Kathir News
Begin typing your search above and press return to search.

#KathirExclusive "உண்மைக்கு புறம்பான, பிரிட்டிஷ் காலனியத்தின் அடிமைத்தனமே #கொளஞ்சி திரைப்பட முன்னோட்ட காட்சிகள்" - கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!

#KathirExclusive "உண்மைக்கு புறம்பான, பிரிட்டிஷ் காலனியத்தின் அடிமைத்தனமே #கொளஞ்சி திரைப்பட முன்னோட்ட காட்சிகள்" - கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!

#KathirExclusive உண்மைக்கு புறம்பான, பிரிட்டிஷ் காலனியத்தின் அடிமைத்தனமே #கொளஞ்சி திரைப்பட முன்னோட்ட காட்சிகள் - கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2019 8:51 AM GMT


கொளஞ்சி திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியில் சமுத்திரக்கனி சமூகநீதி என்ற பெயரில் பேசும் வசனம் தற்போது வைரல். அந்த வசனங்களுக்கு ஆதரவும், எதிர்வினையும் குவிந்து வரும் நிலையில் இந்த வசனம் குறித்து பா.ஜ.க தமிழக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனின் கருத்துக்களை கதிர் குழு பேட்டியெடுத்தது. அந்த முழு பேட்டி பின்வருமாறு:


நாளை வெளியாகவுள்ள ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியில் கோவில்களில் உள்ள தெய்வங்கள் வடக்கிருந்து வந்தவர்கள் என்ற ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. ஹிந்து தெய்வங்கள் வடக்கிருந்து வந்தவர்களா?


நாளை வெளியாகவுள்ள ஒரு திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியில் சமூக சீர்திருத்தவாதியாக நடிக்கும் ஒரு நடிகர் "கோவில்களில் இருக்கும் சாமிகள் வடக்கில் இருந்து வந்தவை" என்றும் இங்கு இருந்த சாமிகள் ஊருக்கு வெளியில் கொண்டு வைத்து விட்டார்கள் என்றும் கூறுகிறார். அத்துடன் இங்கு கோவில் கருவறைகளுக்குள் பிராமணர்கள் மட்டுமே போக முடியும் என்றும் கூறுகிறார். இவை அனைத்துமே அப்பட்டமான பொய்கள்.


இன்றைய மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் தூக்கி வீசப்பட்ட காலனிய கால கருத்துகளை எடுத்து வைத்துக் கொண்டு இன்றைக்கு திரைப்படங்களை எடுப்பது இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பேசும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானது.


இவை காலனிய காலத்து கருத்துக்கள் என்று எப்படி கூறுகிறீர்கள்?


காலனிய காலத்தில் தான் வடக்கிலிருந்து வந்த தெய்வங்கள் என்றும் தமிழ்நாட்டின் தெய்வங்கள் என்றும் பிரித்து பேசப்பட்டன. அதற்கு இந்தியர்களை பிரித்தாளும் தேவை ஒரு காரணமாக இருந்தது. ஆனால் அப்போதே தமிழறிஞர்கள் இதனை எதிர்த்திருக்கிறார்கள். மகாகவி பாரதி, பேரா.மு.சண்முகம் பிள்ளை என பல தமிழ் அறிஞர்கள் அப்போதே இதை கண்டித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் தலை சிறந்த தனிப்பெரும் காப்பியமான சிலப்பதிகாரம் தந்த இளங்கோ அடிகள் ராமனையும் கண்ணனையும் பாடாத நாவென்ன நாவு அவர்களின் அழகைப் பார்க்காத கண்கள் என்ன கண்கள் என பாடியிருக்கிறார், அவர் உடையிலும் பாடலிலும் அழுக்கு இருக்கிறதென கூறுகிறாரா இந்த திரைப்பட இயக்குநர்?


சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்து துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்த அழகைப் பாடும் காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார் அவர்களை வடமதுரை இறைவன் கண்ணனுக்கும் அவன் அண்ணன் பலதேவனுக்கும் ஒப்பிடுகிறாரே, அவரது புறநானூற்று பாடலிலும் உடையிலும் கறை என பேசுகிறாரா இந்த நடிகர்?


தர்ம சாஸ்திரங்கள் மக்களை ஒதுக்கிவைக்க சொன்னதாக ஒரு வசனம் இடம்பெற்றுள்ளதே. அது பற்றி உங்கள் கருத்து?


தர்ம சாஸ்திரங்கள் மக்களை ஒதுக்கி வைக்க சொன்னதாக நடிகர் கூறுகிறார். ஆனால் சுமிருதிகள் என்பவை ஒரு காலக்கட்ட சட்டங்கள் அவ்வளவு தான், உபநிடதங்களும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் எவரையும் ஒதுக்கி வைக்க சொல்லவில்லை. சாதி இரண்டொழிய வேறில்லை என கூறிய ஔவை பிராட்டியார் ஈ.வெ.ரா அவர்களை போல குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை கக்காமலேயே சாதி வேறுபாடுகளை கண்டித்துவிட்டார். ஔவையின் வார்த்தைகளும் தர்மசாத்திரம்தான், தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை என இறைவனின் நாமத்தை அனைத்து மக்களுக்கும் உபதேசம் செய்த ராமானுஜர் போல தமிழகத்தில் சாதி வேறுபாட்டை மறுத்த இன்னொரு நபரை அவருக்கு ஈடாக சொல்ல முடியுமா?


கோவில் கருவறைக்குள் பிராமணர் மட்டுமே செல்ல முடியும் என்று அர்ச்சகர் வேடம் இட்ட ஒரு நடிகர் வசனமாக கூறியுள்ளார். பிராமணர்கள் மட்டும் தான் கோவில் கருவறைக்குள் செல்ல முடியும் என்பது உண்மை தானே?


ஒவ்வொரு கோவில் கருவறைக்குள்ளும் அந்தந்த ஊர் ஐதீகங்களின் அடிப்படையில் பூசகர்கள் அமைவர். இருக்கங்குடி மாரியம்மன் கோவில் கருவறையிலோ அல்லது திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் கருவறையிலோ அல்லது குமரி மாவட்ட பிரம்ம சக்தி கோவிலிலோ அல்லது ஐயனார் கோவில்களிலேயோ யார் பூசகர்களாக இருக்கிறார்கள்? பிராமணர் பூசாரிகளாக இருக்கும் கோவில்களில் கூட அனைத்து பிராமணர்களும் கருவறைக்குள் செல்ல முடியாது. சங்கராச்சாரியாரும் கூட செல்ல முடியாது. பட்டியல் சமுதாயத்தினர் பூசாரிகளாக இருக்கும் கோவிலில் கருவறைக்கு வெளியே நின்று காஞ்சி சங்கராச்சாரியார் வணங்கிய புகைப்படங்களே இதற்கு சாட்சி.


உண்மை இப்படி இருக்க பகுத்தறிவற்ற பொய்யை ஒரு குறிப்பிட்ட மதத்தையும் மத உணர்வுகளையும் தாக்கி வெறுப்பை பரப்பும் திரைப்படக் காட்சிகளை காட்டுவது பிரிட்டிஷ் காலனியத்தின் அடிமைத்தனம் இன்னும் சிலரது மூளைகளிலிருந்து வெளியேறவில்லை என்பதையே காட்டுகிறது, அது மட்டுமல்ல இங்கு சமுதாய விடுதலையை உருவாக்கியதற்கான ஒட்டுமொத்த பொறுப்பாளராக ஈ.வெ.ரா-வை காட்டுவது சரியல்ல.


சிறு தெய்வ வழிபாடு ஹிந்துத்வத்தின் ஒரு அங்கமா இல்லையா?


சிறு தெய்வ வழிபாடு முறை முழுமையான அகண்ட ஹிந்துத்துவத்தின் பிரித்து பார்க்க முடியாத ஒரு பகுதி. குல தெய்வ வழிபாடு என்பது நமது சமுதாயத்தில் இரண்டர கலந்த ஒன்று. ஒரே தெய்வத்தை பிராமணர்களும், பல்வேறு சமுதாயத்தினரும் குலதெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் அன்றும், இன்றும், என்றும் உண்டு. சிறு தெய்வ வழிபாட்டை இன்று தூக்கி பிடிக்கின்றவர்கள் ஒட்டுமொத்தமாக நமது மரபினை, கலாச்சாரத்தை, பண்பாட்டை சிதைக்கும் மதமாற்றத்தை பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? அத்தனை சமுதாய மக்களின் உணர்வுகளுக்கும், மரபுகளுக்கும் மதிப்பளித்து மத சகிப்புத்தன்மையோடு வாழ சொல்லிக் கொடுப்பது தான் ஹிந்துத்தவம்.


ஈ.வெ.ரா தானே தமிழகத்தில் சமூக விடுதலைக்காக போராடியுள்ளார். இதில் ஏதேனும் மாற்று கருத்து இருக்க முடியுமா?


ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சமுதாயத்தில் ஒரு சில பெரியவர்கள் மாற்றத்தை முன்னெடுக்கிறார்கள். ஈ.வெ.ரா அவர்களுடைய பங்களிப்பை தாண்டியும் இங்கு சமுதாய விடுதலையை உருவாக்கியவர்கள் குமரி மாவட்டத்தின் ஐயா வைகுண்டர், சிதம்பரத்து முனிவர் தவத்திரு சுவாமி சகஜானந்தர், கல்வியை பரப்பிய காமராஜர், தொழில்புரட்சிக்கும் பசுமைப்புரட்சிக்கும் வித்திட்ட சி.சுப்பிரமணியம், பெண் விடுதலைக்காக பாடுபட்ட முத்து லட்சுமி ரெட்டி, பெண் கல்வியை பாடல்களால் பரப்பிய வேதாந்த கவி சுப்ரமணிய பாரதி, கல்வியையும் காயத்ரி மந்திரத்தையும் அனைவருக்கும் கொண்டு சென்ற தவத்திரு சுவாமி சித்பவனாந்தர் என பலர்.


இவ்வாறு தனது பிரத்யேக பேட்டியில் #கொளஞ்சி திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News