Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்ரீஹரிகோட்டாவிலுருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 29 : புதிய சாதனை படைத்த இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டாவிலுருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 29 : புதிய சாதனை படைத்த இஸ்ரோ

SG SuryahBy : SG Suryah

  |  14 Nov 2018 2:16 PM GMT

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. உயர் வகை தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள், இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் இந்த செயற்கைக்கோளை தாங்கி செல்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைக்கோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.

இந்த வெற்றியை குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் கூறுகையில்,
இந்திய மண்ணில் இருந்து இதுவரை இல்லாத வகையில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜிசாட்-29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த அனுபவம் சந்திரயான்-2 பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
நாடு முழுவதும் உள்ள டிஜிட்டல் முறைக்கு மிகச் சிறந்த தொலைத் தொடர்பு சேவைகளை இந்த செயற்கைக்கோள் வழங்கும் என்றும், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் குறிப்பாக ஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களையும் இந்த செயற்கைக்கோள் உள்ளடக்கும் என்றும் அவர் கூறினார்.
இஸ்ரோவுக்கு சவால்கள் நிறைந்துள்ளன என்று குறிப்பிட்ட டாக்டர் சிவன், 2019 ஜனவரிக்கு முன்னதாக 10 திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது என்றார்.
ககன்யான் பற்றி குறிப்பிட்ட அவர், இதில் பயணம் செய்வோரைத் தெரிவு செய்யும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், டிசம்பர் 2021 வாக்கில் இதன் பயணம் இருக்கும் என்றும் கூறினார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கும் இந்த அனுபவம் பயனுடையதாக இருக்கும் என்று டாக்டர் சிவன் தெரிவித்தார்.
சோதனை முறையிலான செலுத்தல்கள் இத்துடன் நிறைவடைவதாகவும், ஜி.எஸ்.எல்.வி. எம்-III செயல்பாட்டு செலுத்து வாகனங்கள் பட்டியலில் சேரவிருக்கிறது என்றும் அவர் கூறினார். அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை செலுத்தும் திறன் கொண்ட தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்ந்துள்ளதாக டாக்டர் சிவன் கூறினார்.
Source : PIB
Picture Courtesy : Times of India
Next Story