Kathir News
Begin typing your search above and press return to search.

#KathirOpinionColumn : மய்யம் என்னும் மதவெறி அரசியல்!

#KathirOpinionColumn : மய்யம் என்னும் மதவெறி அரசியல்!

#KathirOpinionColumn : மய்யம் என்னும் மதவெறி அரசியல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 May 2019 7:39 PM GMT


அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியுள்ளார். இது முஸ்லிம்கள் நிறைந்த பகுதி என்பதால் இதனை கூறவில்லை என்று கூறிவிட்டு அதன் பிறகு, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியுள்ளார். இவ்வாறு பேசிய நடிகர் கமலஹாசனின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது, எளிதில் புரிந்து கொள்ள முடியும்.


நாதுராம் கோட்ஸே மகாத்மா காந்தியை சுட்டு கொன்றதால், அவரை தீவிரவாதி என்றும், அவரை ஒரு ஹிந்து என்றும் தெள்ள தெளிவாக அடையாளப் படுத்தியுள்ளார் கமலஹாசன். மகாத்மா காந்தியின் விடுதலை போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட நாதுராம் கோட்ஸே, இந்திய விடுதலையின் போது, இந்தியாவை பிளவு படுத்தி, பாகிஸ்தான் என்ற தனி தேசம் உருவாகுவதற்கு மகாத்மா காந்தியும் ஒரு காரணமாக இருந்தார் என்பதற்காக, அவருக்கு முன் நேருக்கு நேராக நின்று, அவரை சுட்டுக் கொன்றார் நாதுராம் கோட்ஸே. தான் சுட்டு கொன்றதை ஒப்பு கொண்ட நாதுராம் கோட்ஸே, சரணடைந்து, எதற்காக மகாத்மா காந்தியை சுட்டேன் என்றும் விளக்கி கூறினார். இதன் பிறகு, நாதுராம் கோட்ஸேவிற்கு சட்டத்தின் முன்பு தூக்கு தண்டனையும் கிடைத்தது. மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இந்த அரசியல் கொலையை, தீவிரவாதமாக சித்தரித்தது மட்டுமல்லாமல், இதற்கு ஹிந்து மத சாயமும் பூசியுள்ளார் கமலஹாசன்.


உலகம் முழுவதும் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் தீவிரவாத தாக்குதல்கள் பல நடக்கின்றன. சமீப காலங்களில் நடந்த இரண்டு தீவிரவாத தாக்குதல்களை பற்றி கமல்ஹாசனின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்று பார்ப்போம். கடந்த மார்ச் மாதம், நியூஸிலாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில் உள்ள இரு மசூதிகளில், அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அல் நூர் ( al Noor) மற்றும் டீன்ஸ் ஏவ் (Deans Ave) ஆகிய இரு மசூதிகளிலும் நடந்த தாக்குதலில், 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மசூதியில் தாக்குதல் நடத்திய ப்ரெண்டன் டர்ரெண்ட் (Brenton Tarrant) என்பவன், தான் காரில் இருப்பதில் தொடங்கி, அங்கிருந்து இறங்கி மசூதிக்குள் சென்று, உள்ளே இருப்பவர்களைத் துப்பாக்கியால் சுடுவது வரை அனைத்தையும் முகநூலில் நேரலையாக பதிவு செய்துள்ளான். சுமார் 17 நிமிடங்கள் வரை இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலை "கிறிஸ்துவ தீவிரவாதம்" என்று யாரும் கூறவில்லை. கமலஹாசனோ, இந்த தீவிரவாதத்தை பற்றி வாயை கூட திறக்கவில்லை.


கிறிஸ்தவர்களால் மசூதிகளில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பு, கொழும்பில் உள்ள மூன்று தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் என மொத்தம் எட்டு இடங்களில் நடத்திய தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில், சுமார் 250-ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஐந்நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதலை யாரும் "இஸ்லாமிய தீவிரவாதம்" என்று சொல்லவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த கமலஹாசன், "தீவிரவாதம்" என்ற வார்த்தையை கூட உபயோகப்படுத்தவில்லை என்பது தான் ஸ்வாரஸ்யம்.




https://twitter.com/ikamalhaasan/status/1119912349492633600


இவ்வளவு ஏன்? சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்று கூறும் கமலஹாசன், தீவிரவாதத்தை பற்றி எடுத்த படம் தான் விஸ்வரூபம். இந்த படத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திய போது, இந்தியாவை விட்டே வெளியேறி விடுவேன் என்று கூறியவர் தான் இவர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அது மட்டும் இல்லாமல், அவர்களிடம் மண்டியிட்டு, நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்த அனைத்து காட்சிகளையும் நீக்கியவர் தான் தன்மானமுள்ள வீராதி வீரன் கமலஹாசன்.


ஒரு அரசியல் கொலையை தீவிரவாதமாக சித்தரிக்கும் கமலஹாசன், முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்ததாக தண்டனை அனுபவித்து வருபவர்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பாரா? காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேரும் தருணம் வந்தால், ராஜீவ் கொலை குற்றவாளிகளை தமிழ் இனத்துடன் தொடர்பு படுத்தி தமிழின தீவிரவாதிகள் என்று கூறுவாரா? இலங்கையில் தனி ஈழத்திற்காக போராடியதற்காக அதிகாரபூர்வமாக தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்டவர், பிரபாகரன். அவரை தமிழினத்துடன் தொடர்பு படுத்தி, தமிழின தீவிரவாதி என்று கூறுவாரா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. அரசியல் ரீதியான கொலை என்றால் என்ன தீவிரவாதம் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவரா கமலஹாசன் ? என்ற கேள்வி தான் எழுகிறது.


கமலஹாசனின் மதவாத சிந்தனைகள் இப்படி இருக்க, அவரின் ஜாதியவாத சிந்தனைகளை சற்று பார்ப்போம். கடந்த ஆண்டு ஜூன் மாதம், சாதியை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்து செல்வீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார், ட்விட்டர் வாசி ஒருவர்.




https://twitter.com/nancy_prisilda/status/1012209380933042177


அதற்கு பதில் அளிக்கையில், “எனது இரண்டு பிள்ளைகளின் பள்ளி சான்றிதழ்களிலும், சாதி மற்றும் மதத்தை குறிப்பிட மறுத்துவிட்டேன். இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதே ஒரே வழி. இதில் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும். கேரள மாநிலத்தில் இதை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள். இதை செய்பவர்கள் பாராட்ட பட வேண்டும்”, என்று தெரிவித்துள்ளார்.




https://twitter.com/ikamalhaasan/status/1012949897069223939


ஆனால், அவரது மகள் ஸ்ருதி ஹாசன் அவர்கள், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நான் ஒரு ஐயங்கார்” என்று பெருமையாக கூறியுள்ளார். அதன் காணொளி கீழே,




https://youtu.be/IGsUURdYZpU


ஊருக்கு தான் உபதேசம் என்று, வெளியே ஜாதியை ஒழிப்போம் என்று கூறிவிட்டு, தனது வீட்டிற்குள் ஜாதியை வளர்கிறாரா என்ற கேள்விகளும் எழுகிறது.


திராவிட கழகத்தினரை போல் கமலஹாசனும் ஹிந்து விரோத அரசியல்வாதியாக திகழ்கிறார் என்பது பலரின் கருத்தாக இருக்கும் நிலையில், சிறுபான்மையினரின் வாக்கு வங்கியிற்காக, மதவெறி அரசியலை தமிழகத்தில் தூண்டி விடுகிறார் என்பது தான் நிதர்சனமாக உள்ளது. மய்யம், ஒரு மத வெறி அரசியல்.


குறிப்பு : இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரையே சேரும். கதிர் இணையதளம் கருத்துக்களுக்கு பொறுப்பேற்காது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News