Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு - தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி நடவடிக்கை!

இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு - தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி நடவடிக்கை!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 Dec 2018 9:26 AM GMT

இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


சோதனையின் பின்னணி


கோவையில் இந்து அமைப்புகளின் பிரமுகர்களை கொலை செய்யும் திட்டத்துடன் சிலர் சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வருவதாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கோவை மாநகர போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அந்த ரயிலில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில்(25), சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்த சலாவுதீன்(25), வியாசர்பாடியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அலி(29), பல்லாவரம் சம்சுதீன்(20) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த கோவையைச் சேர்ந்த ஆசிக்(25) என்பவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உதவி செய்ததாக கோவை உக்கடத்தைச் சேர்ந்த பைசல், குனியமுத்தூரைச் சேர்ந்த அன்வர் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 7 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்  உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கோவையில் வசித்து வரும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா மாநிலத் தலைவர் அன்புமாரி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் பிரமுகர்களைக் கொலை செய்யும் திட்டத்துடன் கோவைக்கு வந்தது தெரியவந்தது. இவர்களில் திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.


மத கலவரத்தை தூண்டும் வகையில் குற்றச்செயல்


சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக சேர்ந்து சதி செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அர்ஜுன் சம்பத், அன்பு மாரி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த தகவல்கள் வெறுப்பேற்றும் வகையில் இருந்ததால் அவர்களை கொல்ல திட்டமிட்டதாக 5 பேரும் வாக்குமூலம் அளித்தனர். இந்த 5 பேரின் சதி செயலுக்கு உடந்தையாக இருந்ததாக உக்கடம் வீரவாஞ்சிநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பைசல், குனியமுத்தூரை சேர்ந்த அன்வர் என்ற சாகுல் அமீது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம், மத கலவரத்தை தூண்டும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டது, அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது, கூட்டு சதி, சட்டவிரோதமாக கூடுதல் உள்பட 7 பிரிவுகளில் கோவை வெறைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு கடந்த மாதம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை போலீசார், 7 பேரிடம் விசாரணை நடத்திய 1,500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கை விசாரித்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், இந்த சதி திட்டத்தையும் தனியாக வழக்குப்பதிவு செய்து சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர்.


7 பேரின் வீடுகளிலும் தனித்தனியாக சோதனை



இவ்வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டதையொட்டி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், கைது செய்யப்பட்ட 7 பேரின் வீடுகளிலும் தனித்தனியாக சோதனை நடத்தினர். அதன்படி தேசிய புலனாய்வு அமைப்பின் டி.எஸ்.பி சாகுல் அமீது, இன்ஸ்பெக்டர் சிவா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவினர், நேற்று காலை 6:00 மணி முதல் 11:00 மணிவரை திண்டிவனம் கசாமியன் தெருவில், உள்ள இஸ்மாயில் வீட்டில் உள்ளூர் போலீஸ் உதவியுடன் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, இஸ்மாயில் தாய் ரகமத், அண்ணன் ஜாகிர் உசேன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில், இஸ்மாயில் பயன்படுத்திய ரெட்மீ மொபைல் போன், 1 சிம்கார்டு, ஒரு டைரி, 10 விசிட்டிங் கார்டு, 4 அடையாள அட்டை மற்றும் 100 மாடுகளை கொன்றதாக வெளிவந்த செய்தி தாள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் காலை 11:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
Next Story