Top
undefined
Begin typing your search above and press return to search.

கோவையைச் சுற்றியுள்ள ஏரிகள் அழிக்கப்படுவதற்கு எதிராக இந்த சபை போராட்டம் நடத்தியது எனக்கு மகிழ்ச்சி :கோவை வர்த்தக சபையின் 90-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி புகழாரம்

கோவையைச் சுற்றியுள்ள ஏரிகள் அழிக்கப்படுவதற்கு எதிராக இந்த சபை போராட்டம் நடத்தியது எனக்கு மகிழ்ச்சி :கோவை வர்த்தக சபையின் 90-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி புகழாரம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  9 Oct 2018 5:56 PM GMT

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ஹரிஹரன், மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாநகராட்சி துணை கமி‌ஷனர் காந்திமதி, எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் எம்.பி., கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், கோட்ட பொறியாளர் ஜி.கே. செல்வகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
அங்கு, அங்கு கோவை வர்த்தக சபையின் 90-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது :
"கோயம்புத்தூரில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் 90-வது ஆண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த அமைப்பின் பயணத்தில் 90 ஆண்டுகள்  நிறைவடைந்திருப்பது ஒரு முக்கிய மைல் கல்லாகும். சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த சர் ஆர்.கே. சண்முக செட்டி, 1929-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த அமைப்பு, இந்திய குடியரசின் பிறப்பு மற்றும் பல குறிப்பிடத்தக்க சம்பவங்களுக்கு சாட்சியாக இருந்துள்ளது.
அன்று முதல் கோயம்புத்தூரில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் வர்த்தகம், தொழில் மற்றும் சேவைத் துறைக்கு பங்களித்துள்ளது.
இவ்வமைப்பின் உறுப்பினர்கள் தங்களது நேரத்தையும், செல்வத்தையும் சமுதாயத்தின் வளர்ச்சியில்  முதலீடு செய்வதோடு இப்பகுதியில், உள்ளாட்சி மற்றும் கலாச்சார நலனுக்காகவும்  பணியாற்றி வருகின்றனர்.
1671 உறுப்பினர்களும், பத்தாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட 96 சார்பு அமைப்புக்களையும் கொண்ட இந்த சபை கோயம்புத்தூரில் உள்ள வியாபார நிறுவனங்களின் விரிவான பிரதிநிதியாக உள்ளது.  இவற்றுள் பம்புசெட் தயாரிப்பு, பொறியியல் மோட்டார் பாகங்களின் தயாரிப்பு, மென்பொருள் வளர்ச்சி மையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், காற்று, சூரியசக்தி மற்றும் மின்சார வாகனங்களின் தயாரிப்பு, தற்காலத்திற்கான சிறந்த கல்வி நிறுவனங்கள், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள், மருத்துவ வசதிகள், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளின் தயாரிப்பு ஆகியவை அடங்கும்.
கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள ஏரிகள் அழிக்கப்படுவதற்கு எதிராக இந்த சபை ஒரு போராட்டம் நடத்தியது என்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.   இதையடுத்து 1992-ஆம் ஆண்டு ஏரி நிலங்களில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதற்கு அனுமதியில்லை என்று மாநில அரசு அறிவித்தது.
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்காக உறுப்பினர்களின் ஆதரவோடு  நொய்யல் கால்வாய் திட்டத்தின் புனரமைப்பு, வலங்குளத்தின்  தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது பாராட்டுக்குரியது.
நண்பர்களே,
தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் புரட்சியின் காரணமாக  அதிவேக வளர்ச்சி ஏற்பட்டு உலகம் மாறி வருகிறது.   இந்த மாற்றத்தோடு தன்னை இணைத்துக் கொள்ளாத எந்த நாடும் பின்தங்கிவிடும்.   மிகப்பெரிய பொருளாதார சக்தியான உருவாகும் வாயிலில் இந்தியா உள்ளது. நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவதில் தனியார் துறை முக்கியமான பங்களிப்பை வழங்க முடியும்.
தொழில் மயமாகும் மாநிலங்களிடையே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.   இந்த மாநிலம் மோட்டார் வாகனம், தோல், ஜவுளித்தொழில் மற்றும் கடின உழைப்பிற்கான இயல்பைக் கொண்ட மக்களுக்கு பெயர் பெற்றது. வளர்ச்சியை துரிதப்படுத்த உள்கட்டமைப்பில் திறமைக்கான ஆதாரம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரியின் அறிமுகம் போன்ற சீர்த்திருத்த நடவடிக்கைகள் நீண்ட காலக் கட்டத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும். எனினும், இவற்றின் செயல்பாட்டில் ஆரம்ப காலத்தில் சில பிரச்சினைகள் இருக்கக் கூடும். இறுதியில் இது போன்ற சீர்த்திருத்தங்கள் நுகர்வோருக்கு பயன்தரும்.
பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீடு உட்பட பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளாலும், உறுதியான அடிப்படை பொருளாதாரத்தாலும் இந்தியா  தொடர்ந்து வளர்ச்சியைக் காணும்.
இந்தியா இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும்  பொருளாதாரங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது.  இது தொடர்ந்தால் அடுத்த பத்து  முதல் 15 ஆண்டுகளில் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவாகும் வாய்ப்புள்ளது.
2025-ஆம் ஆண்டுக்குள் ஐந்து டிரிலியன் டாலர் பொருளாதாரமாகவும்,  உலகிலேயே 3-வது பெரிய நுகர்வோர் சந்தையாக உருவாகவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி 2018-19-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.3 சதவீத வளர்ச்சியையும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியையும் காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி “சமீப காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி விவேகமான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பரந்துபட்ட பொருளாதார கொள்கையால் ஆதரிக்கப்படுகிறது; கட்டமைப்பு, எரிசச்தி மானிய சீர்த்திருத்தங்கள், வலுவான நிதி ஆதாரம்,  தரமான பொது செலவீனம்  மற்றும் கட்டண சமநிலையை இலக்காகக் கொண்ட புதிய பணவீக்கம்; மேலும், சமீபத்திய சீர்த்திருத்தக் கொள்கை இந்தியாவில் வியாபார சூழலை மேம்படுத்த உதவியதோடு, நாட்டிற்குள் அந்நிய நேரடி முதலீடு இலகுவாக வருவதற்கும் வழி வகுத்துள்ளது.
மற்ற பெரிய பொருளாதாரங்களை கடந்து 2018-19-க்குள் இந்தியா 7 சதவீதத்தைவிட அதிக வளர்ச்சியை அடையும் என்றும் சர்வதேச நிதி நிறுவனம் கணித்துள்ளது.
இந்த ஆண்டில் வர்த்தகம் செய்வதற்கான இலகுவான சூழல் குறித்த உலக வங்கியின் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் உயர்ந்துள்ளது.
இந்தியா தனது உள்கட்டமைப்பை விரிவுப்படுத்தி வருகிறது. உதாரணமாக 2017-18-ஆம் ஆண்டில் 9,829 கிலோ மீட்டர் நீளத்திற்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன என்பதை ஒப்பிட்டு பார்க்கும் போது  சென்ற வருடம் 8231 கிலோ மீட்டர் நீளமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன.
இந்தியாவில் தயாரிப்போம், திறன் வாய்ந்த இந்தியா, டிஜிட்டல் இந்தியா, நவீன நகரங்கள்,  தொடக்க நிலை நிறுவனங்கள் என இந்திய அரசின் கொள்கை முன்முயற்சிகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
2017-18-ம் ஆம் ஆண்டுகளில் 62 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்த அந்நிய நேரடி முதலீடுகள் காரணமாக இந்தியாவில் வலிமையான, உலகளாவிய தன்னம்பிக்கை காணப்படுகிறது.
தாமத தவிர்ப்பு, வர்த்தகம் மேற்கொள்வதற்கான இலகுவான சூழல், முதலீடுகளுக்கான ஈர்ப்பு மற்றும் நட்போடு கூடிய வர்த்தக சூழலின் உருவாக்கம் ஆகியவற்றுக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்துள்ளது.
வெளிப்படைத் தன்மை, இரட்டை பொருளாதாரத்திற்கு முடிவு கட்டுவது,  அரசின் வருவாயை அதிகப்படுத்துவது பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியின் அறிமுகம் ஆகியவை முக்கியமான முன்முயற்சிகளாகும்.
இந்த முன் முயற்சிகளினால் மக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதிக எண்ணிக்கையிலான மக்கள்  வரிகளை செலுத்துவதால் தெரிய வந்துள்ளது.   அதே போன்று, கருப்புப் பணத்தை அடையாளம் காணவும், திவால் மற்றும் நொடித்தலுக்கான குறியீடு அறிமுகம் ஊழலை தடுப்பதற்கான நடவடிக்கைகள், பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.  உண்மையில், இது போன்ற வர்த்தக சபைகள், வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கவும், ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிரான இயக்கங்களையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.   வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமானால் அது வளர்ச்சி நடவடிக்கைளுக்கும் மக்களின் நலனுக்கும் நன்மை பயக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
எனினும், ஒவ்வொரு சீர்த்திருத்தமும் மனிதகுலத்தின் நன்மையை  அடைவதாக இருக்க வேண்டும் என்பதோடு சீர்த்திருத்தங்களின் பலன்கள் சமுதாயத்தில் ஏழை மக்களை சென்றடைய வேண்டும்.  செல்வம் சமமாக  பகிர்ந்துக் கொள்ளப்படவில்லை எனில் பொருளாதார வளம் ஏற்பட்டும் பயனில்லை.
ஜன் தன் யோஜனா போன்ற மத்திய அரசின் முன்முயற்சிகள் ஏழைகளுக்கு அதிகாரம் வழங்குவதையும், நிதி அளவில் அவர்கள் ஒடுக்கப்படுவதையும் முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது.
உங்களைப் போன்ற வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்புக்கள், உள்ளடக்கிய நிதி முன்முயற்சிகளிலிருந்து எவரும் விடுபட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
வியாபாரம் வளரவும் செல்வத்தின் உருவாக்கலுக்குமான சுமூகமான சூழலை உருவாக்குவதிலும் வர்த்தக சபைகள் அரசுக்கும், தொழில்துறைக்கும் இடையே பாலமாக செயல்படுகின்றன.  வியாபாரம் மேற்கொள்வதற்கு இலகுவான சூழலை உருவாக்குவதில் சட்டங்களும், விதிமுறைகளும் தடைகளாக இல்லாமல் இருப்பதற்கு, அரசுகளுக்கு  ஆலோசனை வழங்குவதில் இவை ஆக்கப்பூர்வமான பங்களிக்கின்றன.

வர்த்தக சபைகள் தார்மீகப் பொறுப்புடன் கூடிய பெரும் நிறுவனங்களின் நிர்வாகம், வரி செலுத்துதல், மற்றும் பெருநிறுவனங்கள்
சார்ந்த சமூகப் பொறுப்பை உறுப்பினர்களிடையே வளர்க்க வேண்டும்.

தனியார் துறையானது தனியார் துறைக்கான சமூக பொறுப்பு குறித்த சட்டரீதியான தேவைகளோடு நின்றுவிடாமல், சமூகத்தின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் “பங்கேற்பதும் அக்கறை காட்டுவதும்” இந்திய தத்துவத்தின் முக்கியக் கூறாகும்.

பெரும் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சில அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அதன் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதில் வர்த்தக சபைகள் பங்கேற்க வேண்டும் என்பது என் ஆலோசனையாகும்.
அரசு, நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்கள், விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை நான் எப்போதுமே வலியுறுத்தி வருகிறேன்.
வேளாண்மையும், தொழில்துறையும் நம் நாட்டின் இரு கண்களாகும் மற்றும் வேளாண்மை நமது  அடிப்படைக் கலாச்சாரமாகும்.  ஆகவே, 2020-ஆம் ஆண்டுக்குள்  விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு பெரும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு சார்ந்த முயற்சிகள், வேளாண் சமுதாயத்திற்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும். சந்தேகமில்லாமல் இது ஒரு பெரிய பொறுப்புதான் எனினும், சம்பந்தப்பட்டவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளோடு எதையும் சாதிக்கலாம்.
குறிப்பிட்ட பகுதியின் தேவைகளை அடையாளம் கண்டு வர்த்தக சபை அதைத் தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளலாம்.
சமுதாயத்திலும் நிர்வாக பிரச்சினைகளிலும் வர்த்தக சபை செல்வாக்கின் மையத்திலிருந்து அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய கருத்துக்களை எடுத்துக் கூறலாம்.
திறன் வாய்ந்த இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதில் உங்களது அமைப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத் தரக்கூடிய திறனை வழங்குவதே தற்போதைய தேவையாகும். இந்தியாவில் 65 சதவீத மக்கள் 65 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்பது ஒரு மாபெரும் மக்கள் தொகை நன்மையாகும். இந்தியாவை ஒரு தயாரிப்பு மையமாக முன்னேற்றுவதற்காகவும் சிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக உருவாக்கவும் இளைஞர்களின் சக்தியை பயன்படுத்த  வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு பகுதியிலும் அங்குள்ள ஆதாரங்களின்  அடிப்படையில், கிராமப்பகுதிகளில் குடிசைத் தொழிலை வளர்ப்பதற்கு வர்த்தக சபை உதவிட வேண்டும். இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதோடு கிராமப்பகுதிகளைவிட்டு மக்கள் குடியேறுவதையும் தடுக்க முடியும். தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போன்று நகர்ப்புறமாக்கல் என்பது மாற்றியமைக்க முடியாத  நவீன காலத்தின் ஒரு முக்கிய கூறாகும். இதனை முழுவதுமாக தடுக்க முடியாது. எனினும், கல்வி, சுகாதாரம், தொழில்துறை மற்றும் விவசாயம் உட்பட பல துறைகளில் பல்வேறு முயற்சிகளின் மூலம் நமது கிராமப்புறங்களை பொருளாதார நடவடிக்கைகளின் சுறுசுறுப்பான மையங்களாக உருவாக்க வேண்டியது அவசியம்.
நல்வாழ்வுத்  துறையை பொறுத்தவரை  உங்களது வர்த்தக சபையின் உறுப்பினர்கள், பெரும் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நடவடிக்கைகளின் கீழ், அரசின்  முயற்சிகளுக்கு வலு சேர்க்க வேண்டும்.
புதிய ரயில் தடங்கள்,  கோயம்புத்தூர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக முன்னேற்றுவது மற்றும் கோயம்புத்தூர் பங்குச்சந்தையை அமைப்பது ஆகியவற்றில் உங்களது வர்த்தக சபை முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளது என்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
அது மட்டுமல்ல, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை வளர்க்கும் நோக்கத்தோடு பல அயல்நாடுகளின் ராஜாங்க அதிகாரிகளோடனான  கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
கோயம்புத்தூர் வர்த்தக மற்றும் தொழில் சபையின் அனைத்து  எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெய் ஹிந்த் !", என்று பேசினார்.
Based on Inputs from Maalai Malar and Press Information Bureau
Next Story