Top
undefined
Begin typing your search above and press return to search.

குஜராத் பள்ளி, கல்லூரிகளில் சர்தார் படேலின் ஒற்றுமையின் சிலை

குஜராத் பள்ளி, கல்லூரிகளில் சர்தார் படேலின் ஒற்றுமையின் சிலை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  15 Dec 2018 8:30 AM GMT

இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர். பல்வேறு மாகாணங்களாக இருந்த இந்தியாவை, சுதந்திரம் பெற்ற பிறகு ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இந்த நிலையில் சர்தார் படேலுக்கு குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் ‘சாதுபெட்’ என்ற இடத்தில் 182 மீட்டரில் பிரமாண்ட சிலை அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், இதற்கு 'ஒருமைப்பாட்டு சிலை' எனப் பெயர் வைக்கப்பட்டது. சிலையுடன் இந்த வளாகத்திலேயே பெரிய பூங்கா, ஹோட்டல், மாநாடு மையம், பொழுதுபோக்கு பூங்கா, ஆராய்ச்சி நிலையம், கண்காட்சி மையம் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக ₹3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி அதற்கான பணிகளைச் செய்து வந்தது. இரும்பு மனிதர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இரும்பில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த நாளன்று ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் ₹3,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டதாகும். நர்மதை ஆற்றங்கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை உயரத்தை விட இருமடங்கு உயரம் கொண்டது.
தற்போது குஜராத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஒற்றுமையின் சிலை எனப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரதி சிலையை நிறுவ அம்மாநில அரசு கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. குஜராத் அரசின் ஏக்தா யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட பிரதி சிலைகள் பின்னர் பள்ளி, கல்லூரிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. அந்த சிலை பிரதிகளை கல்வி நிறுவனங்களில் நிறுவ கூடுதல் தலைமைச் செயலாளரான ஏ.எம். திவாரி கையெழுத்திட்ட சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது.
மேலும் அந்த சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் பிரதிகளை நிறுவுவதற்கு பெடஸ்டல் ஒன்றை அமைக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக அவர்கள் பெரிய மண்டபத்தில் அல்லது சங்கிலி அல்லது கயிறு மூலம் நேர்த்தியான பாதுகாப்பு ஃபென்சிங் மூலம் வேறு எந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் நிறுவப்படலாம் என்றும் அறிவுறுத்தியள்ளது.சர்தார் வல்லபாய் படேலின் நினைவு நாளான டிசம்பர் 15-ம் தேதி தேதிக்குள் பிரதிகளை நிறுவ வேண்டும் என்றும் கோரியுள்ளது.
Next Story