Top
undefined
Begin typing your search above and press return to search.

உலக நாடுகளிடம் நல்லிணக்கம் பேணும் பிரதமர் மோடி - மாற்றத்தை கொண்டுவரும் ஜி-20 மாநாடு

உலக நாடுகளிடம் நல்லிணக்கம் பேணும் பிரதமர் மோடி - மாற்றத்தை கொண்டுவரும் ஜி-20 மாநாடு

SG SuryahBy : SG Suryah

  |  29 Nov 2018 7:30 PM GMT

20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors), ஜி-20 கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.
ஜி-20 நாடுகளின் பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85% உம், உலக வணிகத்தில் 80% உம், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது. ஜி-20 அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர். இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் வளர்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஜி-20' 13-வது மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறுகிறது.



இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் பயணமாக நேற்று (28.11.2018) அர்ஜென்டினா புறப்பட்டு சென்றார். டிசம்பர் 2–ந் தேதி அவர் இந்தியா திரும்புகிறார். அங்கு சீன அதிபர் ஜின்பிங், அமெரிக் அதிபர் டிரம்ப்பையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.



அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள இந்தியா-சீனா இணைந்து செயல்பட வேண்டும் என அந்நாடு தெரிவித்திருந்த நிலையில், சீன அதிபருடனான சந்திப்பின்போது இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.  அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது ஈரானில் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதி அளித்ததற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிக்க உள்ளார்.



மேலும் கச்சா எண்ணெய் விலையேற்றம், வர்த்தக சீர்திருத்தங்கள், டிஜிட்டல் புரட்சி, எல்லைதாண்டிய பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். மேலும், இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசவுள்ளார். 2 நாள் ஜி-20 மாநாட்டை முடித்துக் கொண்டு டிசம்பர் 2-ம் தேதி பிரதமர் மோடி டெல்லி திரும்ப உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Next Story