Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.டி ஊழியர்களிடையே உரையாடிய பிரதமர் : சென்னை காக்னிசென்ட் ஊழியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார் பிரதமர் மோடி

ஐ.டி ஊழியர்களிடையே உரையாடிய பிரதமர் : சென்னை காக்னிசென்ட் ஊழியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார் பிரதமர் மோடி

SG SuryahBy : SG Suryah

  |  24 Oct 2018 6:44 PM GMT

புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “ நான் அல்ல நாம்” என்ற இணையப் பக்கம் மற்றும் செயலியை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். சென்னை உட்பட பல்வேறு நகரங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களுடன் அவர் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டத்தை “பொதுச் சேவையில் நான்” என்ற நோக்கில் பயன்படுத்தவேண்டும் என்றும் கூறினார். சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், நாட்டின் நலனுக்கும் தமது பங்கினை அளிக்கமுடியும் என்பது குறித்து விரிவாக அவர் உரையாற்றினார்.
சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் முன்னேற்றத்திற்கும், நலனுக்கும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை உதாரணங்களுடன் அவர் விளக்கினார்.
இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்து பேசிய பிரதமர், பண்டைக் காலத்தில் மழைநீர் சேமிப்பு முறை இருந்ததை நினைவுகூர்ந்தார். குஜராத் போர்பந்தரில் உள்ள அண்ணல் காந்தி இல்லத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தக் கிணற்றை மழைநீர் மூலம் நிரப்பி எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த நிலை இப்போது மாறிப்போய்விட்டது என்று அவர் கூறினார்.
இருப்பினும், சமுதாய முன்னேற்றத்திற்காக தாங்கள் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது என்றார் . கைப்பிடி குடிநீர் குழாயிலிருந்து விழும் தண்ணீரை எப்படி மறுபடியும் பயன்படுத்துவது என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது என்பது விவசாயிகளின் வருவாயை அதிகப்படுத்தும். இதனை அரசால் மட்டும் செய்துவிட முடியாது என்றும், விவசாயிகள் மக்கள் இயக்கமாக இதனை மாற்றவேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கிராமங்களின் வயல்வெளிகளில் இரண்டு நிலப்பகுதிகளைப் பிரிக்கும் வரப்புகளில் மரங்களை நட்டு பயனடையலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார். நமது நாடு ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மரங்களை இறக்குமதி செய்வதாகவும், வரப்புகளில் மரங்களை வளர்ப்பதன் மூலம், 20 ஆண்டுகளில் இந்த இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிடமுடியும் என்றும் அவர் கூறினார்.
சென்னை தாம்பரத்தின் மெப்ஸ் சிறப்பு  பொருளாதார மண்டலத்தில் உள்ள காக்னிசென்ட் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள ஊழியர்களிடம் கலந்துரையாடியபோது, ஊழியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், சமுதாயத்தில் ஒய்வுபெற்ற அதிகாரிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வல்லுனர்கள் தங்களின் திறமைகள், அனுபவங்களை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக mygov.in  போன்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், கல்வி நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் கூறினார். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இதனை செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
[video width="640" height="360" mp4="http://www.kathirnews.com/wp-content/uploads/2018/10/tweet_20181025_000646.mp4"][/video]
“பொதுச் சேவைக்கு நான்” என்பதை வலியுறுத்திய பிரதமர், உங்களிடம் என்ன இருக்கிறதோ அதனை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் கூறினார்.
சுற்றுலாத் துறையில் தகவல் தொழில்நுட்பம் என்பது பற்றி விரிவாக பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டைச் சேர்ந்த அல்லது வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வந்தால், அவரது மொழியில் பேசுவதை தமிழ்மொழியில் மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சமூக தொழில் முனைவோராக இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும், சமூக டிஜிட்டல் தொழில் முனைவோராக உருவாவதன் மூலம் நகர்ப்புறங்களில் சேவையாற்ற முடியும் என்றும், சமூக எழுத்தறிவு தொழில் முனைவோராக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமங்களிலும் எழுத்தறிவைப் பரப்பமுடியும் என்றும் பிரதமர்  கூறினார்.
எட்டப்படாதவரையும் எட்டுவது என்பதும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதும் மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட திரு. நரேந்திர மோடி மத்திய அரசின் நலத் திட்டங்களை அடித்தட்டு மக்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்பங்களை உருவாக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
காணொளிக் காட்சி மூலம் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், புவனேஸ்வர், புனே, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் உள்ள  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். அவரது உரையை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் அதிகமான பொதுச் சேவை மையங்களில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்தனர்.
பிரதமரின் காணொளிக் காட்சி மூலமான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு. பிரகாஷ் ஜவ்டேகர், திரு. ரவிசங்கர் பிரசாத், திரு ஹர்ஷ்வர்தன், திரு. மனோஜ் சின்ஹா, திரு. எஸ்.எஸ். அலுவாலியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Inputs from Press Information Bureau
Next Story