Top
undefined
Begin typing your search above and press return to search.

வெளிநாடுகளை போன்று நெடுஞ்சாலைகளில் தானியங்கி கேமராக்கள் - விபத்தை குறைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

வெளிநாடுகளை போன்று நெடுஞ்சாலைகளில் தானியங்கி கேமராக்கள் - விபத்தை குறைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

SG SuryahBy : SG Suryah

  |  6 Sep 2018 6:10 AM GMT


சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில், செப் 3 2018 அன்று நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையேற்று உயிரிழப்பு விபத்து இல்லாமல் பணியாற்றிய 80 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் எரிபொருள் சிக்கனத்துடன் பேருந்துகளை இயக்கிய 9 ஓட்டுநர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் தேர்வு செய்யப்பட்டுள்ள 8 பணிமனைகளை சார்ந்த ஏனைய ஓட்டுநர்கள்,நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு அந்தந்த பணிமனைகளிலேயே பரிசும், பாராட்டுச் சான்றிதழும் தொடர்புடைய மண்டலமேலாளர்களால் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள போக்குவரத்தினை மேம்படுத்தி, தரமான சாலைகள் அமைக்கப்பட்டு, பயணிகளின் சாலைப்பயண பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில், இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள சாலைகளை நவீன தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் புதிய நடைமுறை, முதன் முறையாக தமிழகத்தில் ₹25 கோடி செலவில் செங்கல்பட்டு முதல் திருச்சி வரையில் தொடங்கப்பட உள்ளது. 280 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் வாயிலாக அதிவேகப் பயணம், சாலை விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல குறைபாடுகள் களையப்பட்டு பயணிக்கும் பொதுமக்களுக்கு விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும்.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் பயணத்தின் பாதுகாப்பினை மேம்படுத்துகின்ற வகையில் ₹5 கோடியாக இருந்த நிதி உதவியினை படிப்படியாக உயர்த்தி இன்றைய தினம் ₹60 கோடி அளவிற்கு உயர்த்தி வழங்கியுள்ளது அரசு. இன்றைய தினம் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் உயிரிழப்பு விபத்தில்லாமல் வாகனங்களை சிறந்த முறையில் இயக்கிய 8 பணிமனைகளைச் சார்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இனிவரும் காலங்களில் அனைத்து பணிமனைகளைச் சார்ந்த பணியாளர்களும் இதுபோன்ற பரிசுகளை பெற்றிட முனைப்புடன் பணியாற்றிட வேண்டும்", என்று கூறினார்.




Next Story