறோம்.
தனக்கும் தன் குழந்தைக்கும் கிடைத்த அன்பும் ஆதரவும் மயோரியை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் மீது இரக்கம் காட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் மிகுந்த நெகிழ்ச்சியோடு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறார் மயோரி. இப்பொழுது ரேச்சல் உடல் நலம் தேறி, ஆரோக்கியமாக விளையாடிக்கொண்டிருக்கிறாள்.
வாருங்கள்; நாமும் எல்லைகளைக் கடந்து அன்பும் அக்கறையும் காட்டுவோம். நாம் ஒவ்வொருவரும் பிறரது வாழ்வில் ஒரு நேர்மறையான மாற்றத்தை உண்டாக்கப் பாடுபடுவோம். பாசமும் மனித நேயமும் நம் மொழியாகட்டும். தேசத்தின் மேம்பாடு நமது விழியாகட்டும்.
Next Story