Top
undefined
Begin typing your search above and press return to search.

அறநிலையத்துறை வசம் இருந்தால் காலப்போக்கில் கோயில்களே காணாமல் போகக்கூடும்!! திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் அச்சம்...எச்சரிக்கை !

அறநிலையத்துறை வசம் இருந்தால் காலப்போக்கில் கோயில்களே காணாமல் போகக்கூடும்!! திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் அச்சம்...எச்சரிக்கை !

SG SuryahBy : SG Suryah

  |  1 May 2019 10:54 AM GMT19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய காலனிய பிரிட்டிஷார் 1923-இல் சென்னை மாகாண இந்து சமய மற்றும் அறநிலைய போர்டு என்ற அமைப்பின் கீழ் ஒரு தலைவர், 4 ஆணையர்களை நியமித்தார்கள். பின்னர், சற்று திருத்தி அமைக்கப்பட்டு தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் 22, 1959-இல் இயற்றப்பட்டது. இது 1960-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது.


இந்தத் துறையின் கீழ் 36,425 திருக்கோயில்கள், 56 திருமடங்கள், திருமடங்களுக்குச் சொந்தமான 47 கோயில்கள், குறிப்பிட்ட அறநிலையங்கள் 1,721, அறக்கட்டளைகள் 189 வருகின்றன. மாதம் ரூ.2 கோடிக்கு வருவாய் வரும் கோயில்கள் முதுநிலைக் கோயில்கள் எனத் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வகையான கோயில்கள் ஏறக்குறைய 50 உள்ளன.


இந்தக் கோயில்களில் பணிபுரிபவர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அர்ச்சகர்களுக்கு ஊதியம் இல்லை. இவர்கள் பக்தர்களிடமிருந்து பெறும் சில்லறையே - கற்பூரத் தட்டேற்றில் பெறும் தட்சிணையே ஊதியமாகும். சிறிய கோயில் பணியாளர்களுக்கு ஊதியம் மிகக் குறைவு. காரணம், கோயிலுக்கு வருமானம் இல்லை.


கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கோயில் நில குத்தகைதாரர்களின் நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்தார். இதனால், பல கோயில்களில் தினசரி பூஜையே நின்றுபோகும் நிலை ஏற்பட்டது. திருக்கோயில்களின் நஞ்சை, புஞ்சை நிலங்கள் மொத்தம் 4,78,247 ஏக்கர் 47 சென்ட். இதிலிருந்து பெறும் வருவாய், வராமல் இருக்கும் வருவாய், கட்டடங்களின் வாடகை வருவாய், இதர வருவாய் என்று பலவகை இருந்தாலும் மொத்த வருவாயை இறைவன் மட்டுமே அறிவார்!


இதனால்தான் அண்மையில் உயர்நீதிமன்றம் தமிழக கோயில்களில் உள்ள பொன், வெள்ளி ஆபரணங்கள் குறித்து அறிக்கை தருமாறு இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. பழைய பதிவேடுகளுக்கும் நடைமுறையில் உள்ள பதிவேடுகளுக்கும் வித்தியாசம் காணப்படுவதே நீதிமன்றத்தின் கவலைக்குக் காரணமாகும்.


சென்னை நுங்கம்பாக்கம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள 14 ஏக்கர் நிலம், அரசின் முறையான அனுமதியின்றி விற்கப்பட்டிருப்பதை ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கண்டுபிடித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


கோயில், மனுதாரர் என இரு தரப்பு வாதங்களையும் கேட்டு இதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்னர், சட்ட விதிகளுக்கு முரணாக விற்பனை நடைபெற்றிருந்தால் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவும் இது குறித்து நான்கு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தது உயர்நீதிமன்றம்.


பக்தர்களின் நேர்த்திக் கடனாகக் கோயில்களுக்கு அளிக்கப்படும் சொத்துகளை இறையுணர்வோ, சமயப்பற்றோ இல்லாத நம் தலைமுறையினர் நிர்வகிக்க முற்படுவதால்தான் இத்தகைய அவலங்கள் எழுகின்றன.


சோழ மண்டலத்தில் உள்ள சின்னஞ்சிறு கோயில்களில் உள்ள தெய்வத் திருமேனிகளை திருவாரூர் தியாகேசர் திருக்கோயிலில் பாதுகாப்பாக ஒரே இடத்தில் வைத்தனர். இப்போது பரிசோதனை செய்ததில் சில தெய்வச் சிலைகள் போலி எனக் கண்டறியப்பட்டுள்ளது. பழைய உண்மையான தெய்வச் சிலைகளை பழுதடைந்ததாகக் கணக்கு காட்டிவிட்டு, ஐம்பொன்னுக்குப் பதிலாக வெறும் உலோகக் கலவையால் புதிதாக சிலை செய்து தங்க முலாம் பூசி விடுகிறார்கள். இதுதான் காஞ்சிபுரத்தில் நடந்தது.


நம் நாட்டுக் கோயில்களின் தெய்வத் திருவுருவ மேனிகளை, பழைய சிலைகளை வெளிநாட்டில் அருங்காட்சியகங்களில்தான் பார்க்கலாம் என்பது நடைமுறை ஆகிவிட்டது. குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டிய சில காவல் துறை அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளும், கோயில் பணியாளர்களும் கடத்தலில் தொடர்புடையவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.


ஸ்ரீ குமரகுருபரருக்கு பேசும் சக்தியை வழங்கிய இறைவன், தமக்கும் வழங்குவான் என்று பக்தன் கோயிலுக்குப் போகிறான். கோயில் பணியாளருக்கும் அந்த நம்பிக்கை வேண்டும். அப்படி நம்பிக்கை இல்லாதவர்களை ஆலயப் பணியில் அமர்த்தக் கூடாது. தங்கள் மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை இஸ்லாமிய மசூதிகளிலோ, கிறிஸ்தவ தேவாலயங்களிலோ பணியமர்த்த மாட்டார்கள் எனும்போது, இந்துக்களின் கோயில்களில் இறைநம்பிக்கை இல்லாதவர்களுக்கு இடமளிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்?


இந்து சமய அறநிலையத் துறை இந்த 70 ஆண்டுகளில் வந்தேறிய மத நிறுவனங்கள்போல எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், சமய வழி பயிற்சி நிலையங்களைத் தொடங்கியது? மருத்துவமனைகள், தீண்டாமை நோய் தீர்க்க செயல்முறை முனைப்பு இருக்கிறதா? வந்தேறிய மதத்தின் பிரசாரகர்கள் வீடுதோறும், வீதிதோறும் துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பது போல இந்து சமயத் துறையிடம் திட்டம் இருக்கிறதா? ஒவ்வொரு பகுதியில் வாழும் இந்த சமய மக்கள் குறித்த கணக்கு உண்டா? மத மாற்றம் நடைபெறுவதைத் தடுக்க முயற்சிகள் எடுத்ததுண்டா?


கிறிஸ்தவ மிஷனரிகளும், முஸ்லிம்களும் நீலகிரியில் உள்ள பழங்குடி மக்களை மதம் மாற்றுவதைக் கண்ட அயோத்திதாச பண்டிதர் மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்தார் என்கிற வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்? கோயில்களும், திருமடங்களும் இந்த ஏழைகளுக்குக் கல்வி புகட்டுவதற்கு ஒன்றும் செய்யாமல் இருக்கிறதே என்று கவலை கொள்ளவும் செய்தார். பூர்வகுடிமக்களை மதம் மாற்றுவதால் நாளடைவில் மக்களிடையே பிளவு உண்டாகும் எனவும் எச்சரித்தார். இது குறித்தெல்லாம் என்றேனும் கவலைப்பட்டது உண்டா?


திருக்கோயில்களில் ஆபரணங்கள் காணாமல் போவதும், சிலைகள் கடத்தப்படுவதும், நிலங்கள் முறைகேடாக விற்கப்படுவதும் வழக்கமாகிவிட்டிருக்கின்றன. அதற்கெல்லாம் துணைபோகும் அதிகாரிகளும், ஊழியர்களும் கொண்ட ஒரு துறை எங்ஙனம் தொல் சமயத்தைக் காக்கும் என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
இந்து சமய அறநிலையத் துறை ஏனைய மதங்களைப் போல அரசின் வசம் இருக்கலாகாது. இப்படியே போனால், சிலைகளும், சொத்துகளும் மட்டுமல்ல, கோயில்களே காலப்போக்கில் காணாமல் போகக்கூடும்!


கட்டுரையாளர்:
தலைவர்,


திருக்கோவலூர்
பண்பாட்டுக் கழகம்.


( தினமணி இதழில் பிரசுரமானதன் ஒரு பகுதி )


Next Story