Top
undefined
Begin typing your search above and press return to search.

சர்வதேச தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள மார்த்தாண்டம் மேம்பாலம் : போலி செய்திகளை இணையத்தில் பரப்பும் விஷமிகள்

சர்வதேச தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள மார்த்தாண்டம் மேம்பாலம் : போலி செய்திகளை இணையத்தில் பரப்பும் விஷமிகள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Nov 2018 7:15 AM GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ஆவது பெரிய நகரம் மார்த்தாண்டம். இங்கு ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன. இங்கு போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில் பம்மத்தில் இருந்து வெட்டுமணி வரை 2½ கிலோ மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது.
பாலம் பணி தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. அடுத்த மாதம் போக்குவரத்துக்கு இந்த மேம்பாலம் திறக்கப்பட இருக்கிறது. வாகனங்கள் இயங்க தொடங்கிய பிறகு பொதுமக்கள் மேம்பாலத்தின் ஓடுதளத்தில் நடந்து சென்று பார்க்க முடியாது. எனவே பொதுமக்கள் மேம்பாலத்தின் ஓடுதளத்தை பார்க்கவும், அதில் நடந்து சென்று ரசிக்கவும் நேற்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று மாலை 4 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக பாலம் திறந்துவிடப்பட்டது. மார்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் இருந்து மத்திய அமைச்சர் திரு.பொன். ராதாகிருஷ்ணன் பொதுமக்களுடன் நடந்து சென்று பாலத்தை பார்வையிட்டார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. முகமது இஸ்மாயில், பாலபிரஜாபதி அடிகளார் உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.
மத்திய அமைச்சர் திரு.பொன். ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ தேவாலயம் அருகே சென்ற போது, குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ், செயலாளர் ரசல்ராஜ், சி.எஸ்.ஐ. போதகர் தோவாஸ் ஆகியோர் மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நடந்து சென்று பார்வையிட்டனர்.
2½ கிலோ மீட்டர் தூர மேம்பாலத்தில் பொதுமக்கள் திரண்டு நின்று அதனை உற்சாகமாக ரசித்தனர். இதனால் மேம்பாலம் தெரியாத வகையில் மக்கள் தலையாக தென்பட்டன.
மேம்பாலத்தின் உயரமான பகுதிகளில் ஓரத்தில் நடந்து செல்லும் போது பாலம் ஆடுவதை உணர்ந்து பொது மக்கள் அச்சம் அடைந்தனர். பாலம் அதிரும் காட்சியை பலரும் பதிவு செய்து முகநூல், வாட்ஸ்  அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனை வைத்துக்கொண்டு விஷமிகள் பலரும் பல வகையான போலி செய்திகளை பரப்பி வருகின்றனர்.
சாதாரண பொது மக்கள் நடந்து செல்லும் போதே பாலம் ஆடுகிறது. வாகனங்கள்  செல்லும் போது பாலத்தின் நிலை என்னவாகும்? என்று அதிகாரிகள் உரிய விளக்க அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து மேம்பால வடிவமைப்பு  ஒருங்கிணைப்பாளர் இன்ஜினியர் ஷிபா கூறும்போது: இந்த மேம்பாலம் நவீன தொழில்நுட்பத்தில் மேலைநாட்டு உயர் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தூண்களை தாங்கும் அடிப்பகுதியில் உள்ள பியரிங் எனும் அமைப்பு, பாலத்தின் உயரம், எடைக்கு ஏற்றவாறு தன்னைத்தானே அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும்.  இவை வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டவை. சர்வதேச தரம் வாய்ந்தவை.
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அதிகபட்ச உயரம் 9.5 மீட்டர். குறைந்தபட்ச உயரம் 2.5 மீட்டர். பாலத்தில் உயரம் குறைந்த பகுதிகளில் அதிர்வு குறைவாக இருக்கும். ஆனால் உயரம் அதிகமான பகுதியில் அதிர்வை சற்று அதிகமாக உணர முடியும். இது போன்ற அதிர்வு  எல்லா பாலங்களிலும் இருக்கும். கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையேல் பாலம் விரிசல்  கண்டுவிடும். இது இயற்கையாகவே அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் மிகவும்  உறுதியானதுதான்.  பொது மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். ஐதராபாத், சென்னை, புனே ஐ.ஐ.டி நிபுணர்கள் சோதனை செய்து மேம்பாலத்தின் உறுதித் தன்மையை உறுதி செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள இந்த மேம்பாலத்தை பற்றி அறிவுபூர்வமாக அணுக விரும்பாத பலரும் இதை பற்றிய வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
Inputs from Dinathanthi and Dinakaran
Next Story