Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா..? கோவை என்.ஐ.ஏ. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆட்சேபகரமான நோட்டீசுகள்.!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா..? கோவை என்.ஐ.ஏ. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆட்சேபகரமான நோட்டீசுகள்.!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா..? கோவை என்.ஐ.ஏ. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆட்சேபகரமான நோட்டீசுகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Aug 2019 3:34 AM GMT


இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது தொடர் குண்டுவெடிப்பு நடந்ததில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜக்ரன் ஹசீம் என்ற பயங்கரவாதியுடன் கோவையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு இருப்பதை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கண்டறிந்தனர்.


இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி கோவையைச் சேர்ந்த 6 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் கோவையை சேர்ந்த முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகியோருக்கு தடை செய்யப்பட்ட இயக்கமான ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர்.


மேலும் இவர்கள் 2 பேரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பியதாகவும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்களையும் தேர்வு செய்ததாகவும் தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முகமது அசாருதீன் மற்றும் ஷேக் இதயத்துல்லா ஆகியோரை ‘உபா’ சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்தனர்.


இதற்கிடையில், கேரள மாநிலம் கொச்சியிலிருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் தலைமையில் 5 குழுக்களாக நேற்றுக்காலை 5.30 மணிக்கு கோவை வந்தனர். இதற்காக அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் இருந்து வாரண்டு பெற்று வந்தனர்.


அந்த வாரண்டை காட்டி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த உமர் பாரூக்(வயது 32), கோவை வின்சென்ட் சாலை வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்த சனாபர் அலி(24), அதே சாலையை சேர்ந்தச் சமேசா முபின்(27), உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த முகமது யாசின்(26), கோவை பள்ளி வீதியைச் சேர்ந்த சதாம் உசேன்(27) ஆகிய 5 பேர் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். கோவை மாநகர போலீசாரின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனை காலை 6 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நீடித்தது.


இந்த சோதனையில் ஒரு மடிக்கணினி, 5 செல்போன்கள், 4 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு, 8 சி.டி.க்கள் மற்றும் டி.வி.டி.க்கள் மற்றும் ஆட்சேபகரமான நோட்டீசுகளையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதைத்தொடர்ந்து 5 பேரையும் கோவை ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். அங்கு இரவு வரை விசாரணை நடந்தது.


இவர்களில் உமர் பாரூக் ஆட்டோ டிரைவர். சனாபர் அலி மார்க்கெட்டில் காய்கறி கடையில் வேலை செய்கிறார். சமேசா முபினும், சதாம் உசேனும் புத்தக கடையில் வேலை செய்கிறார்கள். முகமது யாசின் நாட்டு மருந்து கடையில் வேலை செய்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் 5 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்திருந்தனர். ஆனால் அவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை.


இலங்கை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கர வாதி ஜக்ரன் ஹசீம் என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன் மற்றும் ஷேக் இதயதுல்லா ஆகியோருடன் இவர்கள் 5 பேரும் தொடர்பில் இருந்தவர்கள் என்றும், முகமது அசாருதீன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் இந்த 5 பேரும் முகமது அசாருதீனோடு மட்டுமல்லாமல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்தார்களா? என்பதை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இவர்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டால் அடுத்த கட்டமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News