Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் முதல் தேசிய நீர்வழிச்சாலை ஒரு கண்ணோட்டம்

இந்தியாவின் முதல் தேசிய நீர்வழிச்சாலை ஒரு கண்ணோட்டம்

SG SuryahBy : SG Suryah

  |  17 Nov 2018 6:54 PM GMT

தேசிய நீர்வழிச் சாலை திட்டத்தில் கங்கை நீர்வழிச் சாலையும், வாரணாசி முனையமும் மத்திய அரசின் மிகமுக்கியமான திட்டங்களாகும்.கடந்த 12-ம் தேதி வாரணாசியில் கட்டப்பட்டுள்ள ``பல்வகை போக்குவரத்து முனைய" (multi modal) திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. வாரணாசியில் அமைந்துள்ள இந்த முனையம் மூன்று வகையான போக்குவரத்து வசதிகளை இணைக்க இருக்கிறது. அதாவது சாலை, ரயில்வே மற்றும் கங்கை நீர்வழிச் சாலை மூன்றையும் இணைக்கும் முனையமாக மாறவிருக்கிறது. பிரதமர் மோடி, திட்டத்தைத் தொடங்கி வைக்கும்போது, பெப்சிகோ நிறுவனத்தின் துரித உணவுகளைச் சுமந்து வந்த சரக்குக் கப்பலை பெற்றுக் கொண்டார்.


கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவிலுள்ள 111 ஆறுகளும், அவற்றின் வழித்தடங்களும் 'தேசிய நீர்வழிச் சாலைகள்' என நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே, இந்தியாவின் கங்கை நீர்வழிச் சாலை உட்பட ஐந்து திட்டங்கள் 'தேசிய திட்டங்களாக' அறிவிக்கப்பட்டன. தேசிய நீர்வழிச் சாலை திட்டத்தின் முக்கியமான நோக்கம், 111 நீர் வழிகளையும் வர்த்தக ரீதியிலான பெரிய ஓடங்கள், சிறிய சரக்குக் கப்பல்கள், மக்கள் பயணப்படும் சிறிய கப்பல்கள் செல்லும் வகையில் மாற்றுவதாகும்.


1986ஆம் ஆண்டு கங்கை, பாகிரதி, ஹூக்லி நதிகளை இணைத்து, ஹால்டியா முதல் அலகாபாத் வரை தேசிய நீர்வழிச் சாலை மேம்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின் இந்திய உள்நாட்டு நீர்வழிச்சாலை ஆணையம், உள்நாட்டு துறைமுகங்கள் உருவாக்குவது, நீர்வழிச் சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வந்தது. தற்போது 'ஜல் மார்க் விகாஸ்' திட்டத்தின்படி ஹால்டியா முதல் வாரணாசி வரை சுமார் 1,390 கிலோமீட்டர் தூரம் வரையிலான நீர்வழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் 1,500 முதல் 2,000 டன் எடை கொண்ட சரக்கு கப்பல்கள் செல்ல முடியும். உலக வங்கியிடம் இருந்து கிடைத்த 5,369 கோடி ரூபாய் நிதியின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


இந்த சாலை வழியாக செல்லும் முதல் சரக்கு கப்பல் எம்.வி ரவீந்திரநாத் தாகூர், கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு வாரணாசி வந்தது. பெப்சிகோ நிறுவனத்துக்கு சொந்தமான 16 கண்டெய்னர்களை இந்த சரக்கு கப்பல் கொண்டு வந்தது. இஃப்கோ நிறுவனத்துக்கு சொந்தமான உரங்களை திருப்பி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. வாரணாசியில் முதல் உள்நாட்டு துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, எம்.வி ரவீந்திரநாத் தாகூரை வரவேற்றார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கப்பல்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


இந்த திட்டத்தின்படி, 3 துறைமுகங்கள், வாரணாசி, சாஹிப்கஞ் மற்றும் ஹால்டியா பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. இந்த நீர்வழிச்சாலையால், கொல்கத்தாவிலிருந்து வாரணாசிக்கு சரக்கு கப்பல் வந்துசேர 13 நாட்கள் ஆகுமாம். இதனால் சரக்கு பரிமாற்றத்திற்காக ஆகும் செலவு குறைவதோடு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுபடும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story