Top
undefined
Begin typing your search above and press return to search.

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையீடா? காங்கிரஸ் புகாருக்கு பதிலடி கொடுத்த அருண் ஜெட்லி!

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையீடா? காங்கிரஸ் புகாருக்கு பதிலடி கொடுத்த அருண் ஜெட்லி!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  25 Nov 2018 12:22 AM GMT

ரிசர்வ் வங்கியில் சேமிப்பாக உள்ள பணத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிக பணத்தை மத்திய அரசு கேட்பதாகவும் புகார் எழுந்தது. இதனால் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்ய உர்ஜித் படேல் முடிவு செய்திருப்பதாகவும், பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசிய பின் தமது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் போலி தகவல்கள் வெளியாகின.


இந்த நிலையில் இது குறித்த சர்ச்சை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அடுத்த 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசுக்கு பணம் தேவையில்லை என்றார். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை மத்திய அரசு மதிப்பதாகவும் அவர் கூறினார். அதே சமயம், பணப்புழக்கம் மற்றும் கடன் வசதி இன்றி சில துறைகள் பாதிக்கப்படும்போது அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியிருப்பதாகவும், ரிசர்வ் வங்கியின் மூலம் இதையே செய்வதாகவும் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


முன்னதாக ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திலும், தன்னாட்சி அதிகாரத்திலும் மத்திய பா.ஜ.க அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ரிசர்வ் வங்கியை கைப்பற்றி, அதன் வசம் உள்ள உபரி மூலதனத்தை கட்டுக்குள் கொண்டுவர மோடி அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. நிதிப் பற்றாக்குறை நெருக்கடியில் உள்ள மத்திய அரசு, தேர்தல் வர இருப்பதால் திட்டச்செலவுகளை அதிகரிக்க எண்ணுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
இதற்கு வேறு வழியில்லாததால், ரிசர்வ் வங்கியின் சேம இருப்பில் இருந்து 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கேட்பதாகவும் அவர் புகார் கூறியிருந்தார். இதை அப்போதே மத்திய அரசு மறுத்திருந்த நிலையில், அதன் பிறகு ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு கூட்டமும் நடைபெற்று, ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார்.

Next Story