Top
undefined
Begin typing your search above and press return to search.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்பு, டில்லி சென்று அறிக்கை சமர்பிப்பு : மத்திய குழு அதிகாரிகள்

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்பு, டில்லி சென்று அறிக்கை சமர்பிப்பு : மத்திய குழு அதிகாரிகள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  28 Nov 2018 3:00 AM GMT

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தஞ்சாவூர், புதுக்கோட்டை,நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில், பயிர் சேதம் மட்டுமின்றி, விவசாயிகள், பொதுமக்கள், தங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். புயல் பாதிப்புகளை, முதல்வர் பழனிசாமி, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின், டில்லி சென்ற அவர், பிரதமரை சந்தித்தார். புயல் பாதிப்பு குறித்து விவரித்து, நிவாரண நிதியாக, ₹15,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, வலியுறுத்தினார்.


இந்த நிலையில், மத்திய உள்துறை இணை செயலர் டேனியல் ரிச்சர்டு தலைமையில், ஏழு பேர் கொண்ட குழுவை, மத்திய அரசு, தமிழகத்திற்கு அனுப்பியது. இக் குழுவினர், புயல் பாதித்த மாவட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். எதிர்பார்த்ததை விட அதிகபாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தனர். காரைக்கால் பகுதிகளிலும் ஆய்வு செய்த அவர்கள் புதுச்சேரி முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்திவிட்டு தலைமை செயலகம் வந்த மத்திய குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.


ஆலோசனை முடிந்த பிறகு, மத்திய குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயலால்பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்தோம். ஏராளமான வாழை, தென்னை, மரங்கள் உள்ளிட்டவை முறிந்துள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. ஏராளமான வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்ட இழப்பு மற்றும் மக்களின் துயரங்களை நேரில் அறிந்தோம். புயல் கரையை கடந்த போது, எதிர்பார்த்ததை விட ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்க அனைத்து துறைகளும் இயங்கி வருகின்றன. டில்லி சென்று, எங்களின் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Picture Courtesy : One India Tamil
Next Story