Kathir News
Begin typing your search above and press return to search.

தினம் ஒரு திருக்கோயில்!

தினம் ஒரு திருக்கோயில்!

தினம் ஒரு திருக்கோயில்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 May 2019 11:05 AM GMT


திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில்



தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகும்


இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.


தல வரலாறு : தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.





இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார்.






வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் ‘செயந்திநாதர்” என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே ‘செந்தில்நாதர்” என மருவியது. தலமும் ‘திருஜெயந்திபுரம்” என அழைக்கப்பெற்று, பின்பு திருச்செந்தூர் என மருவியது.


கோவில் அமைப்பு : 150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார்.





தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.





இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.


திருக்கோவில் சிறப்புகள் : முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.





திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News