Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா ஒரு போதும் அவர்களை மறக்காது, அதற்காக தான் காத்திருக்கிறோம் - பிரதமர் மோடி உறுதி.!

இந்தியா ஒரு போதும் அவர்களை மறக்காது, அதற்காக தான் காத்திருக்கிறோம் - பிரதமர் மோடி உறுதி.!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Nov 2018 1:54 AM GMT

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் கடந்த 2008-ம் ஆண்டு,  நவம்பரில்  ஊடுருவினர். இவர்கள் மும்பையின் பிரபல தாஜ் ஓட்டல் உட்பட பல்வேறு இடங்களில் தாக்குதலை நிகழ்த்தி,  இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் 166 பேரை கொன்று குவித்தனர்.இந்த தாக்குதல் சம்பவம்,  உலகை அதிரச் செய்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அளவு பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தினை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் இன்னும் சிக்கல் எழுந்தது. இத்தீவிரவாதிகளில் 9 பேர், பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் பிடிபட்டான். விசாரணையின் முடிவில் பின்னர் தூக்கிலிடப்பட்டான். தீவிரவாதிகளுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் முதலில் மறுத்தது. பின்னர் அஜ்மல் கசாப் மற்றும் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் என ஒப்புக்கொண்டது.


இத்தாக்குதலில் தொடர்புடையவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது. தங்கள் நாட்டிலேயே விசாரணை நடத்தி தண்டிப்பதாக கூறி வந்ததோடு, போதிய ஆதாரங்கள் இல்லை என்று இந்த வழக்கை முடக்கும் வகையில் செயல்பட்டது. இதனிடையே இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் முக்கிய தீவிரவாதி முகமது கனி உஸ்மானை, கடந்த 2016-இல் ஆஸ்திரியாவில் போலீசார் கைது செய்தனர். கடந்த 2007-இல் மும்பையில் தீவிரவாத தாக்குதலை அரங்கேற்றியது பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட அமைப்பு தான் என அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் முகமது அலி துரானி தெரிவித்துள்ளார். அதே சமயம், பாகிஸ்தான் அரசுக்கு இதில் தொடர்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்ட 10-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. நேற்று ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, "மும்பை தாக்குதலையும், அதனை நடத்தியவர்களையும் இந்தியா ஒரு போதும் மறக்காது. நாங்கள் அதற்கான வாய்ப்புக்கு காத்திருக்கிறோம்... சட்டம் அதனுடைய கடமையை செய்யும் என்பதை தேச மக்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்றார். பாதிக்கப்பட்டவர்களுடன் இருப்பதாக கூறிய அவர் நீதி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Next Story