Kathir News
Begin typing your search above and press return to search.

பராமரிப்பின்றி கிடக்கும் 25,000 தமிழக கிராமப்புற கோவில்கள் : மாத சம்பளமாக ₹19 பெரும் அர்ச்சகர் - இந்து அறநிலையதுறையின் அவலம்!

பராமரிப்பின்றி கிடக்கும் 25,000 தமிழக கிராமப்புற கோவில்கள் : மாத சம்பளமாக ₹19 பெரும் அர்ச்சகர் - இந்து அறநிலையதுறையின் அவலம்!

பராமரிப்பின்றி கிடக்கும் 25,000 தமிழக கிராமப்புற கோவில்கள் : மாத சம்பளமாக ₹19 பெரும் அர்ச்சகர் - இந்து அறநிலையதுறையின் அவலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Aug 2018 5:31 PM GMT

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள எராஹரம் கோவில் தான் ஆதி ஸ்வாமிமலை கோவிலாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகையும் இந்த கோவிலில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட காலம் அது. தினமும் மூன்று முறை பூஜைகளும் தவறாமல் நடக்கும். இன்று, ஒரே ஒரு அர்ச்சகர் தான் இந்த கோவில் பூஜைகளை செய்து வருகிறார். தினசரி ஒரு வேளை பூஜை தான் செய்து வருகிறார். சமுதாயம் எவ்வாறு மாறியுள்ளது என்பதற்கான அறிகுறியாக இந்த சிறிய கிராமப்புற கோவில் அமைந்துள்ளது. கிராமங்களில் உள்ள ஆலய வருவாய் கணிசமாக குறைந்து விட்டது.


தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் உள்ள 25,000 கோயில்களில், அர்ச்சகர்களோ அல்லது அறங்காவலர்களோ இல்லை. ஏராளமான இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை கிராமப்புற கோவில் அறங்காவலர்கள், கோவில்களை திருடர்களின் கூடாரமாக மாறுவதற்கு வழிவகுக்கும் வகையில், கோவில்களை விட்டுவிட்டு நகர்ப் புறங்களுக்கு குடியேறிவிட்டனர்.


வரலாற்று ரீதியாக, இந்த கோவில்கள் சோழர் காலத்தில் அல்லது அதற்கும் முன்பாகவே கட்டப்பட்டவை. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் 48% மக்கள் நகர்ப் புறங்களில் வாழ்கின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல், மாநிலத்தின் நகர்ப்புற குடியேற்றம் 15% அதிகரித்துள்ளது.


ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர், டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறுகையில், "என் சகோதரி தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல வாழ்க்கை நிலை தேடி நகர் புறங்களுக்கு குடி பெயர்ந்து விட்டனர். நான் அர்ச்சகர் தான் என்றாலும் பிற குடும்ப உறுப்பினர்கள் மூதாதையர்கள் செய்ததை விட்டு விட்டார்கள்", என்கிறார்.


அனைத்து கலாச்சார மற்றும் சமூக ஈடுபாடுகளின் இடமாக கோவில்கள் இருந்தன. திருவிழாக்களில் பங்கேற்க மக்கள் நகரங்களில் இருந்து கிராமப்புற கோவில்களுக்கு வருகை தரும் போது தான் கிராமப்புற கோவில்களில் நிறைய பூஜைகளும் சடங்குகளும் செய்யப்படுகிறது. ஆனால், அன்றாடம் ஒரு வேளை பூஜை மட்டுமே செய்யப்படுகிறது.


"ஒரு கோவிலை முறையாக பராமரிக்க குறைந்த பட்சம் மூன்று அறங்காவலர்கள், ஒரு அர்ச்சகர் மற்றும் கோவிலை சுத்தம் செய்ய ஒருவர் தேவை. ஆனால் பெரும்பாலான கோவில்களின் வருவாய் கோவிலை பராமரிக்க போதுமானதாக இல்லை," என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.


அர்ச்சகர்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு இருப்பது உண்மையானது தான் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். "சில கோவில்களில் பூஜை செய்வதற்கு குருக்கள் இருப்பதைக் காண முடியாது. பெரும்பாலான இடங்களில் பரம்பரை குருக்கள் மற்றும் அறங்காவலர்கள் கிராமத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். அவர்களது குடும்பத்தினர் சொற்பமான வருவாயை வைத்து வாழ்க்கை நடத்த இயலாது என அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


அம்பாசமுத்திரம் மன்னார் கோவிலில் உள்ள ராஜகோபால ஸ்வாமி குலசேகர ஆழ்வார் கோவிலில் தலைமை அர்ச்சகராக இருப்பவர் பெரிய நம்பி நரசிம்ம கோபாலன். இவர் எம்பெருமான் ஸ்ரீமான் ராமானுஜரின் ஐந்து ஆச்சார்யர்களில் ஒருவரான பெரிய நம்பிகளின் பரம்பரையில் வரும் 29-ஆவது சந்ததியினர் ஆவார். இவர், ஊதிய உயர்வு கேட்டு அறநிலைய துறைக்கு கடந்த பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்து கவனிக்கப்படாத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், மனு தாக்கல் செய்யப்பட்ட போது, அவரின் மாத சம்பளம் ₹750 ஆகும். இன்றைய நிலையில், ₹750 வைத்து 2 வாரங்கள் சாப்பிட முடிந்தால் பெரிய விஷயம் தான். குழந்தைகளின் படிப்பு, மருத்துவ தேவை என்ற அத்தியாவசிய தேவைகளெல்லாம் கனவாக தான் இருக்கும்.


பாத்தைமடை விளவநாதர் கோவில் அர்ச்சகருக்கு மாதம் ₹19 தான் சம்பளம் என்று தி இந்து செய்தி குறிப்பு அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறது. இதை வைத்து அந்த அர்ச்சகர் ஒரு முறை தேனீர் அருந்தலாம். ப்ரம்மதேசத்தில் உள்ள பழம்பெருமை வாய்ந்த கைலாச நாதர் கோவில் அர்ச்சகருக்கு ₹215 மாத சம்பளம் என்று அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஊழல் மிகுந்ததாக காணப்படும் இன்றைய நிலையில், தமிழக கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து வருவது வேதனைக்குரிய ஒன்று. கோவில் அர்ச்சகர்களுக்கு தகுந்த ஊதியமும் வசதிகளையும் வழங்கினால் அவர்கள் நகர்புறங்களை நோக்கி குடி பெயர்வதற்கான அவசியம் இருக்காது. 50 ஆண்டுகளாக இந்து விரோதத்தையும் பிராமண வெறுப்பையும் முன்னிறுத்தி அரசியல் செய்து வரும் திராவிட கட்சிகளின் பிடியில் தமிழக பொக்கிஷங்கள் அழிந்து வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. அர்ச்சகர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்காததற்கு இந்து விரோதமும் பிராமண வெறுப்பும் ஒரு காரணமோ என்ற கேள்வி ஆணித்தனமாக எழுகிறது.


சிலை திருட்டுகள் மூலம், பண்டைய தமிழ் பொக்கிஷங்களான ஆயிரக்கணக்கான ஸ்வாமி சிலைகள் காணாமல் போய்விட்டது. அதை மீட்டுக்கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு I.G. பொன் மாணிக்கவேல் குழுவிடம் இருந்து சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற தமிழக அரசாங்கம் "கொள்கை முடிவு" எடுத்திருக்கிறது. திராவிட கட்சிகளால் நியமிக்கப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகளே சிலை கடத்தல்களில் நேரடியாக சம்பந்தபட்டிருப்பது மேலும் வேதனை.


தமிழக கிராமப்புற கோவில்களையும் பண்டைய தமிழ் பொக்கிஷங்களான கோவில் சிலைகளையும் பாதுகாப்பது என்பது என்று தான் சாத்தியமாகுமோ என்பது தமிழக ஆன்மீக வாதிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News