Top
undefined
Begin typing your search above and press return to search.

வீட்டு முறையில் 15000 பிரசவம் பார்த்த நரசம்மா மரணம்: மோடி அரசால் பத்மஸ்ரீ வழங்கி பெருமைப்படுத்தப்பட்டார்

வீட்டு முறையில் 15000 பிரசவம் பார்த்த நரசம்மா மரணம்: மோடி அரசால் பத்மஸ்ரீ வழங்கி பெருமைப்படுத்தப்பட்டார்

SG SuryahBy : SG Suryah

  |  26 Dec 2018 11:50 AM GMT

கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நரசம்மா. கல்வியறிவு இல்லாத நரசம்மாவுக்கு 12-வது வயதில் திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு பிறந்த 12 குழந்தைகளில் 4 மகன்கள் சிறு வயதில் இறந்து விட்டனர். 1940-ம் ஆண்டில் சுமார் 20 வயது பெண்ணாக இருந்த போது இவரது அத்தைக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவச்சியாக இருந்து பிரசவம் பார்த்த தனது பாட்டி மரிகெம்மா என்பவருக்கு நரசம்மா உறுதுணையாக இருந்தார்.
இதன்மூலம் பிரசவம் பார்க்கும் முறையை தனது பாட்டியிடம் கற்றுக்கொண்ட நரசம்மா தங்களது உறவினர்கள் வீட்டில் நடந்த பிரசவங்களை பின்னர் தனியாக பார்க்க ஆரம்பித்தார். காலப்போக்கில் பிரசவம் பார்க்கும் கலையில் கைதேர்ந்த மருத்துவச்சியாக மாறிவிட்ட நரசம்மா, கிருஷ்ணாபுரா சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெகு சீக்கிரம் பிரபலமாக தொடங்கினார். சரியான வாகன போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாத பல பகுதிகளுக்கு இவர் சிரமப்பட்டுச் சென்று பிரசவம் பார்த்து வந்தார்.
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் நிலை எப்படி இருக்கிறது? என்பதை அறிந்து சொல்லும் அளவுக்கு  காலப்போக்கில் இந்த தொழிலில் அவர் நிபுணத்துவம் பெற்றார். கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மருந்து, பிறந்த குழந்தைக்கு புகட்டும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து ஆகியவற்றையும் நாட்டு வைத்திய முறையில் வீட்டில் தயாரிக்க ஆரம்பித்தார். தன்னை உதவிக்கு அழைத்தவர்களில் பலரிடம் பணம் ஏதும் கட்டணமாக வாங்காமல் இலவசமாகவே மருத்துவம் பார்க்கும் சேவையை செய்துவந்த நரசம்மா இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளின் பிறப்புக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
இந்த துறையில் சுமார் 70 ஆண்டுகளாக இவர் ஆற்றிய அரும்சேவையை பாராட்டி கடந்த 2012-ம் ஆண்டில் 'இந்தியாவின் சிறந்த குடிமகள்' விருது நரசம்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய சிறப்புக்குரிய நான்காவது விருதான 'பத்மஸ்ரீ' விருதை இந்த ஆண்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து பெற்றார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் பெங்களூரு நகரில் நரசம்மா(98) இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story