Top
undefined
Begin typing your search above and press return to search.

இன்று 166 சகோதரர்களை பலிகொடுத்த மும்பை தாக்குதல் தினம் கடைபிடிப்பு - பிரதமர் மோடி அஞ்சலி

இன்று 166 சகோதரர்களை பலிகொடுத்த மும்பை தாக்குதல் தினம் கடைபிடிப்பு - பிரதமர் மோடி அஞ்சலி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  26 Nov 2018 8:07 AM GMT

பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட பயங்கரவாதிகள் கடல் வழியாக இந்தியாவின் வர்த்தக தலைநகரம் மும்பைக்குள் புகுந்து 166 அப்பாவி பொது மக்களை ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்று குவித்து நமது தேசத்தை சோகத்துக்கு உள்ளாக்கிய நாள் இன்றாகும். இன்றுடன் அந்த துக்க சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்த சம்பவத்தில் உயிர் நீத்த அனைவருக்கும் நம் பாரத பிரதமர் மோடி அஞ்சலி தெரிவித்துள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1066890229158678528?s=20
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய தாக்குதல் சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். உயிருடன் பிடிபட்ட இவனுக்கு உரிய தண்டனை வழங்குவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. கசாப் விஷயத்திலும் சிறுபான்மையினரை மகிழ்ச்சி படுத்தும் விதத்தில் அவன் தொடர்பான வழக்கில் சரியான தீர்வை அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் காண இயலவில்லை.
தேச பாதுகாப்பு தொடர்பான இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசு திறமையாக நடந்து கொள்ளவில்லை என்றும், உடனடியாக கசாப்புக்கு மரண தண்டனை வழங்குவதுடன், இந்த சதித்திட்டத்துக்கு பின்னணியில் இருந்து வரும் லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர்கள் ஹபீஸ் சையது, ஜக்கியூர் ரகுமான் லக்வி ஆகியோரையும் இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி அவர்களுக்கும் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனக்கோரி இந்தியா முழுவதும் பா.ஜ.க போராட்டங்கள் நடத்தி வந்தது. லஷ்கர்-ஏ-தொய்பாவுக்கு எதிரான கண்டனக் குரல்கள் நாடு முழுவதும் எழுந்தன. இந்த நிலையில் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் நிலையில் குஜராத்தில் மீண்டும் மோடி தலைமையிலான அரசுக்கே மக்கள் வாக்களிப்பார்கள் என ஊடகங்களும், தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளும் கூறி வந்த நிலையில் தேர்தல் அரசியலை கணக்கில் கொண்டு கசாப் விவகாரம் துரித கதியில் நடத்தப்பட்டு, நீண்ட வழக்கு விசாரணைக்கு பிறகு, கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதி கசாப் தூக்கிலிடப்பட்டான்.
பிரதமர் மோடி அஞ்சலி
உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், அதில் உயிர்தியாகம் செய்தவீரர்களுக்கும் பிரதமர் மோடி டுவிட்டரில் அஞ்சலி செலுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில், பயங்கரமான மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் எனது அஞ்சலி. இதில் உயிர் தியாகம் செய்தநமது வீரர்களின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மும்பை தாக்குதலின் போது பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட நமது துணிச்சலான போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு தேசம் தலைவணங்குகிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு தங்களின் பங்களிப்பை அளித்து, பாடுபட்ட அனைவரையும் இந்நாளில் நாம் நினைவு கூற வேண்டும். நமது அரசியமைப்பிற்காக நாம் பெருமை கொள்வோம். அதன் மாண்புகளை நிலைநிறுத்த உறுதி பூணுவோம் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Next Story