Top
undefined
Begin typing your search above and press return to search.

வாஜ்பாய், தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால், 2008–ஆம் ஆண்டே பாலம் முடிவடைந்து இருக்கும்

வாஜ்பாய், தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால், 2008–ஆம் ஆண்டே பாலம் முடிவடைந்து இருக்கும்

SG SuryahBy : SG Suryah

  |  26 Dec 2018 7:07 PM GMT





அசாம் மாநிலம் திப்ருகர்–தேமாஜி இடையே போகிபீல் என்ற இடத்தில் பிரம்மபுத்ரா நதியின் மீது நாட்டிலேயே மிக நீளமான ஈரடுக்கு பாலம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது.போகிபீல்’ பாலம் எனப்படும் இந்த பாலத்தை கட்டுவதற்கு கடந்த 1997–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதி அப்போதைய பிரதமர் தேவேகவுடா அடிக்கல் நாட்டி வைத்தார். 2002–ம் ஆண்டு ஏப்ரல் 21–ந் தேதி, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பணிகளை தொடங்கி வைத்தார். வடகிழக்கு எல்லைப்புற ரெயில்வே இப்பணியை செய்தது. 2007–ம் ஆண்டு, இதை தேசிய திட்டமாக மத்திய அரசு அறிவித்தது. நரேந்திர மோடி அரசு, பணிகளை வேகமாக முடுக்கி விட்டது.



தொடக்கத்தில் திட்ட செலவு ரூ.3230 கோடியாக இருந்தது. ஆனால், ₹5,960 கோடியாக செலவுத்தொகை உயர்ந்தது. 21 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டி முடிக்கப்பட்ட இந்த ‘போகிபீல்’ பாலத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், அசாம் மாநில கவர்னர் ஜகதீஷ் முகி, முதல்வர்  சர்பானந்த சோனோவால், அருணாசலபிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாலத்தை திறந்து வைத்த பிறகு, பிரதமர் சிறிது தூரம் பாலத்தில் நடந்து சென்றார். அப்போது, அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்தார். திறந்த ஜீப்பில் பாலத்தின் மறுமுனையான தேமாஜி வரை சென்றார். ரயில் பாலத்தில் முதலாவது பயணிகள் ரயில் போக்குவரத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.



பின்னர், தேமாஜியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இது வெறும் பாலம் மட்டும் அல்ல, லட்சக்கணக்கான மக்களை இணைக்கும் வாழ்வாதாரம். இப்பாலத்தால் மக்களுக்கு சிறந்த சுகாதாரம், கல்வி, வர்த்தக வாய்ப்பு கிடைத்து, அவர்களின் வாழ்க்கை எளிதாகும். மேலும், ராணுவ தேவை அடிப்படையிலும், இப்பாலம் முக்கியமானது. நமது என்ஜினீயரிங் திறனுக்கு இது நல்ல சான்று. நிர்வாகத்தில் திறன் நுழையும்போது, ஊழல் ஒழிக்கப்படுகிறது, மக்களின் வாழ்க்கை எளிதாகிறது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பால கட்டுமான பணிகள் தொடங்கினாலும், அதன் பின்னர் வந்த அரசு, இதில் கவனம் செலுத்தவில்லை. வாஜ்பாய், தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால், 2008–ம் ஆண்டே பாலம் முடிவடைந்து இருக்கும். வாஜ்பாய் ஆட்சியில் தான் புதிய இந்தியாவுக்கான விதை போடப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் அதை கவனிக்கவில்லை.இந்த அரசு பதவி ஏற்றபோது, ₹12,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் முடிவடையாமல் இருந்தன. அவை தற்போது முடிக்கப்பட்டோ, முடிவடையும் நிலையிலோ உள்ளன. உள்கட்டமைப்புக்கு ஊக்கம் அளித்தால் புதிய இந்தியா பிறக்கும். ஆகவே, இன்னும் 2 ஆண்டுகளில் புதிய இந்தியா உதயமாகும்' என்று கூறியுள்ளார்.






Next Story