Top
undefined
Begin typing your search above and press return to search.

கர்நாடகாவில் பெரும்பான்மையை இழந்தது குமாரசாமி ஆட்சி! 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர் !!

கர்நாடகாவில் பெரும்பான்மையை இழந்தது குமாரசாமி ஆட்சி! 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர் !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  6 July 2019 11:54 AM GMT



கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018 - ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 105 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியானது. ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை.


இதனால், பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க, 38 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமியை முதல்வர் ஆக்கியது, 79 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ் கட்சி. சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரின் ஆதரவும் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு உள்ளது. அவர்கள் 2 பேரையும் குமாரசாமி, மந்திரிகளாக நியமித்தார்.


இந்த கூட்டணி அரசு பொறுப்பேற்றதில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உமேஷ் ஜாதவ் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக, வாய்ப்பு வழங்கியது. அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.


இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 116 - ஆக குறைந்தது.


ஆனந்த் சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர் ஏற்கனவே சபாநாயகர் ரமேஷ் குமார் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆனால் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறினார்.


இதைத்தொடர்ந்து கர்நாடக கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஆனந்த்சிங் வழங்கினார். ரமேஷ் ஜார்கிஹோளி எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நேரில் வழங்கினார்.


இந்த நிலையில் இன்று ஜே.டி.எஸ். கட்சியின் முன்னாள் மாநில தலைவர் எச்.விஸ்வநாத், கோபாலய்யா, வி.சி.பாட்டீல், சிவராம் ஹெப்பர் உள்பட 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா கடிதங்களைக் கொடுக்க விதான்சவுதா சென்றனர். ஆனால் சபாநாயகர் அங்கு இல்லை. இதையடுத்து சபாநாயகரின் செயலாளரிடம் ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். பின்னர் 14 ஜேடிஎஸ் எம்எல்ஏக்களும் கவர்னர் மாளிகைக்கு சென்று சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர்.


குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்த நிலையில் 14 பேர் ராஜினாமா செய்துள்ளதால், எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 102 ஆக குறைந்துள்ளது. இது பாஜகவின் 105 எம்எல்ஏக்களைவிட குறைவு. எனவே குமாரசாமி ஆட்சி கவிழ்கிறது.


தற்போது, முதல்வர் குமாரசாமி அமெரிக்காவில் உள்ளனர். அவர் பெங்களூரு திரும்பியவுடன் முன்னாள் முதல்வர் என்று அழைக்கப்படுவார்.


Next Story