Kathir News
Begin typing your search above and press return to search.

மறக்க முடியாத புரட்சி பெண்மணி ஜெயலலிதா -  இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் "ஓர் நினைவு அஞ்சலி"!

மறக்க முடியாத புரட்சி பெண்மணி ஜெயலலிதா -  இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் "ஓர் நினைவு அஞ்சலி"!

மறக்க முடியாத புரட்சி பெண்மணி ஜெயலலிதா -  இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் ஓர் நினைவு அஞ்சலி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2018 10:13 AM GMT

தமிழக அரசியலில் மக்கள் மனதில் இடம் பிடித்து நன் மதிப்பை பெற்ற அரசியல்வாதிகள் ஒரு சிலரே. அவர்களில் மக்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்து, முழு அன்புக்கு பாத்திரமானவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் எம்.ஜி.ஆர், இன்னொருவர் ஜெயலலிதா. இருவரையும் மக்கள் புரட்சி தலைவர் என்றும், புரட்சித் தலைவி என்றும் மனமார ஏற்றுக் கொண்டனர். ஜெயலலிதா அவர்களைப் பொறுத்தவரை தமிழக பெண்கள் மனதில் அவர் இடம் பிடித்தது போல வேறு யாராலும் இடம் பிடித்திருக்க முடியாது. குறிப்பாக கிராமப்பகுதிகளில் பெண்களிடையே அவருக்கிருந்த செல்வாக்கு யாராலும் அசைக்க முடியாமல் இருந்தது. அவரிடமிருந்த தைரியம், பெண்கள் மீது காட்டிய அக்கறை, ஏழைகள் பால் காட்டிய அபிமானம், பொது சொத்துக்களை காப்பாற்றுவதில் அவருக்கிருந்த அக்கறை, சட்டம் ஒழுங்கை அவர் கட்டிக் காத்த விதம், பெருவாரியான மக்களை அவர் பக்கம் கட்டிப் போட்டிருந்தது.


அவருடைய செல்வாக்குக்கும், தொடர் வெற்றிக்கும் காரணம் அவர் அளித்த இலவசங்கள்தான் என சில குதர்க்கவாதிகள் குறை சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல. தான் அளிக்கும் இலவசங்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனையுடன் இலவச திட்டங்களை செயல்படுத்தியவர் அவர். மேல் நிலைக் கல்வியில் தமிழக பெண்கள் பின் தங்கியுள்ளதைக் கண்ட அவர் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு முதன் முதலாக இலவச சைக்கிள் திட்டத்தை தொடக்கி வைத்தார். அந்த சைக்கிள்களை ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக மாணவிகளின் சீருடைகளை சுடிதார்களாக மாற்றியது பெண்களின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை பாவாடை தாவணிகளுக்குள்ளும், சேலை ரவிக்கைக்குள்ளும் தங்கள் வலிமையினையும், முன்னேற்றத்தையும் சிறை வைத்திருந்த பெண்கள் சுதந்திர பெண்களாகவும், அனைத்து துறைகளிலும் முன்னேறக்கூடிய பெண்களாகவும் மாறுவதற்கு திருப்பு முனையாக அமைந்தது ஜெயலலிதா அவர்களின் இந்த புரட்சிகரமான சிந்தனைதான். இன்றை கிராமப்புற இளம் மற்றும் நடுத்தர பெண்களில் 90 சதவீதம் பேர் சைக்கிள் மட்டும் அல்ல, இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களையும் இயக்குகிறார்கள். விவசாயக் குடும்பங்களை சேர்ந்த பல பெண்கள் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் விவசாயத்துக்கு தேவையான இடுபொருள்களை வயலுக்கு எடுத்துச் செல்கிறார்கள், பல பெண்கள் பொருள்களை சைக்கிள்களில் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

உடல் நலம் சரியில்லாத தனது கணவன்மார்களை இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து பல பெண்கள் மருத்துவ மனைக்கு அழைத்து செல்வதை கிராமங்களில் காணலாம். காவல் துறையில் வீராங்கணைகளாக பெண்கள் உருவாகக் காரணமே ஜெயலலிதாவை தங்கள் ரோல் மாடலாக அவர்கள் நினைத்துக் கொண்டதுதான் எனக் கூறலாம். அனைத்து மகளிர் காவல் நிலையங்களை அவர் நிறுவியது பெண்கள் பாதுகாப்பில் அவர் காட்டிய அக்கறைக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகும். கிராமங்களில் வருவாய் துறையினர் நடத்தி வரும் அம்மா முகாம்கள், நகர்புற ஏழைகள் பயனடையும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அம்மா உணவகங்கள் இவை மக்களின் நெஞ்சில் மறக்க முடியாத திட்டங்களாகும்.

அகில இந்திய அளவில் ஜெயலலிதா அவர்கள் பிரபலமாக பேசப்பட்டதற்கும், மதிப்புடன் அவர் பார்க்கப்பட்டதற்கும் இருக்கும் இன்னொரு காரணம் தான் ஒரு திராவிட கட்சியின் தலைவியாக இருந்தாலும், பாரத ஒருமைப்பாட்டின் சின்னமாக திகழ்ந்தார். சிறந்த தேசிய சிந்தனைகள் உடையவராக இருந்தார். அவரிடமிருந்த கடவுள் பக்தி, இந்து சமய பற்று போன்றவற்றை தன் கட்சியினரையும் பின்பற்ற வைத்தார். பா.ஜ.க-வுக்கும், அவருக்கும் கடந்த 2016 சட்டசபை போது தேர்தலின் போது அரசியல் ரீதியான இடைவெளி ஏற்பட்டிருந்தாலும், வெற்றி பெற்ற பிறகு அவர் பா.ஜ.க-வை நோக்கி நெருங்கி வந்தார் எனக் கூறலாம்.

மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயலை தனது வீட்டுக்கே விருந்தினராய் வரவழைத்து உதய் திட்டங்கள் குறித்து அறிந்துக் கொண்டது, அப்போது நகர்புற அபிவிருத்தி அமைச்சராக இருந்த வெங்கைய நாயுடு பங்கேற்கும் கூட்டங்களில் பேசும்போது மத்திய அரசு மீதான நல்ல அபிமானங்களை வெளிப்படுத்தியது, கவர்னராக வித்யாசாகர் ராவ் அறிவிக்கப்பட்டு அவர் முதன் முதலாக சென்னை விமான நிலையம் வந்த போது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் விமான நிலையம் வரை சென்று கவர்னரை அன்புடன் வரவேற்றது இவை எல்லாம் மத்திய பா.ஜ.க அரசுடன் அவர் மேற்கொண்ட புதிய அணுகுமுறைகளாக தெரிந்தது. இது தொடர்ந்து நீடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டபோதுதான் அவர் உடல் நலம் குன்றி உயிரிழந்து நம்மை சோகத்தில் ஆழ்த்திவிட்டார்.

இன்றைக்கும் மெரீனா கடற்கரைக்கு சுற்றுலா வருகிற கிராமப்புற மக்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அவரை நினைத்து தேம்பி, தேம்பி அழுவதைப் பார்க்கையில் எப்படிப்பட்ட சக்தி நம்மிடையே வாழ்ந்து மறைந்திருக்கிறது என்பதை உணரலாம். முதல்வர் பதவி ஏற்பு விழாவில் உறுதி மொழி வாசிக்கும்போது அவர் தொடங்கும் "ஜெ ஜெயலலிதா... என்னும்... நான்..." என்ற வார்த்தைகளின் ஒலி, அதில் ஒளிந்திருக்கும் கம்பீரம் அதை யாராலும் மறக்க முடியாது. அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமன்றி, பெருவாரியான மக்களால் அம்மா என்றழைக்கப்பட்ட அந்த அம்மையாருக்கு கதிர் பத்திரிக்கையின் சார்பில் எங்கள் இரண்டாமாண்டு நினைவு நாள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வணங்குகின்றோம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News