Top
undefined
Begin typing your search above and press return to search.

₹2.33 லட்சம் கோடி வாராக் கடன்கள் வசூல், ஏற்றுமதி $2,650 கோடி அதிகரிப்பு, பணவீக்கம் 4.64 % வீழ்ச்சி : 4 ஆண்டுகால மோடி சர்க்காரின் சாதனைகள்

₹2.33 லட்சம் கோடி வாராக் கடன்கள் வசூல், ஏற்றுமதி $2,650 கோடி அதிகரிப்பு, பணவீக்கம் 4.64 % வீழ்ச்சி : 4 ஆண்டுகால மோடி சர்க்காரின் சாதனைகள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  16 Dec 2018 6:13 PM GMT

கடந்த நான்கரை ஆண்டுகால மோடி சர்க்காரில் பொதுத் துறை வங்கிகள் வழங்கிய ₹2.33 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை வசூல் செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர்,
"கடந்த 2014-15 முதல் 2017-18 வரையிலான நான்கு ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகள் ₹2,33,339 கோடி மதிப்பிலான வாரக் கடன்களை வசூல் செய்துள்ளன. நடப்பாண்டு செப்டம்பர் 30  நிலவரப்படி, நாட்டின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் பாரத ஸ்டேட் வங்கியின் வாராக் கடன் ₹2.02 லட்சம் கோடியாக இருந்தது. மேலும், இதைத்தவிர எஞ்ச்சியுள்ள 20 பொதுத் துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொத்த வாராக் கடன் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ₹80,993 கோடியாகவும், ஐ.டி.பி.ஐ வங்கியின் வாராக் கடன் ₹50,690 கோடியாகவும், பேங்க் ஆஃப் இந்தியா கடன் ₹50,338 கோடியாகவும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாராக் கடன் ₹48,575 கோடியாகவும் உள்ளன. இதைத் தவிர, பேங்க் ஆஃப் பரோடா வாராக் கடன் ₹46,454 கோடியாகவும், கனரா வங்கியின் வாராக் கடன் ₹41,907 கோடியாகவும், சென்டரல் பேங்க் ஆஃப் இந்தியா கடன் ₹37,411 கோடியாகவும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாராக் கடன் ₹35,607 கோடியாகவும், யூகோ வங்கியின் வாராக் கடன் ₹28,822 கோடியாகவும் உள்ளன. கடந்த 2008 மார்ச் இறுதியில் ₹16.98 லட்சம் கோடியாக இருந்த பொதுத் துறை வங்கிகள் வழங்கிய ஒட்டு மொத்த கடன் 2014 மார்ச் இறுதி நிலவரப்படி ₹45.91 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது", என சுக்லா தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி $2,650 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவின் ஏற்றுமதி சென்ற நவம்பர் மாதத்தில் $2,650 கோடி
அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்ததாவது:
நாட்டின் ஏற்றுமதி நவம்பரில் $2,650 கோடியாக (₹1.85 லட்சம் கோடி) இருந்தது. கடந்தாண்டு இதே மாத கால அளவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி மதிப்புடன் ஒப்பிடுகையில் இது வெறும் 0.80 சதவீதம் மட்டுமே அதிகம்.
அதேசமயம், இறக்குமதி 4.31 % உயர்ந்து $4,317 கோடியாக (₹3.02 லட்சம் கோடி) காணப்பட்டது. ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி கணிசமாக அதிகரித்ததையடுத்து வர்த்தக பற்றாக்குறை இடைவெளி $1,667 கோடி டாலராகி (₹1.16 லட்சம் கோடி) உள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதியானது 15.6 சதவீதம் சரிவடைந்து $275 கோடியாக இருந்த போதிலும் வர்த்தக பற்றாக்குறையானது அதிகரிப்பைக் கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத கால அளவில் ஏற்றுமதி 11.58 சதவீதம் உயர்ந்து $21,752 கோடியை எட்டியுள்ளது. அதே சமயம், இறக்குமதி 14.71 சதவீதம் அதிகரித்து $34,564 கோடியாகியுள்ளது. இந்த கால கட்டத்தில் வர்த்தக பற்றாக்குறை $12,813 கோடி டாலரைத் (₹8.97 லட்சம் கோடி) தொட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் வர்த்தக பற்றாக்குறை $10,637 கோடியாக காணப்பட்டது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுப்பணவீக்கம் 4.64 சதவீதமாக குறைவு
மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் நவம்பரில் 4.64 சதவீதமாக குறைந்துள்ளது. இது, மூன்று மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். உணவுப் பொருள்கள் அதிலும் குறிப்பாக, காய்கறிகள் மற்றும் சில பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து இந்த நிலை ஏற்பட்டது. நாட்டின் பொதுப் பணவீக்கமானது அக்டோபர் மாதத்தில் 5.28 சதவீதமாகவும், கடந்தாண்டு நவம்பரில் 4.02 சதவீதமாகவும் காணப்பட்டது.
உணவுப் பொருள்களின் விலை அக்டோபரில் 1.49 சதவீதம் குறைந்திருந்த நிலையில், நவம்பரில் இது 3.31சதவீதமாக இருந்தது.
அதே போன்று காய்கறிகளின் விலையும் நவம்பரில் 26.98 சதவீதம் குறைந்திருந்தது. இது, அக்டோபரில் 18.65 சதவீதமாக காணப்பட்டது. மேலும், நவம்பரில் எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கான பணவீக்கம் 16.28 சதவீதமாகவே அதிகரித்திருந்தது. இருப்பினும் அக்டோபர் மாத பணவீக்க அளவான 18.44 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவானதாகும். இதற்கு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததையடுத்து, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதே முக்கிய காரணம். உணவுப் பொருள்களில், உருளைக்கிழங்கின் விலை நவம்பரில் 86.45 சதவீதம் அதிகரித்திருந்தது. அதே சமயம், வெங்காயத்தின் விலை 47.60 சதவீதம் குறைந்திருந்தது. பருப்பு வகைகளுக்கான பணவீக்கம் 5.42 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இதற்கு முன்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் பொதுப் பணவீக்கம் குறைந்தபட்ச அளவாக 4.62 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதன் பிறகு, மூன்று மாதங்கள் கழித்து நவம்பரில்தான் பொதுப் பணவீக்கம் இந்த அளவுக்கு குறைந்துள்ளது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. முந்தைய மதிப்பீட்டில் செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கம் 5.13 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதனை 5.22 சதவீதம் என உயர்த்தி மறுமதிப்பீடு செய்துள்ளதாகவும் அந்த புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது.
Next Story