Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய பசுமை ஆணையம் உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் உடனே திறக்க வேண்டும்: தமிழக தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக சம்மேளனங்கள் கோரிக்கை

தேசிய பசுமை ஆணையம் உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் உடனே திறக்க வேண்டும்: தமிழக தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக சம்மேளனங்கள் கோரிக்கை

தேசிய பசுமை ஆணையம் உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் உடனே திறக்க வேண்டும்: தமிழக தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக சம்மேளனங்கள் கோரிக்கை

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2018 2:49 PM GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டுமென தமிழக தொழிற் வர்த்தக சம்மேளனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


துாத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சென்ற மே, 22 ல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில் வன்முறை வெடித்தது. போலீசாரின் துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலியாயினர். இச்சம்பவம் பீதியை ஏற்படுத்தியதால் ஸ்டெர்லைட் ஆலை, மூடி தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆலை மூடப்பட்டதால் 3 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள்கள், 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மேலும் ஆலையை நம்பி தொழில் நடத்தி வந்த சிறு ஆலைகள் மற்றும் சிறு போக்குவரத்து நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் யாரோ ஒருசிலரின் தூண்டுதலில், ஒரு குறிப்பிட்ட குழுவினர் போராட்டம் நடத்தினார்கள் என்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆலையில் வேலை பார்த்தவர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் நான்கு மாதம் முன்பே மனு அளித்தனர்.


கேன்சர் நோய் என வதந்தி


அப்போது கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆலையை உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


அப்போது அங்கு வந்திருந்த வீரபாண்டியபுரத்தை பெண்கள் பேசுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் வாழ்கிறோம். எங்களுக்கு எந்த நோயும் இல்லை. கேன்சர் நோய் என வதந்தி பரப்பியுள்ளனர். ஆலை இயங்கியது வரை எங்களுக்கு ஆலை சார்பாகக் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இப்போது கடந்த ஒரு மாதமாகக் கார்ப்பரேஷன் தண்ணீர் கூட வரவில்லை. ஆலையால் கிடைத்து வந்த சின்னச் சின்ன வேலைகளும் தற்போது இல்லாததால், குழந்தைகளுக்கு ஸ்கூலில் கட்டணம் கட்டக்கூட முடியவில்லை. எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அவருடன் வந்திருந்த பெண்களும் அவ்வாறே கூறியதாக பத்திரிகைகள் படத்துடன் செய்திகள் வெளியிட்டிருந்தன.


லாரி உரிமையாளர்கள் மனு:


அடுத்த சில நாட்களில் லாரி உரிமையாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்த சிறு, குறு தொழிலாளர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த பல சிறு, குறு தொழில்கள் நலிவடைய தொடங்கியுள்ளன. ஆலைக்குத் தாமிர தாது, ராக் பாஸ்பேட், நிலக்கரி ஏற்றி வந்த 1000-க்கும் அதிகமான லாரிகள் வேலை இழந்துள்ளன. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை இல்லாததால், வீட்டு வாடகை, பிள்ளைகளின் படிப்பு, அத்தியாவசிய செலவு, வங்கிக் கடன்கள் கட்ட முடியாமல் தவிக்கிறோம். இதனால் ஆலையைத் திறக்க வேண்டும், என கூறினர்.


வேலை இழந்த தொழிலாளர்கள் மனு


இந்த நிலையில் சமீபத்தில் துாத்துக்குடி வந்த, செய்தித் துறை அமைச்சர் ராஜுவை சந்தித்த ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை மூலம், துாத்துக்குடி, பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை, 1996ல் செயல்பட துவங்கியதில் இருந்தே, அதில், நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த, 70 சதவீதம் பேர் பணியாற்றினர். நேரடி பணியாளர்களாக, 1,100 பேரும், ஒப்பந்த தொழிலாளர்களாக, 5,000 பேரும் பணியாற்றினர். லாரி தொழிலாளர்கள், சப்ளையர்கள் என, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். ஸ்டெர்லைட் நிறுவனம் மீது, ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் ஆலை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. ஆலையில் இருந்து, ஒரு சொட்டு கழிவு நீர் கூட வெளியேற்றப்படவில்லை. அனைத்து விதமான திரவ கழிவுகளும், உள்ளேயே, உலகத்தரம் வாய்ந்த கருவிகள் உதவியுடன் சுத்திகரிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் துாத்துக்குடியில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாகியுள்ளது என்ற குற்றச்சாட்டிலும் உண்மையில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புள்ளி விபரங்களின் படி, புற்றுநோய் பாதிப்பில், துாத்துக்குடி, 14 வது மாவட்டமாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் மூலம், துாத்துக்குடி வளர்ச்சியடைந்துள்ளது. துாத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆண்டுதோறும் நடக்கும் ஏற்றுமதி, இறக்குமதியில், 17 சதவீத வருமானம், ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் கிடைத்து வந்தது.


ஆலை மூடியதால் பொருளாதார இழப்பு

குறிப்பாக, ஓர் ஆண்டுக்கு தாமிர தாது, 10 லட்சம் டன்னும், ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் இருந்து ராக்பாஸ்பேட் எனும் தாதுப்பொருள், 7 லட்சம் டன்னும் இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும், 'சல்ப்யூரிக் ஆசிட்' எனப்படும் கந்தக அமிலம், பல்வேறு தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாக பயன்படுகிறது.


துாத்துக்குடியில் ஸ்பிக் தொழிற்சாலை, கொச்சி பேக்ட் தொழிற்சாலை, கோழித்தீவன தொழிற்சாலைகள், சோப்பு கம்பெனி போன்றவற்றிற்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்தது. ஒரு டன் கந்தக அமிலம், ₹4,000 சப்ளை செய்து வந்த நிலையில், தற்போது குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து இதே தொழிற்சாலைகள், ஒரு டன் கந்தக அமிலத்தை, ₹12,000 கொடுத்து பெறுகின்றன. தென் மாவட்டங்களில் இயங்கும் தனியார் சிமென்ட் ஆலைக்கு ஜிப்சம் சப்ளை அளித்து வந்தது. தற்போது அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஸ்டெர்லைட் மூலம் எந்த ஆபத்தும் இல்லை என, நிரூபிக்கப்பட்ட நிலையில் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அவற்றில், தற்போது உண்மையில்லை என்பது மக்களுக்கு தெரியவந்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை துாண்டியது, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர் போன்ற அமைப்பினர் தான் என்பது தற்போதைய நடவடிக்கைகளால் மக்களுக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் கூறியதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்திகள் வெளியாகி இருந்தது.


பசுமை தீர்ப்பாணைய உத்தரவு


இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து, ஆலையை ஆய்வு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதை பரிசீலனை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இது குறித்து உடனடியாக ஒரு முடிவுக்கு வராமல் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கூறி காலதாமதம் செய்து வருகிறது.


தொழில் வர்த்தக சங்கத்தினர் ஆதரவு


இந்த நிலையில் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாணையம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டிருப்பதை தமிழகத்தை சேர்ந்த தொழில் சம்மேளனங்களும், கூட்டமைப்புகளும் வரவேற்றுள்ளன. இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் கூறுகையில் “ஒரு சிலர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக 22 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் தொழிலை மூடியது நல்லதல்ல. இது போன்ற போக்கு நிலவினால் தமிழ் நாட்டில் தொழில் ஸ்திரத்தன்மை குலைந்துவிடும். இதனால் தமிழ்நாட்டில் பலர் தொழில் செய்ய தயங்குவர். வரும் 2019 ஆம் ஆண்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு மாநாடு தொடங்கும் முன்பு ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க வேண்டும். இல்லை என்றால் தமிழ் நாட்டில் தொழில் முதலீடுகள் மிகவும் குறைந்து விடும் என்றனர்.


அதே போல தென்னிந்திய தாமிர நுகர்வோர் சங்கம் கூறுகையில் “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் உள்நாட்டில் தாமிரம் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பசுமை தீர்ப்பாணைய உத்தரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்று கூறியுள்ளது. திருநெல்வேலி சிறு மற்றும் குறு தொழில் துறையினர் கூறுகையில் “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் கந்தக அமிலம், பாஸ்பரஸ் அமிலம் தட்டுப்பாடு ஏற்பட்டு இவற்றின் விலை 300 சதவீதம் வரை கூடியுள்ளதாக கூறினர். ரசாயன ஆலைகள் கூட்டமைப்பினர் கூறுகையில் “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் தங்கள் ஆலைகளுக்கான மூலப்பொருள்கள் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.


துறைமுக தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு


தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்கள் சங்கத்தினர் கூறுகையில் “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி குறைந்துள்ளது. அதிக அளவிலான துறைமுக தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்து மிகவும் கஷ்டப்படுகின்றனர். துறைமுக வருமானமும் குறைந்து விட்டதால் அனைவருக்குமே கஷ்டமான நிலை உருவாகியுள்ளதாகவும், இந்த நிலையில் தேசிய பசுமை ஆணையத்தின் தீர்ப்பு பத்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைப்பதாக இருப்பதாகவும், தமிழக அரசு காலதாமதம் செய்யாமல் உடனே நீதிமன்ற உததரவை அமல்படுத்த வேண்டுமென்றும் அவர்கள் கூறினர். மேலும், தமிழக ரசாயன தொழிற்சாலை அமைப்பினர், நாமக்கல் அன்னம் இண்டஸ்ட்ரீஸ், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார சங்கம் ஆகிய ஆகிய அமைப்புகளும் மேற்கண்ட கருத்துக்களை வலியுறுத்தி உடனே ஆலையை திறக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளன.


இவ்வாறு ஸ்டெர்லைட் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், கிராம மக்கள், கிறிஸ்தவ இயக்கங்களால் தூண்டப்பட்டு தற்போது திருந்திய போராட்டக்காரர்கள், பாதிக்கப்பட்ட மோட்டார் தொழிலை சேர்ந்தவர்கள், சிறு வணிகர்கள், தொழில் கூட்டமைப்பினர் ஏராளமானோர் மத்திய பசுமை தீர்ப்பாணைய தீர்ப்பை வரவேற்றுள்ளதோடு, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Based on Inputs from various Tamil Daily
Next Story
கதிர் தொகுப்பு
Trending News