Kathir News
Begin typing your search above and press return to search.

அனைவருக்கும் வாழ்வளிக்கும் அன்னை ‘சென்னை’ யின் 380 ஆவது பிறந்த தினம் இன்று ! வாழ்த்துவோம் ..வாழ்வோம்!!

அனைவருக்கும் வாழ்வளிக்கும் அன்னை ‘சென்னை’ யின் 380 ஆவது பிறந்த தினம் இன்று ! வாழ்த்துவோம் ..வாழ்வோம்!!

அனைவருக்கும் வாழ்வளிக்கும் அன்னை ‘சென்னை’ யின் 380 ஆவது பிறந்த தினம் இன்று ! வாழ்த்துவோம் ..வாழ்வோம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Aug 2019 8:55 AM GMT


1978- ஆம் ஆண்டு வெளி வந்த ப்ரியா திரைப் படத்தில் ரஜினிகாந்த் அக்கரைச்சீமை அழகினிலே என்ற பாட்டைப் பாடிக் கொண்டே காரில் சவாரி செய்வார். அப்போது சிங்கப்பூரின் அழகிய சாலைகள், அடுக்கு மாடிக் கட்டிடங்கள், பிரம்மாண்டமான வணிக நிறுவனங்கள், மேம்பாலங்கள், மேலே பறக்கும் ரயில்கள், விமானங்கள், அணிவகுத்து செல்லும் கார்கள், விதம் விதமான உடைகளில் வேலைக்கு செல்வோர் என அனைத்தையும் தனது பாடலில் வருணிப்பார். ஆஹா அந்த காட்சியை நாம் காணும் போது நமது சென்னையும் சிங்கப்பூர் போல சிங்கார நகரமாக எப்போது காட்சி அளிக்கும் என நாம் கற்பனையில் மிதந்ததுண்டு.





ஆனால் அன்று நாம் கண்ட கனவு , சிங்கப்பூரை உவமை காட்டி ரஜினிகாந்த் பாடிய காட்சிகள் இன்று உண்மையாகிவிட்டன. இன்று சென்னை அன்றைய சிங்கப்பூரை விட ஏகப்பட்ட வளர்ச்சியைக் கண்டு மின்னும் அழகே..அழகுதான். வண்ண வண்ணமான நிறங்களில் அணிவகுத்து ஓடும் கார்கள்.... ஓங்கி உயர்ந்த அடுக்குமாடிக் கட்டடங்கள்... பரபரப்புடன் இயங்கும் பலமாடி வணிக நிறுவனங்கள்... மெய் மறக்க செய்யும் மேம்பால அழகின் வடிவங்கள் ..இரு புறமும் ஒழி உமிழும் செயற்கை ஆகாய விளக்குகள் .. மேலே பறக்கும் ரயில்களும் .. கீழே ஊர்ந்து செல்லும் பேருந்துகளும் இவை எல்லாம் நம்மை இன்று ஆச்சரியப்படுத்திப் பாக்க வைக்கிறது இன்றைய சென்னை... ஆனால், அமைதியின் வடிவாகத் திகழ்ந்தது .. இதே சென்னை ஒரு கால கட்டத்தில்!


வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து சிறு நிலத்தை வாங்கியது கிழக்கு இந்தியக் கம்பெனி. அதுவே 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் நாள் தனி நகரமாக உருவானது.


வெங்கடப்பா நாயக்கரின் தந்தையான சென்னப்ப நாயக்கரின் பெயரால் அழைக்கப்பட்ட அப்பகுதி சென்னை நகரமாகியது. இதற்கு முந்தைய பெயர் மதராஸ். சென்னப்ப நாயக்கரின் மற்றொரு உறவினரான மதராச நாயக்கரிடம் இருந்தும் நிலம் வாங்கப்பட்டதால் இந்த பெயரிலும் பல நூறு ஆண்டுகளாக அழைக்கப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில் இதே நாளில் கொண்டாடப்படுகிறது சென்னை தினம்.


அசாதாரணமான சம்பவங்கள், சரித்திர நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ள சென்னைதான் தமிழ்நாட்டின் தலைநகரம்...! பரந்து விரிந்த வங்காள விரிகுடாக் கடல் சென்னையின் முக்கியமான பெருமை. ஆசியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையாக கருதப்படும் மெரீனாவின் மணற்பரப்பு காண்போரை பிரமிக்க வைக்கிறது.


வாழவழியின்றி வருவோருக்கு தொழில், வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது சென்னை நகரம். நொடித்து போகும் தொழிலதிபர்களும் அதில் இருந்து மீண்டு வர நம்பிக்கை அளிக்கிறது இந்த மாநகரம்.


பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள், பறக்கும் ரயில்கள் இவையெல்லாம் நகரின் அனைத்துப் பகுதிகளையும் ஒன்றிணைக்கும் போக்குவரத்து சாதனங்கள். இவை தவிர சொந்த வாகனங்கள், தனியார் வாகனங்கள் என பல்லாயிரக்கணக்கில் இரவுபகலாக நகர் முழுவதும் வலம்வருவது அன்றாடம் நாம் காணும் காட்சிகள்...


கையேந்தி பவன் முதல் ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் எத்தனையோ இருந்தாலும், சென்னை மக்கள் தாங்கள் விரும்புவதை வீட்டிற்கு கொண்டு வந்து விநியோகிக்கும் ஸ்விக்கி, ஸொமேட்டோ, ஊபர் இவைகளை மறக்கவே முடியாது. இரண்டு மெயில் தூரத்தில் உள்ள ஓட்டலில் இருந்து இரண்டே இரண்டு போண்டாக்களுக்கு ஆர்டர் கொடுத்து ஓட்டல் விலையிலேயே உண்டு மகிழும் முதியவர்களுக்கு இன்று இந்த சென்னை தனக்கு ஊட்டிவிடும் அன்னையாகவே திகழ்கின்றாள்


ருசிதரும் தின்பண்ட விற்பனைக் கடைகள், தேநீர்க் கடைகள், குளிர்பானக் கடைகள், பழக்கடைகள் இவைகளுடன் குடிமகன்களின் அத்தனை தாகங்களையும் அடக்கும் வசதிகள் வாய்த்த சென்னையை யாராலும் மறக்க முடியாது.


பழமையின் சுவடுகள் மாறாமல் காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்து கொண்டு தற்போதும் கம்பீரமாய் நிற்கிறது.. சென்னை மாநகரம்...


தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்கள் சங்கமிக்கும் சென்னைக்கு வங்கக் கடலே எல்லை !


மொழிகள் பல பேசினாலும், கலாச்சாரங்கள் பல நம் கண்ணில் பட்டாலும், விதவிதமான உணவுகளை ருசித்தாலும், பல தரப்பு மக்களுக்கும் தாய் வீடாக விளங்கும் வானவில்தான் இந்த சென்னை நகரம்..!


தென்னிந்தியாவிற்கு எல்லா வகையிலும் வழிகாட்டும் சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள சென்னை நகரம், இன்று 380 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.


என்றாலும் சென்னையின் அழகுக்கும், சுற்றுச்சூழலுக்கும், பசுமைக்கும் அடையாளமாக திகழ்ந்த அழகுமிக்க கூவம் நதி இன்று அழுக்காக கிடக்கிறது. மழை நீரை கடல் நீருடன் கலக்காமல் செய்து சென்னையின் நிலத்தடி நீரை பாது காத்து நின்ற பக்கிங்க்ஹாம் கால்வாய் தனது முகவரியை இழந்து நிற்கிறது. ஏகப்பட்ட வற்றாத ஏரிகளையும், குளங்களையும் நம் வசத்திக்காக பலி கொடுத்துவிட்டோம்..


இனிமேலாவது தூய்மையையும், அமைதியையும் பேணிக்காத்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி அடுத்து வரும் சந்ததியிடம் நம் அழகிய சென்னையை அப்படியே ஒப்படைக்க வேண்டியது நம் சென்னைவாசிகளின் தலையாய கடமை..! உணர்ந்து செயல்படுவோம் .. ஒய்யராமாய் வாழ வைப்போம் நம் அன்னை சென்னையை !!


Next Story
கதிர் தொகுப்பு
Trending News