Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை தொழிலதிபர் வீட்டில் 68 சாமி சிலைகள் சிக்கின: திராவிட கட்சிகளின் பிடியில் அழியும் தொன்மை வாய்ந்த தமிழக பொக்கிஷங்கள்

சென்னை தொழிலதிபர் வீட்டில் 68 சாமி சிலைகள் சிக்கின: திராவிட கட்சிகளின் பிடியில் அழியும் தொன்மை வாய்ந்த தமிழக பொக்கிஷங்கள்

SG SuryahBy : SG Suryah

  |  28 Sep 2018 12:55 PM GMT

திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலை நயம் மிக்க சுவாமி சிலைகள் அழிந்து கொண்டே வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு தேடுதல் வேட்டையில் மிகவும் தொன்மை வாய்ந்த பல சிலைகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.


மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர், ரன்வீர் ஷா, 62. இவர், சென்னை, சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியில், சொகுசு பங்களாவில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ராஜிவ் மேனன் இயக்கத்தில், 1997-ல் வெளிவந்த, மின்சார கனவு என்ற படத்தில் நடித்துள்ளார், ரன்வீர் ஷா.

ரன்வீர்ஷா வின் நடவடிக்கைகளை, போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அவர், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதும், அங்கு, சிலை கடத்தல் நபர்களை சந்திப்பதும், காவல்துறைக்கு தெரிய வந்தது. இதனால், ரன்வீர் ஷாவின் பங்களாவில் சோதனை நடத்த, முடிவு செய்தனர்.


இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன், ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் படையினர், நேற்று காலை, 9:30 முதல், பகல், 2:30 மணி வரை, ரன்வீர் ஷா பங்களாவில், ஒரு இடம் விடாமல் சோதனையிட்டனர். அப்போது, ஒரு அறையில், 12 பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், பங்களா முழுவதும், 56 கற்சிலைகள் இருந்தன. அவற்றில், நந்தி மற்றும் பெண் தெய்வ கற்சிலைகள் அதிகம். அத்துடன், கலைநயமிக்க கோவில் கல் துாண்கள், சுவாமி சிலைக்கு பின் சாத்தப்படும் திருவாச்சி என, பங்களா முழுவதும், பல விதமான கலைப் பொருட்கள் இருந்தன. அந்த பங்களாவே, கோவில் வளாகம் போல் காட்சி அளித்தது.


பின்னர், ஐ. ஜி. மாணிக்கவேல் கூறுகையில், "ரன்வீர் ஷா வீட்டில், ஐந்து மணி நேரம் சோதனை நடத்தினோம். 12 பஞ்சலோக சிலைகள், 56 கற்சிலைகள், கலை நயமிக்க கோவில் துாண்கள் என, 89 பொருட் களை பறிமுதல் செய்து உள்ளோம். இவை அனைத்தும், தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை. இவற்றில், 75 சதவீத சிலைகளை, சர்வ தேச சிலை கடத்தல்காரன் தீனதயாளன் தான், ரன்வீர் ஷாவுக்கு விற்றுள்ளான். இந்தசிலைகளை, வெளிநாடுகளுக்கு கடத்த இருந்தது தெரிந்தது. சிலைகளை வாங்கி விற்க, உரிமம் பெற்று இருப்பதாக, ரன்வீர் ஷா தெரிவிக்கிறார். அவரது வீட்டில் பறிமுதல் செய்த சிலைகள் அனைத்தும், 100 ஆண்டுகள் பழமையானவை.


இது போன்ற, தொன்மையான சிலைகளை வாங்கவோ, விற்கவோ, உரிமம் பெற முடியாது. அப்படி பெற்று இருந்தால், அது, சட்ட விரோதமானது. தீனதயாளனுடன் சேர்ந்து, கோவில்களை கபளீகரம் செய்து, சிலைகளை திருடி பதுக்கி இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். சோதனை நடக்கும் போது, ரன்வீர் ஷா வீட்டில் இல்லை; குடும்பத்தினரும் இல்லை. முழுமையான விசாரணைக்கு பின், ரன்வீர் ஷா கைது செய்யப்படுவார்", என்று கூறினார்.


இந்து விரோத திராவிட கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தமிழக பொக்கிஷங்களான புராதனமான சுவாமி சிலைகள், கடத்தப்படுவது அறை நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. அறநிலையத்துறை அதிகாரிகளே இது போன்ற சிலை கடத்தல்களில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது ஊழல் மிகுந்த அறநிலையத்துறையின் அறம் இழந்த தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.


Inputs from தினமலர்

Next Story